Monday, November 30, 2009

திருவண்ணாமலை வந்த காசி மகான் - யோகி ராம்சுரத்குமார்கங்கைக் கரையோரம் இருந்தது, அந்தப் பையனின் வீடு, பள்ளி நேரம் போக மீதி நேரங்களில், அந்தப் பையன் கங்கைக் கரையோரம் நடக்கின்ற சாதுக்களுக்குப் பின்னே ஓடுவான். அவர்கள் வட்டமாக உட்கார்ந்து பேசுகிற போது, அவர்கள் பேசுவதை கேட்பான். இரவு முழுவதும் அவர்கள் கடவுளைப் பற்றிய விஷயங்களை விவாதம் செய்வார்கள்.

விளைவு மிகச் சிறு வயதிலேயே அந்தப் பையனின் உள்ளத்தில் கடவுள் தேடுதல் என்ற விதை விழுந்தது. அந்தப் பையன் வீரிய வித்தாக இருந்தான். வளர்ந்து மிகப் பெரிய ஆலமரமானான். அந்த ஆலமரத்துக்கு “யோகி ராம்சுரத்குமார்” என்று பின்னால் பெயர் வந்தது. இயற்பெயர் ராம்சுரத்குன்வர். பள்ளிப் படிப்பில் படுகெட்டி. அவரது குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம். கங்கைக் கரையோரம் நல்ல விளைநிலங்கள் சொந்தமாக இருந்தன. விவசாய வேலைகள் அதிகம். ஆண்களும் பெண்களும் சேர்ந்து பாடுபட்டால்தான், அதில் லாபம் என்பது சிறிதளவு கிடைக்கும். எனவே உழைப்புக்கு அஞ்சாத குடும்பமாக இருந்தது. ஆனால், ராம்சுரத்குன்வருக்கு படித்து பட்டம் பெறுவதில்தான் ஆர்வம். அந்தக் குடும்பத்தில் வேறு எவரும் அப்படி ஈடுபாட்டுடன் இல்லாததால், குடும்பத்தினர் ராம்சுரத்குன்வரை உற்சாகப்படுத்தினர்.

அந்த கிராமத்திலேயே மகான் ஒருவர், தனியே வசித்து, கடவுள் சிந்தனையாக இருந்தார். கிராமத்தினர் அவரிடம் நல்லது கெட்டதுக்குப் போய் பேசிவிட்டு வருவர். ராம்சுரத்குன்வரும், கடவுளைப் பற்றிய கேள்விகளை அவரிடம் வைக்க... “இதற்கு நான் பதில் சொல்வதைவிட, நீ காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து வா, அப்போது புரியும்” என்றார்.

காசிக்கு பயணப்பட்டார் ராம்சுரத்குன்வர். விஸ்வநாதர் கோயிலை அடைந்து கை கூப்பினார். ‘எத்தனை மகான்களை தரிசித்த சிவலிங்கம். எத்தனை பேர் தொட்டு பூஜித்த இறைவடிவம். எத்தனை அரசர்களும், சக்ரவர்த்திகளும், அவதார புருஷர்களும் இங்கே நுழைந்திருக்கிறார்கள்; மண்டியிட்டு தொழுதிருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட புனிதமான இடம்.’. அவருக்கு மெய்சிலிர்த்தது.


இந்த புண்ணிய பூமியில் நானும் கால் வைத்திருக்கிறேன். நானும் இந்த சிவலிங்கத்தைத் தொடப் போகிறேன். எனக்குள்ளே இருக்கிற இந்த மனமானது, முழுக்க இந்த சிவலிங்கத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறது. அம்மா சொல்கின்ற அத்தனை கதைகளும் இங்கே நடந்திருக்கின்றன. இந்த இடத்திலே பல அவதார புருஷர்கள் நின்றிருக்கிறார்கள் என்ற தவிப்புடன் அந்த சிவலிங்கத்தைத் தொட, அதிர்ச்சியாக மிகப் பெரிய மாறுதல் ஒன்று ஏற்பட்டது. இறை தரிசனம் என்பது கடுமையான உழைப்பில், மும்முரமான முனைப்பில் வருவது அல்ல. ‘அதுவே தன்னைக் காட்டினால் ஒழிய அதைப் புரிந்து கொள்ள முடியாது’ . இறையே விரும்பித் தொட்டால் ஒழிய, இறை எது என்பதை அறிய முடியாது. அந்த இளம் வயதில் ராம்சுரத்குன்வருக்கு, அற்புதமான இறை தரிசனம், அவர் கேட்காமல் இறைவனால் அவருக்குத் தரப்பட்டது.

இது என்ன... இந்த அதிர்ச்சி, உள்ளுக்குள்ளே தெரிந்த வெளி, இந்த மயக்கம்... இந்தத் தவிப்பு... இந்த ஆனந்தம் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அவற்றை வார்த்தையாக்கி வேறு எவருடனும் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை. இங்கே... இந்த அற்புதமான கோயிலில் அந்த மூர்த்தியைத் தொட்டபோது ஒரு மிகப் பெரிய மாறுதல் ஏற்பட்டதே, அப்படி மற்ற இடங்களிலுள்ள மூர்த்திகளைத் தொடும் போதும் ஏற்படுமோ?. உள்ளுக்குள் கேள்வி எழ, ஊர் சுற்றிப் பார்க்க ஆவல் ஏற்பட்டது. ஆனால், வீட்டார் அவரை வேறு விதமாக வளைத்தார்கள். திருமணத்துக்கு வற்புறுத்தினார்கள். கடைசியில், அவரால் மறுக்க முடியமால் போனது.

மனைவியின் பிறந்த வீடு சுபிட்சமாக இருந்தது. எனவே, படிக்க ஆசைப்பட்ட ராம்சுரத்குன்வருக்கு மனமுவந்து உதவி செய்தது. ராம்சுரத்குன்வர் காசி சர்வ கலாசாலையில் தொடர்ந்தார். பட்டப்படிப்பு முடித்தார். படித்த ஆங்கில இலக்கியமும், அவருக்கு கடவுள் தேடலில் அதிகம் உதவி செய்தது. அதற்குள் சில குழந்தைகளுக்கு அவர் தந்தையானார். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கவும், மனைவிக்கு உதவி செய்யவுமே வாழ்க்கையின் பெரும் பகுதி போயிற்று. ஆனால், அடி மனதில் இடையறாது காசி தேசத்தில் ஏற்பட்ட அந்த அதிர்ச்சியும், அதுபோல வேண்டுமென்ற ஆவலும், அதைத் தேடுகின்ற குணமும் இருந்தன. இன்னும் சற்று வயதான பிறகு, கடவுள் தேடலை வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. கூடவே, கடவுள் தேடலை கடைசி வரை செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற கவலையும் இருந்தது. உண்மையான ஒருவனுக்கு, கடவுள் தேடலும் குடும்ப பாரமும் இடையறாது தொந்தரவு கொடுத்துக் கொண்டேதான் இருக்கும்.
கடவுளை நோக்கி நகரும் போது குடும்பம் இழுக்கும். குடும்பத்தையே சுற்றி வரும்போது கடவுள் நினைப்பு இழுக்கும். நல்ல மனிதனின் இடையறாத போராட்டம் இது. சரியான உறக்கத்தை கொடுக்காது; திடுக்கிட்டு எழ வைக்கும். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது இது தான்! அவர் இவை இரண்டுக்குமான வேதனையில் தவித்தார். பிரியமான மனைவி; அற்புதமான குழந்தைகள்; நல்ல மாமனார் வீடு; சுகமான தாய்-தந்தை, ஆயினும் கடவுள் என்பது வேறு இடத்தில், வேறு எங்கோ இருப்பதாக அவருக்குத் தோன்றியது.

பட்டப் படிப்பு முடித்த ராம்சுரத்குன்வருக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. பழைய பள்ளிக் கூடம் ஒன்றை, முழுவதுமாகத் தூக்கி நிறுத்த வேண்டிய சந்தர்ப்பம். அந்தக் பள்ளிக்கூடத்துக்கு அடிப்படையான வசதிகள் எதுவும் இல்லை. கரும்பலகையோ, மேஜையோ, நாற்காலியோ, மாணவர்கள் உட்கார்ந்து படிக்க காற்றோட்டமான இடமோ எதுவுமில்லை. விரிசல் விட்ட சுவர்கள், ஒழுகும் ஓடுகள் என்று சிதிலமாக இருந்தது. அவர் நிர்வாகத்திடம் முறையிட, ‘இது போதும்’ என்று நிர்வாகம் அலட்சியப்படுத்த, அந்தப் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து பையன்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார். பள்ளிக்கூடம் சரியாகும்வரை வரத் தேவையில்லை என்று கட்டளையிட்டார்.

நிர்வாகம் எகிறியது. ஆனால், இவர் விடாப்பிடியாக நின்றார். ஊர்மக்கள் ஒன்று கூடி நிர்வாகத்திடம் பேச, ஊரும் நிர்வாகமும் ஒன்று சேர்ந்து பள்ளிக்கூடத்தை நிமிர்த்தியது. ராம்சுரத்குன்வர் போராடி வெற்றி பெற்றார். இந்த விஷயம் அவரை உற்சாகப்படுத்தியது. எந்த ஒரு விஷயத்தை வெற்றி கொள்ள வேண்டுமென்றாலும் அதை நோக்கி முனைப்பாகவும், வேகமாகவும், விடாப்பிடியாகவும், உண்மையோடும், உறுதியோடும் இருக்க வேண்டும் என்பது புரிந்தது. இதைத்தான் கடவுள் தேடலிலும் கைக்கொள்ள வேண்டும் என்று அவர் புரிந்து கொண்டார்.

பள்ளிக்கூடம் நடக்கத் துவங்கியது. சிறிய வருமானம்;ஆனாலும், வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்தது, சிறிது காசு சேர்த்தால், கோடை விடுமுறையில் ஊர் சுற்றலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது. தெற்கே சாதுக்களும், மகான்களும் அதிகம்... அப்படிப் போவதுதான் நல்லது என்று உணர்த்தப்பட்டது. திருவண்ணாமலை.. பகவான் ஸ்ரீரமண மகரிஷி, ஸ்ரீ அரவிந்தர் என்ற பெயர்கள் அவருக்குச் சொல்லப்பட்டன. அவ்வாறே, தெற்கே போக ரயில் ஏறினார். டிக்கெட்டையும் பணப்பையையும் பத்திரமாக வைத்துக் கொண்டார். ஆனால், மூன்று ரயில் நிலையங்கள் தாண்டுவதற்குள் டிக்கெட்டும், பணப்பையும் காணாமல் போயின! பதறிப் போய் நான்காவது ரயில் நிலையத்தில் கீழிறங்கினார்.

என்ன செய்வது? ரமண மகரிஷியைத் தேடிப் போவதா.. அரவிந்தரை நோக்கிப் போவதா.. மெளனமாக வீடு திரும்புவதா? ஆரம்பித்த காரியம் சுணங்குகிறதே. ஏன் இப்படி? கடவுள் தேடலை கடவுளே விரும்பவில்லையோ?

தயங்கினார்; குழம்பினார்.

எது தடுத்தாலும், எவர் தடுத்தாலும் ஸ்ரீரமணரை நோக்கிப் போவேன் என்ற பிடிவாதம், வைராக்கியம் உள்ளே ஏற்பட்டது. ஆனால், டிக்கெட் இல்லாமல் பயணிக்க விரும்பவில்லை. அங்கு உள்ள பள்ளிக்கூடத்துக்குப் போய், ஆசிரியரிடம் கை கூப்பினார். தனது நிலைமையைச் சொன்னார். ஆசிரியர் அவரை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த, அந்த மாணவர்கள் எதிரே ஆசிரியர் ராம்சுரத்குன்வர் கைகூப்பி, தன் நிலையைச் சொல்லி, பள்ளி மாணவர்கள் உதவினால் அதை வைத்து, பயணச்சீட்டு வாங்கி தொடர்ந்து பயணம் மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். காலணா, அரையணா, இரண்டணா கொடுத்து அவரை ரயிலேற்றி அனுப்பினார்கள்.

யார் கையேந்தி கேட்கிறார்களோ, அவர்களுக்கே கடவுள் தன்மை இடப்படும். எனவே, கையேந்திக் கேட்கின்ற பணிவை முதலில் கொள்ள வேண்டும். தான் ‘ஆசிரியர்’ என்ற அகந்தையைத் தூக்கி எறிந்து, அந்த மாணவர்களிடம் மெள்ள கை கூப்பிக் கெஞ்சிய ராம்சுரத்குன்வருக்கு புதிய பாதை திறந்தது. கடவுள் தேடுதலுக்கு முதல் படியான கர்வம் அழித்தல் அங்கே தானாக, இயல்பாக நடந்தது. ஆசிரியர் என்ற அலட்டலில் இருந்து விடுபட்டு, யாரிடம் அவர் அதிகாரம் செலுத்த முடியுமோ அந்த மாணவர்கள் கொடுத்த காசைக் கொண்டே தன் கடவுள் தேடலைத் தொடர்ந்தார். ரயில் திருவண்ணாமலை வந்தடைந்தது.

ஸ்ரீரமண தரிசனம் அற்புதமாக அமைந்தது. இவரே! இவரே! என் குரு என்ற மிகப் பெரிய கேவல் எழுந்தது. அதே நேரம் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றி அறிந்து, பாண்டிச்சேரியை நோக்கி பயணப்பட்டார். ஆனால் அவரை தரிசிக்க முடியவில்லை, ஆனாலும், சூட்சுமமாக அரவிந்தர் தரிசனம் கிடைத்தது. மறுபடி திருவண்ணாமலை வந்தார்.ஊருக்குப் போக எண்ணம் எழுந்தது. மறுபடியும் ரயில் ஏறினார். மீண்டும் இல்வாழ்க்கை நடத்த வேண்டி இருக்கிறதே என்ற கலக்கம். கடவுளைத் தேடுபவர் வெளியே அலைய அலையத்தான் உள்ளுக்குள் போகமுடியும். வெளியே கடவுள் இல்லை; உள்ளே தன் உள்ளத்தில் இருக்கிறார் என்பதை, அலைந்ததுதான் தெரிந்து கொள்ள முடியும்.

அடுத்த விடுமுறையில் வடக்கே பயணப்பட்டார். இமயமலைச் சரிவுகளில் அலைந்தார். அதே நேரம் திருவண்ணாமலையில் ஸ்ரீரமண மகரிஷி முக்தியடைந்தார்; பாண்டிச்சேரியில் அரவிந்தர் மறைந்தார் என்பது தெரிய வர, இடிந்து போனார். அற்புதமான இரண்டு ஞானிகளுடன் நெருங்கி இல்லாமல், மறுபடியும் குடும்ப பாரம் இழுக்க வந்தேனே.. என்று கவலைப்பட்டார்.

அப்போது பப்பா ராம்தாஸ் என்ற பெயர் காதில் விழுந்தது. மங்களூருக்கு அருகில் கஞ்சன்காடு என்ற இடத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டார். அவரை இழக்க விரும்பவில்லை. எனவே ராமதாஸை நோக்கி விடுமுறையில் பயணம் துவங்கினார். ராமதாஸரின் ஆஸ்ரமத்தில் தங்கினார். பப்பா ராமதாஸ் அவருக்கு ராம நாமம் உபதேசித்தார். “இடையறாது ராம நாமம் சொல்” என்றார். ராம்சுரத்குன்வர் குருவின் கட்டளையை மீறவில்லை. ராம நாமம் அவருக்குள் மிக விரைவிலேயே மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரின் உள்ளொளி விகசித்துப் பொங்கியது. உடுப்பதும் உண்பதும் கூட மறந்து, ராம நாமம் சொல்வதே வேலையாக இருந்தது.

உள்ளுக்குள் ராம நாமம் பொங்க, எந்த நியதிக்கும் அவரால் கட்டுப்பட முடியவில்லை; எதுவும் புலப்படவில்லை. அவர் தன்வசம் இழந்தவராக, சின்மயமானவராக எல்லா இடத்திலும் இருப்பவராக உணர்ந்தார். ஆனால், பொது வாழ்க்கையில் இந்த நிலை பித்து என்று வர்ணிக்கப்படும். பைத்தியக்காரன் என்ற பட்டப்பெயர் கிடைக்கும். அதனால் ராம்சுரத்குன்வருக்கும் இப்படி பட்டப்பெயர் கிடைத்தது. அதனால், ராம்சுரத்குன்வர் ஆஸ்ரமத்தில் இருந்து மென்மையாக வெளியேற்றப்பட்டார்.

உன்மத்த நிலையோடே வீடு வந்தார். வீடு அவரை விநோதமாக பார்த்தது. மனைவி கவலையானார். அவரை சரியான நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால் உன்மத்தம் அதிகமானது, கிராமத்தின் மரத்தடிகளில் அமர்ந்து வேலைக்கு போகாமல் திரும்பத் திரும்ப ராம நாமமே சொல்லிக் கொண்டிருந்தார். தன்னந்தனியே கங்கைக்கரையோரம் திரிந்து கொண்டிருந்தார்.
உணர்தல் என்ற விஷயமே கடவுள் தேடல் விஷயம். தன்னை உணர முற்படுகிறபோது இது பிரமாண்டமாக விரிவடைகிறது. எல்லா இடங்களிலும் அது நீக்கமற நிறைகிறது. அப்போது அவருக்கு, தான் என்ன செய்கிறோம் என்கிற நினைப்பு இல்லை. இந்த உலகாயதமான மரியாதைகள் அவருக்குத் தெரியவில்லை. அவர் தனக்குள் பேசியபடி தன்னையே பார்த்தபடி இருக்கிறார். தன்னை உற்றுப் பார்ப்பவருடைய அவஸ்தை மற்றவரைப் பார்க்க விடுவதில்லை. தனக்குள் உள்ள அந்த ‘தான்’ என்பதை அனுபவிக்கிற போது வேறு எதுவும் மனதுக்குப் புலப்படுவதில்லை. இதுவொரு கலக்கமான நேரம். கலங்கியதுதான் தெளியும். விரைவில் தெளிந்தது. மிகப்பெரிய உண்மை ஒன்று எளிதில் புலப்பட்டது. அவர் குடும்பத்தை விட்டு மறுபடியும் திருவண்ணாமலை நோக்கிப் பயணப்பட்டார்.

திருவண்ணாமலைக்கு வந்து இறங்கினார். அங்கு ஒரு புன்னை மரத்தடியில் இடையறாது இறை நாமம் சொல்லி வந்தார். அதற்குப் பிறகு அவர் குடும்பத்தை நோக்கிப் போகவே இல்லை; கட்டு அறுந்து போயிற்று; கடவுளோடு பிணைப்பு உறுதியாயிற்று.

10 comments:

said...

நன்றி கிருஷ்ண துளசி.
யோகி ராம் சூரத்குமரா
யோகி ராம் சூரத்குமரா
ஜெய குரு ராய
யோகி ராம் சூரத்குமரா
யோகி ராம் சூரத்குமரா
ஜெய குரு ராய
" நல்ல மனிதனின் இடையறாத போராட்டம் "
படித்தேன் . மிகுந்த நன்றி.
வணங்கி மகிழ்கிறேன்.
நமஸ்காரங்கள்.
அன்புடன்
ஸ்ரீனிவாசன்.

said...

big salute for you.

may yogi bless you.

thanks for this article.

like this only we expecting.

said...

////தன்னந்தனியே கங்கைக்கரையோரம் திரிந்து கொண்டிருந்தார்.
உணர்தல் என்ற விஷயமே கடவுள் தேடல் விஷயம். தன்னை உணர முற்படுகிறபோது இது பிரமாண்டமாக விரிவடைகிறது. எல்லா இடங்களிலும் அது நீக்கமற நிறைகிறது. அப்போது அவருக்கு, தான் என்ன செய்கிறோம் என்கிற நினைப்பு இல்லை. இந்த உலகாயதமான மரியாதைகள் அவருக்குத் தெரியவில்லை. அவர் தனக்குள் பேசியபடி தன்னையே பார்த்தபடி இருக்கிறார். தன்னை உற்றுப் பார்ப்பவருடைய அவஸ்தை மற்றவரைப் பார்க்க விடுவதில்லை. தனக்குள் உள்ள அந்த ‘தான்’ என்பதை அனுபவிக்கிற போது வேறு எதுவும் மனதுக்குப் புலப்படுவதில்லை.//

மெய்மறந்தேன்.

உங்கள் பதிவு என்னை பக்தியில் ஆழ்த்தியது. மிக்க நன்றி.

said...

பகிர்தலுக்கு மிக்க நன்றி! வணங்கி மகிழ்கிறேன்!!

said...

யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுருராயா!

குருவே நமஹ!

இனிமையான இல்வாழ்க்கை, இயல்பாய் கிடைத்த இறை அனுபவம் இப்படி தொடங்கும் நம் சத்குருவின் ஆன்மீக பயணம் இல்வாழ்க்கையின் இடர்பாடுகளுக்கு இடையேயும் வெற்றிகரமாக நடந்தது, அவரின் விடாமுயற்ச்சியையும், கடவுள் தேடலில் அவர்க்கிருந்த இணையில்லா ஈடுபாட்டையும் காட்டுகிறது.நாம் செய்யும் ஒவ்வொரு வேலையையும் இதே விடாமுயற்சியுடனும் ஈடுபாட்டுடனும் செய்தால் அவ்வேலை சிறப்பாக அமையும் என்பதை குரு நமக்கு கோடிட்டு காட்டுகிறார். கர்வம் அழித்தல், கேட்டால் மட்டுமே கிடைக்கும். தன்னை உண்ர்தலே கடவுள் தேடல், களங்கியது தான் தெளியும் என்ற கருத்துக்கள் அருமை குருவுக்கு நன்றி சத்குருவின் புகைப்படங்கள் அருமையாக இருந்தன.சத்குருவை பற்றி மேலும் பல புதிய தகவல்களை படிக்க ஆனந்தமாக இருந்தது.ஆன்மீக 'வலை'வரிசையில் இவ்வலை பூ ஆன்மீக வாசம் வீசும் ஒரு அருமையான பூ. ஆன்மீக தகவல்களும் சத்குருவின் ஆசிர்வாதங்களும், குருவின் அறிவுரைகளும் கிடைக்கும் ஒரு அற்புத வலைதளம்.குருவே நமஹ!.

பகிர்தலுக்கு நன்றி

என்றும் அன்புடன்
பாபு
சிங்கபூர்

said...

"உண்மையான ஒருவனுக்கு, கடவுள் தேடலும் குடும்ப பாரமும் இடையறாது தொந்தரவு கொடுத்துக் கொண்டேதான் இருக்கும்.
கடவுளை நோக்கி நகரும் போது குடும்பம் இழுக்கும். குடும்பத்தையே சுற்றி வரும்போது கடவுள் நினைப்பு இழுக்கும். நல்ல மனிதனின் இடையறாத போராட்டம் இது. சரியான உறக்கத்தை கொடுக்காது; திடுக்கிட்டு எழ வைக்கும். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது இது தான்"

"யார் கையேந்தி கேட்கிறார்களோ, அவர்களுக்கே கடவுள் தன்மை இடப்படும். எனவே, கையேந்திக் கேட்கின்ற பணிவை முதலில் கொள்ள வேண்டும். தான் ‘ஆசிரியர்’ என்ற அகந்தையைத் தூக்கி எறிந்து, அந்த மாணவர்களிடம் மெள்ள கை கூப்பிக் கெஞ்சிய ராம்சுரத்குன்வருக்கு புதிய பாதை திறந்தது. கடவுள் தேடுதலுக்கு முதல் படியான கர்வம் அழித்தல் அங்கே தானாக, இயல்பாக நடந்தது"

கண்முன்னே கைபிடித்துசெல்லும் வித்தையை செய்கிறது இந்த வரிகள் .. உள்ளும் புறமும் சதா வேண்டுதலின்றி வேறென்ன்ன தரும் இத்தகைய பணிவை... அனுபவத்தை...நன்றி..

said...

Now only Bhagavan Yogiramsuratkumar showed me this website. Im so happy to read all about Bhagavan. may i know babu who is in singapore bcx Im also in Singapore. I dont know any Bhagavans devotees in Singapore. raje.

said...

Im extreamly happy to come know about this website. Im very happy to see balakumaran appas writings. Thank you for helping us to see and read about Bhagavan Yogi Ramsurat Kumar.raje ,singapore.

said...

நான் வணங்கும் பகவான் யோகிராம் சுரத் குமார் அவர்கள் குறித்த உங்கள் பகிர்வை படித்தேன். அருமை.

said...

மிக நல்ல பதிவு உண்மையிலேயே அற்புதமான ஒன்று. எனக்கு இந்த பதிவின் மூலம் ஒரு நல்ல தெளிவு பிறந்துள்ளது நன்றி என் மனமார்ந்த நன்றி