Friday, April 30, 2010

வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள்.

‘நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் நல்ல ஆர்வம் இருக்கிறது.

இதற்கு ஊடகங்கள் ஒரு காரணம் எனினும், “நான் ஹவுஸ் வைப்”,எனக்கு என்ன தெரியும்?” என்ற பேச்சுகளும், கிராமத்தில் இருக்கிறவர்களிடம், ‘எங்களுக்கு இவ்வளவுதான் தெரியும்’ என்கிற குரல்களும் எழாமலில்லை.

தெரிந்து கொள்வது என்பதில் மக்களுக்கு ஆர்வம் அதிகமானால்தான் பலம் மிகுந்த ஒரு சமுதாயம் உருவாக முடியும்.

முகவாயில் கை வைத்து வியப்போடு உட்காரும் மனிதர்கள் இப்போது அதிகம் இல்லை. மாறாய்,என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்பது பற்றிய அறிவு பரவலாக இருக்கிறது. பாண்ட்-சட்டை போட்டவர்கள் அதிசயமானவர்கள், செருப்பு போட்டவர்கள் சீமான்கள் என்று இருபது வருடம் முன்பு நம் தேசத்தில் பல பாகங்களில் இருந்தது.

இப்போது அப்படி இல்லை. நன்கு நறுவிசாய் உடுத்திக்கொள்ளப் பலருக்குத் தெரிகிறது.மிக வேகமாய் வணக்கத்துடன் முகமன் சொல்ல பலபேர் கற்றிருக்கிறார்கள்.

என் இளம் வயதில் வணக்கம் சொன்னால் வெட்கப்பட்ட பெண்களையும், ‘எனக்கா வணக்கம்’ என்று வியக்கின்ற ஆண்களையும் நான் சந்தித்திருக்கிறேன். இப்போது பதில் வணக்கம் சொல்லாவிட்டால் சிறுவர்கள்கூட மதிப்பதில்லை. விலகிப் போய்விடுகிறார்கள்.

ஆனால்,காலம் நகர நகர...வணக்கம் மட்டும் அறிதலாகி விடாது. பாண்ட்-சட்டை மட்டுமே நாகரிகத்தின் அடையாளமாகி விடாது. சுற்றியுள்ள உலக விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதுதான் ஒருவருக்கு மதிப்பையும், மரியாதையையும் கொடுக்கும். ஒன்றும் அறியாத பெண்களை, உளறலான ஆண்களை சமூகம் மதிப்பதில்லை.

எனவே,அறிதலில் ஆர்வம் காட்டுவதுதான் நாகரிகம். உடையலங்காரம், மேனி எழிலலங்காரம் தான் நாகரிகம் என்பதில்லை. அறிவுதான் உண்மையான அலங்காரம்.சிறப்பான அழகு.

‘என்ன அறிதல்?’ என்ற கேள்வி உடனடியாக எழும்.இதற்கு பதிலும் உடனடியாகத் தரமுடியும். அறிதலுக்கு எல்லையே இல்லை. எல்லாமும் அறிதல் என்றுதான் பதில் சொல்ல முடியும்.

எதிர்வீட்டு தாத்தாவிற்கு மாரடைப்பு. குடிப்பதற்கு ‘ஐஸ் வாட்டர்’ கேட்கிறார்கள். உங்களிடம் இருக்குமா’ என்று வந்தால், பதறி எழுந்திருந்து, ‘ஐஸ் வாட்டரா? குடிக்கவா. அதிகம் கொடுக்கக்கூடாது’ என்று பதில் சொல்வது தான் அறிதல்.

‘மூணு ஸ்பூன் மட்டும் கொடுங்கள். தொண்டை நனையட்டும்,நெஞ்சில் வலி இருக்கும்போது தண்ணீர் நிறைய கொடுப்பது நல்லதல்ல.உடம்பை ஈரத்துணியால் துடைத்து விடுங்கள். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துப்போங்கள். ஒன்றுமில்லை, சரியாகிவிடும் என்று கிழவரை ஆசுவாசப்படுத்துங்கள். கலவரப்படுத்தாதீர்கள்’ என்று சொல்லியபடியே எதிர்வீட்டிற்கு ஓடி, அப்படி மாரடைப்பு ஏற்பட்டால், நாவிற்கு அடியில் வைத்துக்கொள்கிற ‘ஐஸாட்ரில்’ மாத்திரை இரண்டு கொடுத்து, மெதுவாக தூக்கி வந்து ஒரு காரில் ஏற்றி, எத்தனை விரைவில் மருத்துவமனையில் சேர்க்கிறோமோ அத்தனை உதவி அந்தக் கிழவருக்கு என்பதை உதவி செய்பவர் ஆணானாலும், பெண்ணானாலும் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

நன்கு படித்த ஒர் இளைஞன் இம்மாதிரி நெஞ்சுவலியில் அவஸ்தைப்பட்டவருக்கு நாவிற்கு அடியில் மாத்திரை வைக்க வேண்டும் என்றபோது, பல்லிறுகித் தவித்தவரின் வாயைப் பிளந்து,அவர் வாய்க்குள் நாற்பது மாத்திரையை கொட்டினான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

“இரண்டு வைச்சா போறுமா.கூட கொடுத்தா நிச்சயம் பிழைச்சுடுவாரோ அப்படிங்கிற பயத்துல பண்ணினேன்”. என்று பின்னால் அவன் சொன்னான். அந்த நிர்மூடத்தனம் மிகக் கடுமையாக அவனுக்கு இடித்துரைக்கப்பட்டது. மரண பரியந்தமும்,அந்த விஷயத்தை நினைக்கும் போது அந்த இளைஞனுக்கு துக்கம்தான். முட்டாள்தனம் ஒரு உயிரைப் பறித்தது வருத்தம் தான்.

சமூக விஷயங்களை அறிவது மட்டுமல்ல... ஒரு குழந்தை தாயை கேள்வி கேட்கும்,”கடவுள் என்றால் என்ன?” என்று, அதற்கு பதில் சொல்ல ஒரு தாய்க்கு தெரிந்திருக்க வேண்டும். ‘ இன்னொரு தடவை இந்த மாதிரி கேட்டா, பளீர்னு அடிப்பேன்’என்று ஒரு தாய் பதில் சொன்னால் அல்லது தகப்பன் முறைத்தால், அறியாமை பின்னால் எள்ளி நகையாடப்படும். அந்த குழந்தையே விவரித்து கேவலப்படுத்தும்.

இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களைவிட அதிகம் விஷயம் தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இணையாக அவர்களைவிட அதிகமாக செய்திகள் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் பெற்றோர்களுக்கு ஏற்படுகிறது.

“இதுல ‘ஹைட்ரஜன் பெராக்சைட்’னு போட்டிருக்கே. இது ஆசிட்டா” அம்மா கேட்டாள்.

“இல்லை.அது சுத்தம் செய்வதற்குண்டானது. தண்ணீரில் வேகமாகக் கரைந்துப் போகும். நக இடுக்கில் அழுக்கிருந்தால் இரண்டு சொட்டுவிட்டால் போதும், நுரைத்துக் கொண்டு அழுக்கை வெளியே கொண்டு வந்துவிடும்”. பிள்ளை சொல்ல, அம்மா வியந்தாள்.

“எப்படி தெரிந்தது,உனக்கு”

“பள்ளிக்கூடத்தில் முதலுதவி சிகிச்சை வகுப்பின்போது இம்மாதிரி நிறைய சொல்லிக் கொடுத்தார்கள். காயம்பட்ட இடத்தைக் கழுவி மருந்து போட எனக்குத் தெரியும். நானே நேரடியாக செய்தேன்.”

அரிவாள்மனை வெட்டிய காயத்தை பிள்ளை சுத்தம் செய்து கட்டு போட, கண்ணில் நீர் துளிக்க அம்மா அவனைப் பார்த்து வியப்பாள். ‘இது டாக்டராகிடுமோ. பெரிய அறுவை சிகிச்சை நிபுணனாகிவிடுமோ?’ என்று ஆசையோடு பார்ப்பாள். இன்னும் என்னவெல்லாம் தெரியும் என்று அறிந்து கொள்ள பரபரப்பாள்.

மார்ட்டின் லூதர்கிங் பற்றியும், இராஜராஜசோழனுக்கு சதய நட்சத்திரம் என்றும், ராபர்ட்கிளைவிற்குத் திருமணமான இடம் பற்றியும், கில்லடின் என்கிற கொலை கருவி பற்றியும் மகனும், மகளும் மாறி மாறி சொல்ல... வியந்து பார்ப்பாள்.

இது வெறும் படிச்சுட்டு ஒப்பிக்கிற பிள்ளை இல்ல. வேற என்னமோ ஒரு தேடல் இருக்கு என்று அதைக் கொண்டாடும் விதமாக அம்மா குதூகலமாக வாழ்வாள். அதிகம் அக்கறை எடுத்துக் கொள்வாள்.

ஸ்கூட்டரில் கணவனும், மனைவியும் நண்பர் வீட்டிற்குப் போவார்கள். நண்பர்கள் வீட்டின் விலாசம் இருக்கிறது. விசாரித்துக் கொண்டே போய், தவறான வழிகாட்டிதலில் வேறு இடத்திற்கு வந்துவிட்டார்கள்.

“இப்படியே திரும்ப வேண்டும். எந்த இடத்தில் விசாரித்தோமோ அங்கேயே ஆரம்பிக்க வேண்டும். ‘இந்த இடத்தில்தானே இடதுபக்கம் திரும்ப வேண்டும்”, என்று கணவன் கேட்க, மனைவி முழிப்பாள்.

“உன்னைத்தான் கேட்கிறேன். இங்கு விசாரித்தோம். இந்த இடத்தில்தானே திரும்பினோம். நீயும்தானே பின்னால் இருந்தாய். இந்த இடம் நீ பார்க்கவில்லையா”

“இல்லை, நான் பார்க்கவில்லை”, என்று மனைவி சொல்வாள். ஸ்கூட்டருக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு எங்கே போகிறோம் என்று தெரியாமல் ஒருவர் வருவார்களென்றால் அவர்களுக்கு புத்தி போதாதென்றே அர்த்தம்.

“விசாரித்தபோது எதிரே பேக்கரி இருந்தது. இப்ப இல்ல. பின்பக்கம் புடவை கடை இருந்தது. புடவை கடைக்கு என்ன பெயர் தெரியுமா? கொஞ்சம் இருங்க” என யோசித்து, “அது கலைவாணி ஜவுளி மாளிகை. அங்கேயிருந்து பத்து வீடு தள்ளி நாம இடதுபக்கம் திரும்பினோம். இடது பக்கம் திரும்பி இருக்கக்கூடாது. வலதுபக்கம் திரும்பி இருக்கணும். அவன் நமக்கு எதிரே நின்னு இடதுபக்கம் திரும்புன்னு சொல்லிட்டான்.நாம நேர போய் இடதுபக்கம் திரும்பிட்டோம்.அவனுக்கு இடதுபக்கம்னா, நமக்கு வலதுபக்கமில்லையா”

இப்படி பின்னால் உட்கார்ந்து மனைவி சொன்னால் கணவனுக்குக் குதூகலம் ஏற்படும்.

“முன்னமே சொல்லி இருக்கலாமே”

“விட்டுட்டேன். இனிமே விடமாட்டேன். போங்க நான் கண்டுப்பிடிச்சுத் தரேன். வலது பக்கம் திரும்பிட்டீங்களா. அப்புறம் மறுபடியும் இடதுபக்கம்னான். அது இடது பக்கம் இல்ல, வலதுபக்கம். இன்னொரு வலதுபக்கம் திரும்புங்க, பள்ளிக்கூடம் வந்துருச்சா, பள்ளிக்கூடத்திற்கு அடுத்தது போலீஸ் குடியிருப்பு. போலீஸ் குடியிருப்புக்கு அடுத்த வீடுதான்னு சொன்னாங்க. இந்த வீடாகத்தான் இருக்கும்.பாருங்க வாசல்ல... அவரு பேருதான் போட்டிருக்கு”, என்று வீடு கண்டுபிடிக்க, உதவி செய்வரின் மனைவி மீது மிகப்பெரிய நன்மதிப்பு ஏற்படும்.

விவசாயியாக இருந்தால், விவசாயம் பற்றித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா. வேறு எதுபற்றியும் தெரிந்து கொள்ளக்கூடாதா? பிராணாயாமம், யோகாசனம், தியானம் ஆகியவற்றை விவசாயி செய்தால் கேலிக்குரிய விஷயமா.

சில பெண்களை தினமும் நாலு கிலோமீட்டர் நடக்கச்சொன்னால், ‘நாங்கள் வீட்டுக்குள்ளேயே பத்து கிலோமீட்டர் நடக்கிறோம்’ என்று சிரிப்போடு சொல்வார்கள்.

அது உதவாதப் பேச்சு, வியர்க்க விறுவிறுக்க இரண்டு கிலோமீட்டர் போய், இரண்டு கிலோமீட்டர் திரும்பி வருவது உடம்புக்கு மிகப்பெரிய ஆரோக்கியம். என்னதான் மாடு கட்டி இழுத்தாலும், உட்கார்ந்து கையால் இட்லிக்கு மாவரைத்தாலும், உடலின் எல்லா பகுதிகளும் சமமாய் வேலை கொடுக்கும் யோகாசனம் மிக அவசியம்.

மூச்சுப் பயிற்சி மூளையை குளுமையாக்கும், கண்களைக் கூர்மையாக்கும். உடம்பில் படப்படப்பை குறைத்து, நிதானத்தைக் கொண்டு வரும். தியானமும், யோகாசனமும் பட்டணத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் உரிதானவை என்று நினைப்பது பேதமை. எல்லா கிராமத்து பெண்களும் யோகாசனம் செய்ய வேண்டுமென்பது என்னுடைய விருப்பம்.

வெட்கத்தின் காரணமாகவும், நமக்குத் தேவையில்லை என்கிற அறியாமை காரணமாகவும் நல்லதொரு விஷயத்தை கிராமத்து பெண்கள் புறக்கணிக்கிறார்கள். உடல் என்பதில் கூர்மை உள்ளவர்கள், முனைப்பு உள்ளவர்கள் வெகுநிச்சயம் யோகாசனம் கற்றுக்கொள்வார்.

செய்திப் பத்திரிகைப் படிப்பது என்பது ஒரு நல்ல வேலை. தொலைக்காட்சிப் பெட்டியைவிட, தினசரிகளிலேயே செய்திகள் தெளிவாக வருகின்றன. தலையங்கங்கள் சார்பாக இருந்தாலும், நல்ல விவாதத்தை ஆரம்பித்து வைக்கின்றன, அதையும் தாண்டி பொதுநலக் கட்டுரைகள் வருகின்றன, படிப்பது என்ற பழக்கம், விஷயங்களை அதிகம் அறிந்துகொள்ள உதவும்.

மாணவர்கள் செய்திப் பத்திரிகைப் படிக்க வேண்டும். இளைஞர்கள் வளமான, நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும். நாத்திகத்தின் ஆதரவாகவும்,ஆத்திகத்தின் ஆதரவாகவும் இரண்டு வகையான புத்தகங்களையும் படிக்க வேண்டும். தந்தை பெரியார் எப்படி மதவாதத்தை எதிர்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கடவுள் என்பதையே எதிர்க்கிறாரா. அல்லது குறிப்பிட்ட மதத்தை எதிர்க்கிறாரா.

கடவுள் நம்பிக்கையை எதிர்க்கிறாரா. அல்லது கடவுள் நம்பிக்கையால் ஏற்படுகின்ற ஆசார அனுஷ்டானங்களை எதிர்க்கிறாரா. எதனால் அவருக்கு அப்படிப்பட்ட எண்ணம் தோன்றியது. அவருடைய வாழ்க்கை வரலாறு என்ன என்று இளைஞர்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். அது ஆத்திகனாவதற்கோ, நாத்திகனாவதற்கோ இந்தப் புத்தகம் நிச்சயம் உதவி செய்யும்.

பொது அறிவு அல்லது கேள்வி அறிவு உலகம் பற்றிய ஞானம் இல்லாதபோது, வெகுநிச்சயம் அம்மாதிரியான ஆட்களை வன்முறைப் பக்கம் திருப்பிவிட முடியும்.அப்படி சில தேசங்களில் மதரீதியாகவும், கொள்கைரீதியாகவும் இளைஞர்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். உலகம் தழுவிய வன்முறையை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகியது. அந்தப் பெண்ணுக்கு கணவனாக வரப்போகிறவன், பயோ டெக்னாலஜி’யில் அதாவது, உயிரியல் துறையில் உச்சகட்டப் படிப்பு படித்து, நல்ல வேலையில் இருந்தான். அந்தப் பெண் ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தது.

“பயோ டெக்னாலஜி பற்றி எதுவும் தெரியாது. கணவனுக்கு முன்னால் நான் பேந்த பேந்த முழிக்க வேண்டியிருக்குமே. அதனால் நான் ‘பயோ டெக்னாலஜி’ பற்றி ஏதாவது தெரிந்துகொள்ள வேண்டும்” என்று சொல்லி என் வீட்டிற்கு வந்து, என் மகளிடம் ‘பயோ கெமிஸ்டரி’ பற்றி நேரம் கிடைத்தபோதெல்லாம் பேசி-விவாதித்து,ரத்த ஓட்டம், ரத்தத் தன்மை, என்சைம்கள், பாக்டீரியாக்கள் என்று பல்வேறு விஷயங்களைப் பேசியே தெரிந்துக் கொண்டது.

அதன் திருமணத்திற்கு நாங்கள் எல்லாம் போய் வந்தோம். ஆறு மாதம் கழித்து ஊரிலிருந்து வயிற்றிலே கரு தாங்கி வந்தது. கூடவே கணவனும் வந்திருந்தான்.

“எப்படி இருக்கிறாள் எங்கள் வீட்டுப் பெண்” என்று நாங்கள் பெருமையாக கேட்க, “நீங்கள்தான் அவளுக்கு ‘பயோ கெமிஸ்டரி’ சொல்லிக் கொடுத்தீர்களா. அவசியமானால் நான் ஒரு பயோ கெமிஸ்டரி பெண்ணையே திருமணம் செய்துகொள்ள மாட்டேனா. ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறாளெ எனக்கு இலக்கியம் சொல்லித் தருவாள் என்று ஆவலாக திருமணம் செய்துகொண்டால், இவள் ரத்தம் பற்றியும், பாக்டீரியா பற்றியும் பேசுகிறாள். காதுகளை பொத்திக்கொண்டேன்” என்று சிரிப்போடு சொன்னான்.

“ஆங்கில இலக்கியம் பற்றிக் கேட்டால் பரவாயில்லையே. தமிழ் பாசுரங்கள் பற்றி சொல்லு. தேவாரம் பற்றிச் சொல்லு என்று கேட்கிறார். எனக்கு ஒன்று கூட தெரியவில்லை. மிகவும் அவமானமாகப் போய்விட்டது, நீங்கள் எனக்கு சொல்லித் தாருங்கள்.தினமும் உங்களிடமிருந்து தேவாரம், திருவாசம் கற்றுக்கொண்டு போகிறேன்” என்று அப்பெண் சொல்லிற்று.

கணவனும் அவளுடைய அந்த நம்பிக்கையை மிகவும் ஆதரித்தான். ‘வயிற்றிலுள்ள பிள்ளைக்கும் நல்லதல்லவா’ என்று குதூகலித்தான். ‘கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு’ என்று ஆண்டாள் பாசுரம் ஒன்று இருவருக்கும் சொல்ல, பயோ டெக்னாலஜியும், ஆங்கில இலக்கியமும் வாய் பிளந்து கேட்டார்கள்.

“வாழ்வு மிகப்பெரியது. அதில் விஞ்ஞானம் ஒரு சிறிய அங்கம். விஞ்ஞானமே வாழ்வாகிவிடாது. இயற்கையின் அதிசயத்தை விஞ்ஞானம் சொல்கிறது. எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன” பயோ டெக்னாலஜி மாப்பிள்ளை பரவசப்பட்டார்.

வீட்டுத் தலைவன் தெரிந்துகொள்ளும் ஆவலில் ஈடுபட்டுவிட்டால், அவன் துணைவியும், துணைவியால் அவன் குழந்தைகளும் அதில் ஈடுபடுவார்கள். ஆளாளுக்கு விவரங்கள் கொண்டுவந்து தருவார்கள். ஒரு பிள்ளை கிரிக்கெட் போட்டி பற்றி விவரனையாக சொல்ல, ஒரு குழந்தை கர்நாடக சங்கீதம் பற்றி செம்மையாக பேச-தாய்,ஐரோப்பிய-தஞ்சாவூர் ஓவியங்கள் பற்றி எடுத்துரைக்க, தந்தை பொருளாதரம் பற்றி குழந்தைகளுக்கும்... மனைவிக்கும் விவரித்து சொல்ல, பங்கு மார்க்கெட் என்றால் என்ன என்று விளக்கத்தைத் தர, குடும்பம்-விஷயங்களை வாங்கி வாங்கி அருந்தும். சீராய் வளரும்.




“வெறுமே கேட்டுக் கொள். சும்மா மனம்பாடம் செய்” என்று சிறுவயதில் எனக்கு சொல்லிக் கொடுத்த பல பழம் பாடல்கள், தொன்மையான பழம் இலக்கிய செய்யுள்கள்-வளர்ந்த பிறகு மறுபடியும் நினைவுக்கு கொண்டுவர, மிக அற்புதமான செய்திகளை அவை சொல்வதை நான் உணர்ந்தேன்.

“ஒருமையுடன் நினது திருவடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று
பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”


ஏழு வயதில் மனப்பாடம் செய்த வரிகள்.இன்று அறுபத்தியொரு வயதில் அதன் பொருள் விளங்க, அந்த வாக்கியத்தின் பிரம்மாண்டம் புரிய-நான் திகைத்துப்போய் நிற்கிறேன்.

ஒருமையுடன் நினைக்கின்ற உத்தமர் யார் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் இருக்கிறேன். அப்படிப்பட்டவரோடு கூடாமல் இருக்கிறேன். எந்த அறிதலும் வீண்போவதில்லை. அறிதலுக்கு ஆசைப்படுவது மனிதர்களுக்கு இயல்பு.

வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள்.

3 comments:

said...

வணக்கம்

அறிதல் என்ற விஷயம் மிகப் பெரிய விஷயங்களில் மட்டுமே உள்ளது என்று நினைத்திருந்தோம், ஆனால் வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களிலும் அறிதல் எந்த அளவு முக்கியம் என்று நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது.
நன்றி
கலைவினோத்.

said...

Success matters most to everyone and in present day's world everyone want to succeed in all their endeavours. But this article teaches on how to get success. "Working hard and tirelessly is the only way to get success. But more than that self awareness and awareness on other things will help you to succeed more" - a great reality words from Guruji. I want to show this to my children and would like to see their success too...

said...

Information (Knowledge) is Weatlth -
எல்லாருக்கும் ரொம்ப பரிச்சயமான இந்த வாக்கியத்த, ரொம்ப எளிமையான உதாரணங்கள் மூலமா அழகா சொல்லிட்டீங்க.

மனமார்ந்த நன்றி.

சிநேகமுடன்,
ஆறு. சரவணன்