Showing posts with label பேட்டி. Show all posts
Showing posts with label பேட்டி. Show all posts

Saturday, June 28, 2008

பொன்னூஞ்சல் - எழுத்துச்சித்தருடன் ஒரு பேட்டி - பாகம் 2

பாகம் ஒன்றைப் படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்.


கிருஷ்ணதுளசி : புராணக்கதைகளையும் எல்லோரும் அறிந்த தொண்டர்கள் வரலாறுகளையும் மறுபடியும் எழுதுகிறீர்களே? இதில் என்ன லாபம்?
பாலகுமாரன் : தமிழ்நாட்டில் பல இளைஞர்களுக்கு புராணக் கதைகள் தெரிவதே இல்லை. அந்தப் புராணக் கதைகள் சொல்லப்படுகிற போதும் அதன் அடிப்படைத் தத்துவம் இங்கு விவாதிக்கப்படுவதில்லை.எதனால் இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது என்று விளக்கப்படுவதே இல்லை. இங்கு உபன்யாசம் செய்கிறவர்கள் தருமர் அழுதார் என்றும், பீமன் கோபமடைந்தான் என்றும், அர்ச்சுனன் காதலித்தான் என்றும், கிருஷ்ணன் நடு நடுவே வந்து விட்டு உதவிகள் செய்து போகிறவன் என்று சொல்கிறார்களே தவிர நமக்குள் இருக்கின்ற இந்த தாபத்தை, கடவுள் தேடலை, உயிர் ஏக்கத்தை இந்த புராணக் கதைகள் எப்படி சொல்கின்றன எப்படி நிவர்த்திச் செய்கின்றன என்றும் நாம் சொல்லியாக வேண்டும். பஞ்சபாண்டவர்கள் என்பது பஞ்ச பூதங்கள். திரௌபதி என்பது உயிர். கிருஷ்ணன் என்பது பரமாத்மா. ஜீவாத்மா பரமாத்மாவை நோக்கி புலன்களின் துணையோடு சரணடைவதே மகாபாரதம். இதை மகாபாரதம் நேரடியாக சொல்லாது. மறைமுகமாகத் தான் உணர்த்தும். இந்த உணர்த்தலை நான் கதையாக வேறு விதமாக இதன் அடிப்படை விளக்கங்களோடு பேச முற்படுகிறேன். இதுதான் முக்கியம்.

பெரிய புராணக் கதைகளை வெறுமே படித்தால் அதில் எந்த லயமும் இல்லை. ஆனால் போரில் ஈடுபட்டு பல பேரை வென்று வெட்டிக் கொன்று குவித்தவர், பிள்ளையை வெட்டு என்று சொன்னால் என்ன செய்வார் என்ற கேள்வி வருகிறது. ஆனால் தன்னுடைய சொந்தப் பிள்ளையை வெட்டிக் கறி சமைத்து உண்கின்ற அந்தக் கொடூரத்தை அவரை செய்ய வைக்கின்ற போது அவருக்குத் தன் கையால் வெட்டுப்பட்டவருடைய முகமெல்லாம் இங்கே நினைவுக்கு வரும். அ வருடைய நேர்மையை சோதிக்க இறைவன் செய்த நாடகம் அது.

மனைவிக்கு சத்திய வாக்கு செய்தாகிவிட்டது. தொடமாட்டேன் என்று சொல்லியாகிவிட்டது. அதை நெல்முனையும் மீறாமல் அதே சமயம் அப்படிப்பட்ட சத்தியத்தை வெளியேயும் சொல்லாது இருவரும் ஒன்றாக, அமைதியாக, சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறார்கள். இந்தப் பண்பை எடுத்துச் சொல்ல வேண்டும். இது பெரிய சத்திய சோதனை. அதை நெல்முனையளவும் மீறாதவர்க்கு இறை தரிசனம் கிடைத்தது. இதை சொல்லியாக வேண்டும். வெறும் ‘தீண்டுவீராயின் திருநீலக்கண்டம்’ என்று சொல்வது யாருக்கும் எதுவும் புரியாது.

இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு புராணத்தை, பழந்தமிழ் இலக்கியத்தை சங்கத்தமிழை அறிமுகப்படுத்தி நேர்வழியில் அவர்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கு, அவர்களுக்கு பலம் தருவது என் வேலை. இதைச் செய்திருக்கிறேன்.


கிருஷ்ணதுளசி: எழுத்து மட்டுமல்லாது, மற்ற எல்லாக் துறைகளிலும் உள்ள கலைஞர்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்ன?


பாலகுமாரன் : ஏன் கலைஞர்களை மட்டும் கேட்கிறீர்கள். இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் உள்ள பிரச்சனை பொறாமை. பரஸ்பரம் மனிதருக்கு மனிதர் இருக்கின்ற அடிப்படையான விஷயமே பொறாமையாகத் தான் இருக்கிறது.

மகாபாரதத்தில் தருமருக்கும், யட்சருக்கும் ஒரு கேள்வி பதில் பகுதி நடக்கும். கலியுகத்தில் மக்களுடைய குணம் என்னவாக இருக்கும் என்ற யட்சன் கேள்விக்கு, கலியுகம் முழுவதும் மக்கள் பொறாமையால் அவஸ்தைப்படுவார்கள் என்று தருமர் பதில் சொன்னார். அந்த பதில் இன்றும் பொருத்தமாக இருக்கிறது. இன்னமும் இருக்கும் என்றும் தோன்றுகிறது.
பொறாமை இல்லாமல் இருப்பதற்கு மிகப் பெரிய பலம் வேண்டும். இங்கு மனிதர்கள் பலஹீனர்களாக இருக்கிறார்கள். என்ன மாதிரி பலம் வரவேண்டும் என்ற கேள்வி வரலாம்.தன் மீது, தன் வேலையின் மீது நம்பிக்கை இருப்பதும், உழைப்பின் மீது காதலும்,போதும் என்ற மனமும் இருப்பின் பொறாமை வரவே வராது. பொறாமையை ஒழித்தால் தான் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும். பலர் சொந்த வாழ்க்கை அழுகிப் போவதற்கு பொறாமைதான் காரணம்.

இந்தப் பொறாமை மற்றவரை காயப்படுத்துவது மட்டுமல்ல, யார் பொறாமைப்படுகிறாரோ அவருடைய வளர்ச்சியை மிக பெரிதும் பாதிக்கிறது. சரியாக சிந்திக்க முடியாமல் தடுக்கிறது. கற்பனைத் திறனை அறவே அழித்து விடுகிறது. நல்ல விஷயங்களைப் படைக்கும் திறனை அழித்து ஒழித்து விடுகிறது. எனவே வெட்டி அரட்டையில், வீண் விவாதிப்பதே, பிறரை குறை சொல்லி எழுதுவதே தன் நோக்கமாகவும், அதுவே ஞானமாகவும் போய்விடுகிறது. தெளிவான ஒரு ஞானி எது குறித்தும் எப்பொழுதும் எவர் மீதும் பொறாமைப்பட மாட்டார். ஆனால் பொறாமை தான் ஞானம் என்றே இங்கு பல அறிவுஜீவிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவருடைய படைப்புத்திறன் குறைந்து போனால் அவருடைய நடுநிலைமை உடைந்து போகிறது. நடுநிலைமை உடைந்து போனால் படைப்புத்திறன் குறைந்து போகிறது. அப்பொழுது மற்றவரை குறை சொல்வது என்பதும், ஏகடியம் பேசுவதும் இயல்பாய் போகிறது.

நடுநிலைமை என்கிற விஷயம் மிக ஆரோக்கியமானது. அது சொந்த வாழ்க்கையை சீராக ஆக்குவது மட்டுமில்லாமல் படைப்புத்திறனை மிகப் பக்குவமாகவும், சிறப்பாகவும் கொண்டு வந்து கொடுக்கிறது. சிறப்பான படைப்புகள் எந்த முயற்சியும் இன்றி பாராட்டுகளைக் குவிக்கும். காலம் கடந்து நிற்கும். படைப்பாளிக்கு சந்துஷ்டியைக் கொடுக்கும்.

கிருஷ்ணதுளசி: இப்பொழுது உங்களை ஐ யா என்றும் குரு என்றும் அழைக்கிறார்களே। இது புது டிரண்டாக இருக்கிறதே। இந்த டிரண்ட் உங்களுக்கு உவப்புத்தானா. ........................தொடரும்

Thursday, May 15, 2008

பொன்னூஞ்சல் - எழுத்துச்சித்தருடன் ஒரு பேட்டி

ஊஞ்சலின் ஒரு உந்துதல் இன்னொரு உந்துதலை உருவாக்குவதைப் போல இந்தப் பேட்டிப் பகுதி ஒரு கேள்விக்குண்டான பதில் இன்னொரு கேள்வியைத் தோற்றுவித்து, அதற்குண்டான பதில் இன்னும் ஒரு கேள்வியை எழுப்பும் விதமாய் அமைந்திருக்கிறது. மனதை உற்சாகப்படுத்தி, புத்தியை குளுமையாக்கும் ஒரு ஊஞ்சலின் அசைவு போல ஆரோக்கியமான கேள்வியும், அர்த்தமுள்ள பதிலுமாய் இந்தப் பகுதி இருப்பதால் இது பொன்னூஞ்சல்.







கிருஷ்ணதுளசி: எழுத்துப்பணி உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா? ஆமெனில் எதனால் இந்த திருப்தி ஏற்பட்டது என்று சொல்ல முடியுமா?




பாலகுமாரன் : என் எழுத்துப்பணி எனக்கு மிகுந்த நிறைவைக் கொடுத்திருக்கிறது. நான் என்ன எழுத வேண்டும் என்று தீர்மானித்து திட்டமிட்டிருந்தேனோ, அதை மிகச் செவ்வனே செய்திருக்கிறேன். சில சமயம் என் எழுத்துகள் நான் நினைத்ததையும் விட மிக அழகாக என்னிலிருந்து வெளிப்பட்டிருக்கிறது. இது என் எழுத்தை நான் படிப்பதால் ஏற்படும் திருப்தி மட்டுமல்ல. என் எழுத்தைப் படித்த வாசகர்கள், என்னிடம் எதிரொலிப்பதால் ஏற்பட்ட சந்துஷ்டியும் கூட.

என்னுடைய எழுத்தை ஆரம்ப காலத்திலிருந்து படித்து, என்னுடனே வளர்ந்து, என் பரிணாம வளர்ச்சிப் போல அவர்களும் பரிணாம வளர்ச்சி பெற்று, என்னுடைய எழுத்துகளை தனக்கு, தன் வாழ்க்கையில் சாதகமாய் உபயோகப்படுத்திக் கொண்டு வளர்ந்து பலம் பெற்ற வாசகர்கள் பலர். இதை நேரடியாகவும், கடிதம் மூலமும் பல நூறு முறைகள் கேட்டும், படித்தும் நான் சந்தோஷப்பட்டிருக்கிறேன்.

உங்களால் என் வாழ்க்கை செம்மை ஆயிற்று. தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை உதறிவிட்டு நான் வாழ்ந்தேன். என்னுடைய குடும்பம் இன்று மகிழ்ச்சியாக இருப்பதற்கு, எனக்கு குடும்பம் என்று ஒன்று இருப்பதற்கு உங்கள் எழுத்துதான் காரணம் என்றெல்லாம் என்னை கொண்டாடி இருக்கிறார்கள். ஒரு படி மேலே போய் தன் குழந்தைக்கு பாலா என்று பெயரிட்டு கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுது என்னை சந்தித்தாலும் கை கூப்பி மிகப் பரவசமாய் நமஸ்கரிக்கிறார்கள். எத்தனை எழுத்தாளர்களுக்கு இது கிடைத்தது என்ற விவரங்கள் என்னிடம் இல்லை. ஆனால் எனக்கு, என் வாழ்க்கைக்கு உதவி செய்தது என்ற வாசகர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் என்னிடம் இருப்பதை நான் உணருகிறேன்.

ஆனால் வலது என்று ஒன்று இருந்தால் இடது என்று ஒன்றிருக்கும். மேலே ஒன்று இருந்தால் கீழே ஒன்று இருக்கும். இந்த உலகம் த்வந்தமயமானது; இரண்டானது. என்னுடைய எழுத்தை மேலெழுந்தவாரியாக படித்தவிட்டு அல்லது வேறு எவ ரேனும் படிக்கக் கேள்விப்பட்டு அதைத் தான் படித்ததாய் நினைத்துக் கொண்டு பாலகுமாரன் இப்படி எழுதுகிறார், அப்படி எழுதுகிறார் என்று சொல்லுகிறவர்களும் இருக்கிறார்கள்.

நம்முடைய தமிழ் இலக்கியத்தில் சரியானபடி படித்துவிட்டு விமர்சனம் செய்கிற ஒரு பாங்கு வளரவே இல்லை. அபிப்ராயங்கள் தான் அல்லது புத்தகத்தைப் பற்றிய மேலோட்டமான செய்திதான் வலம் வருகின்றன. விமர்சனக் கலை என்பது தமிழில் இல்லவே இல்லை. அப்படி சிலர் ஆரம்பித்தும் அது அடாவடித்தனத்தில்தான் முடிந்தது. உண்மையாக இல்லை. விமர்சனம் இல்லாது போயினும், நல்ல வாசகர்கள் தமிழில் இருக்கிறார்கள். புத்தக திருவிழாவில் புத்தகம் விற்பதும், அடிக்கடி புத்தகத் திருவிழா நடப்பதும் நல்ல படிப்பாளர்கள் பலமாக வளர்வதும் இதற்கு நல்ல உதாரணங்களாக கொள்ளலாம்.


கிருஷ்ணதுளசி: நீங்கள் ஆரம்பத்தில் பாலியல் பற்றி எழுதுவதாகவும் இப்பொழுது ஆன்மீகம் பற்றி எழுதுவதாகவும் முற்றிலும் மாறுபட்டதாகவும் குறை சொல்கிறார்களே சில வாசகர்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?




பாலகுமாரன் : நான் நுனிப்புல் மேயும் வாசகர்கள் என்று சொன்னது இவர்களைப் பற்றித்தான். பாலியல் பற்றி நான் மிகக் குறைந்த அளவில் தான் எழுதியிருக்கிறேன். பாலியல் வாழ்க்கையில் மிக ஆதாரமான விஷயம். நிறைய பேர் திருமண வாழ்க்கை இங்கு குப்பைத் தொட்டியாய் போனதற்கு காரணம் பாலியல் விஷயங்களை சரியாக புரிந்து கொள்ளாததும், பெண்களை அன்பாக அணுகாததும் தான் காரணம். ஆண் என்ற மமதை, அலட்சியம் அல்லது ஆணாதிக்கம் என்று எகிறுகின்ற பெண்கள் எண்ணிக்கை அதிகமானதும் காரணம். இந்தப் பாலியல் குளறுபடிகள் வாழ்க்கையில் இருப்பதை நான் கண்ட பிறகு எப்படி இந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று யோசனை செய்து இது தொடர்பாக வெகு சில கதைகளே எழுதியிருக்கிறேன். ஒட்டு மொத்தமாக வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை, வேலை, வருமானம், குழந்தைகள், தாய், தந்தை, சகோதரன், சகோதரி, நண்பர்கள் என்றெல்லாம் நகர்ந்து அதிலே பெண்களுடைய பங்கும், ஆண்களுடைய பங்கும், காமத்தினுடைய பங்கும் என்னவென்று யோசித்து எழுதியிருக்கிறேன். வெறும் பாலியலோ, வக்கிரமான பாலிய லோ நான் எழுதியதில்லை. பாலியல் விஷயத்தில் தவறான அணுகுமுறை முகத்தில் அடித்து வீழ்த்தும் என்பதை சொல்லுவதற்காகவும் சில கதைகள் எழுதியிருக்கிறேன்.

பாலியல் மட்டுமே எழுதியிருக்கிறேன் என்ற பார்வை வக்கிரமான பார்வை. அப்பா அம்மா கதை தானே எழுதியிருக்கிறாய் என்று நினைத்துக் கொள்வது படிப்பின்மை. படித்தது பற்றிய தெளிவின்மை. இவர்கள் தான் நுனிப்புல் மேய்ந்து விட்டு, மேலாக படித்து விட்டு, என் எழுத்தை சரியாக அணுகாமல் புறம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதும் எவரையாவது குறை சொல்லிக் கொண்டிருப்பது சிலருடைய வாழ்க்கை. இவர்கள் தானும் உருப்படியாக செய்ததில்லை. மற்றவர் உருப்படியாக செய்ததையும் புரிந்து கொண்டதில்லை. என்னுடைய பரிணாம வளர்ச்சி என்னவோ அதைத் தான் என் கதைகள் வெளிப்படுத்துகின்றன.

இருபது வயதில், இருபத்தி ஐந்து வயதில், பெண் ஒரு பிரமிப்பாகவும் மிக அவசியமானதாகவும் இருந்தது. இது மெல்ல மெல்ல மாறி பல்வேறு விதமான உருவகம் எடுத்து குழந்தைகளோடு கூடிய ஒரு தாய். அவள்தான் மனைவி என்ற அழகும் சேர்ந்தது. திருமணத்திற்கு நிற்கின்ற பெண்களைப் பற்றி கவலைப்படுகின்ற கணவன் மனைவியாக இருப்பவர்கள் பற்றிய கதைகள் வந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் பாலியல் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட விஷயம். பெண்கள் போகப் பொருளாகக் கருதப்பட்ட விஷயம். இதை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கில் மிகச் சில கதைகள் எழுதியிருக்கின்றேனே தவிர என் எழுத்துகளில் பலவும் பல்வேறு விதமான கோணங்களைக் கொண்டவை. தன்னைத் தேடுபவை. ஆத்ம விசாரம் கொண்டவை. தனிமையை ரசிப்பவை. மற்றவர்களுக்கு எளிதில் உண்மையாக விட்டுக் கொடுப்பவை. போலித்தனத்தைச் சாடுபவை. சத்தியமாக வாழ்க்கையில் இருக்கின்ற சந்தோஷத்தை இனம் காட்டுபவை. இதைப் புரிந்து கொண்டு இதை நன்றாக என் கதைகள் மூலம் அறிந்துக் கொண்டு தனக்குள் விவாதித்து தெளிவு பெற்று தேர்ந்த வாசகர்கள் எனக்கு
மிக அதிகம். அதனாலேயே நான் கொண்டாடப்படுகிறேன். அதனாலேயே பலர் பொறாமைக்கும் ஆளாயிருக்கிறேன்.

என் ஆன்மீகம் என்பது மிக ஒழுங்கான, சீரான வளர்ச்சியைக் கொண்டது. ஆன்மீகம் திடுமென்று நான் எழுதவில்லை. என்னுடைய முதல் கதையிலேயே கூட ஆன்மீகம் கலந்திருக்கிறது. நான் எழுதிய சிறுகதைகளிலே கூட கடவுள் தேடல் என்ற விஷயத்தினுடைய சாயல் உண்டு.பாசுரங்களூம், தேவாரங்களும் மேற்கோள் காட்டுவது மட்டுமல்லாது,எல்லோராலும் கொண்டாடப்படும் நான் எழுதிய குதிரை கவிதைகளில் கூட இந்த ஆன்மீகத் தேடல் மிகப் பலமாக இருக்கும். என்னுடைய இரண்டாவது நாவலான இரும்பு குதிரைகளிலேயே இந்தக் குதிரைக் கவிதைகள் இடம் பெற்று விட்டன. இந்த ஆன்மீகம் எனக்கு என்னுடைய தாயாரால் அ றிமுகபடுத்தப்பட்டு, பல புத்தகங்களால் பலமாக்கப்பட்டு, என் சத்குருநாதன் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்களால் பூரணமாக்கப்பட்டது. குருவருளால் எனக்குள் மிகப்பெரிய மலர்ச்சியை, என் இருப்பை, என் உயிர் அசைவை, எனக்குள் இருக்கின்ற அந்த ஆன்மாவின் தரிசனத்தை, கடவுள் சிறப்பை நான் மனமார உணர்ந்தேன். பல்வேறு ஆன்மீக அனுபவங்களுக்கு ஆட்பட்டேன். அவைகள் தான் என் எழுத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமாக வெளிப்பட்டிருக்கிறது.

ஆன்மீகம் என்பது குடும்ப வாழ்க்கையிலிருந்து அன்னியப்பட்டது, தள்ளி நிற்பது, துறவறம் போன்றது என்ற விஷயத்தை நான் ஏற்றுக் கொள்ளவேயில்லை; சொன்னதுமில்லை. உலக வாழ்க்கையில் புரண்டு விழுந்து தன்னை இடையறாது அவதானிப்பதே என்னுடைய கொள்கை. அந்த அவதானிப்பைக் கூர்மையாக்கிக் கொள்ள என்னவெல்லாம் தேவை என்பதை நான் சொல்லியிருக்கிறேன்.

என்னுடைய ஆன்மீகம் கற்பனையானது அல்ல. நான் அனுபவித்தது. எனக்கு தெளிவாக ஊட்டப்பட்டது. என்னிலிருந்து பீறிட்டுக் கிளம்பிய சத்தியம் அது. அ து வாழ்க்கையோடு இரண்டற கலந்திருக்கும் விஷயம் என்று நான் சொல்வது இன்று புரிந்துக் கொள்ளப்படாவிட்டாலும் பிறகு ஒரு நாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதில் எனக்கு நெல்முனையளவும் ஐயம் இல்லை.