Sunday, June 21, 2009

உடையார் - ஒரு முன்னுரை



நெஞ்சு முழுவதும் ஒரு விம்மிதம் பரவிக்கிடக்கிறது. எந்த நினைப்புமற்று, எந்த செயலுமற்று, எந்த அசைவுமற்று வெறுமே கிடக்கின்றன ஓரு நிலைமை சில கணங்கள் உள்ளே உண்டாயிற்று.

உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா, உண்மைதானா. நாவல் எழுதி முடிக்கப்படாது என்று சொன்னார்களே. இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளீயாகத்தான் வைப்பார்கள் என்று ஆருடம் கூறினார்களே. நான் எழுதித் தருகிறேன்; அடித்துச் சொல்கிறேன்; இந்த நாவல் எழுத முடியாது என்று என் பதிப்பாளரை பயமுறுத்தினார்கள்.

பந்தல் எரிந்த கும்பாபிஷேகத்தையும்,பதவி பறிக்கப்பட்ட தலைவர்களையும், பாதிக்கப்பட்ட அமைச்சர்களையும், சுட்டிக்காட்டினார்களே. எனக்கும் அதுதான் கதி என்று சொன்னார்களே. அவர்கள் என்ன ஆனார்கள். இந்த நாவலை நான் எப்படி முடித்தேன் என்று யோசிப்பு வந்தபோது மிகத்தீவிரமாய் என் குருநாதரைப் பற்றிய நினைப்பு எனக்குள் பீறிட்டு எழுந்தது.

என் சத்குருநாதன் கடவுளின் குழந்தை, அடியார்க்கு நல்லான், திருவண்ணாமலை மகான் யோகிராம்சுரத்குமார் அவரிகளின் கருணையாலும் பரிபூரண ஆசியாலும் இந்தப் புதினத்தை ஆறாவது பாகம் வரை எழுதி முடித்துவிட்டேன்.

இந்தப் பிரம்மாண்டமான சரித்திரத்தை என் புத்திக்கு எட்டியவரை உணர்ந்து அனுபவித்து உள்வாங்கி மிகுந்த கவனத்தோடு, இழை இழையாய் நெய்து, பூக்கள் நிறைந்த சால்வையாய் அவர் காலடியில் சமர்ப்பிதம் செய்து விட்டேன். தை வெறும் சரித்திர நாவலாக மட்டும் கருதவில்லை. ஒரு இனத்தின் பண்பாட்டு வெளியீடாக, ஒரு நதிக்கரை நாகரிகத்தின் நிறைவான கதையாக, வரலாற்றைக் காட்டிலும் பிரம்மாண்டமான் சனாதன தர்மத்தின் ஒரு அலைவீச்சாக, தமிழ் பேசும் எம் குடிமக்கள் எத்தனை அற்புதமான விஞ்ஞானபூர்வமான, அறிவுபூர்வமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லுகின்ற விதமாகவும் எழுதியிருக்கிறேன்.

உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் என்கிற தனி மனிதர் தன்னைப் பற்றி மட்டுமே முன்னிலைப் படுத்திக் கொள்ளாது தன்னைச் சேர்ந்த அத்தனை மக்களைப் பற்றியும் அக்கறைப்பட்டு அவர்களையும் இந்த இறைப்பணியில் சேர்த்துக் கொண்டு ஒரு நாகரிகத்தை கல்வெட்டாக விட்டுச்சென்ற கனிவை எண்ணி, அதில் மனம் கரைந்து, அதில் வசப்பட்டு, கதைக்கு நடுவே அந்தக் கனிவை காட்டவும், நான் முயற்சித்திருக்கிறேன்.

சரித்திரக் கதையாக இருப்பினும் போர் பற்றிய விமர்சனமும், பெண்கள் பற்றிய பார்வையும் ஒரு பொழுதுபோக்கு பற்றிய குறிப்புகளும், கடவுள் பற்றிய சிந்தனையும், அது குறித்த தத்துவமும் விவாதமும் என்றைக்கும் எப்போதும், எவரும் புரிந்து கொண்டு மேற்கொண்டு சிந்திக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு இதில் புகுத்தியிருக்கிறேன்.

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் வாழ்வினுடைய அடிப்படைத் தாகங்கள் அகன்று விடவில்லை. மனிதர்கள் இப்போதும், எப்போதும் ஓரே விதமாகத்தான் வாழ்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

இந்த நாவலை சோழதேசம் நோக்கி பயணப்படுகையில் நான் முடிக்க நேர்ந்தது. ஒரு குவாலிஸ் வண்டியில் நண்பர்கள் அமர்ந்திருக்க தாம்பரத்தில் கதை துவங்கி இடையாறது இடையாறது ஒலி நாடாவில் பதிவு செய்து கொண்டு வந்தேன். ஒரு கனத்த மழை போல தங்கு தடையின்றி இந்த நாவல் என்னிலிருந்து மிகச்சீராக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. பயணப்பட்டுக்கொண்டே நாவல் சொல்வதால் அதன் அடர்த்தியும், வேகமும், தெளிவும், அழகும் குறையவே இல்லை. உடன் வந்த என் நண்பர்கள் வியந்துபோனார்கள். அங்கங்கே நான் உணர்ச்சிவசப்பட என் தலையைத் தடவி, பிடரியை வருடி, தோளைத்தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள்.

சோழதேசத்தின் எல்லையைத் தொடும்போது உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் இறைவனடி சேர்ந்தார் என்று சொல்லி முடித்துவிட்டு ஓலிநாடாவை பக்கத்தில் வைத்துவிட்டு வெளியே பார்த்து அழத்துவங்கினேன். இன்னும் என்னுள் அந்த நேரம் அந்த நினைப்பு பசுமையாக இருக்கிறது. அருகே ஒருவர் இறந்துவிட்டதுபோல, அவர் இறந்த செய்தி ஐந்து நிமிடத்திற்க்கு முன்புதான் எனக்கு தெரிவிக்கப்பட்டதுபோல, துக்கத்தோடு நான் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இறந்த அந்த மன்னனுக்காக கிட்டதட்ட கதறலாக அழுதேன். அப்பொழுது அப்படி உணர்ச்சி வசப்பட்டது நியாயமாகத்தான்படுகிறது. அந்த அழுகை சரி என்றுதான் தோன்றுகிறது.

வெறும் புத்தியால் மட்டும் ஒரு புதினத்தை எழுதிவிட முடியாது. ஒரு கல்வெட்டைப் பார்த்து விட்டு அதுபற்றிய தகவல் சொல்வது போல் ஒரு கட்டுரையாய் ஒரு புதினம் எழுதப்படக்கூடாது. விமானம் இத்தனை உயரம், இத்தனை அகலம், இத்தனை வருடங்கள் முன்பு கட்டப்பட்டது. இதன் கற்களின் எடை இத்தனை. பிளந்த கற்கள் இவ்வளவு. பிளக்காத கற்கள் இவ்வளவு. உயரே இருக்கின்ற கலசத்தின் எடை இவ்வளவு. சுற்றியுள்ள மதில்சுவரின் அளவு எத்தகையது. ‘இவர்தான் மூலவர் எல்லாரும் சாமி கும்பிட்டுக்கோங்க, சீக்கிரம் வெளியே வாங்க’ என்று ஒரு வழிகாட்டியைப் போல ஒரு எழுத்தாளன் செயல்படமுடியாது.

அந்தக் கட்டிடத்திற்கு அருகே போய் அண்ணாந்து பார்த்து ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இதை எப்படிக் கட்டினார்கள். அவர்களெல்லாம் யார். என்ன கணக்கு, என்ன கருவி என்று எவர் வியக்கிறாரோ. நம்முடைய முன்னோர் எத்தனை நேர்த்தியாக இதைச் செய்திருக்கிறார்கள் என்று எவர் பெருமிதப்படிகிறாரோ, இதைச் செய்கின்ற ஆற்றல் இருக்குமென்றால் அவர்களுக்கு இன்னும் என்னென்ன ஆற்றல் இருந்திருக்க வேண்டும். அந்த ஆற்றல் உள்ளவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும். அவர்கள் எவ்விதமாக குடித்தனம் செய்திருக்க வேண்டும் என்றெல்லாம் தொடர்ந்து யோசிக்கிறார்களோ அப்படி உணர்ச்சிவசப்பட்டவர்களுக்கு உணர்வுபூர்வமாக எழுதப்பட்டது இந்த நாவல்.



............................தொடரும்

குரு என்பவர் ஒருவருக்கு அவசியமா ?

ஐயா, குரு என்பவர் ஒருவருக்கு அவசியமா ?

பாலகுமாரன்: உலகில் ஒவ்வொரு உயிரினமும் தன் வாழ்க்கைப் பற்றிய அறிவை தன் சக உயிரினங்களிடமிருந்து தான் பெறுகின்றது. உடை உடுத்தலை, உண்ணுதலை, உறங்குதலை, கூடிப்புணர்தலை, இயற்கை உந்துதல் கொடுத்தாலும் அது சக உயிரினங்கள் சொல்லிக் கொடுக்க, அந்த அனுபவத்தை கிரஹித்துக் கொண்டு இன்னும் சீராக வாழ்கிறது. இந்த சீரான வாழ்க்கைக்கு நாகரீகம் என்று பெயர்.

எல்லா செயல்களையும் நீங்கள் பிறரிடமிருந்து கற்றுக் கொள்கிறீர்களே அன்றி எதையும் நீங்களாக அறிந்து கொள்ளவில்லை. அறிந்து கொண்டதை நேர்த்தியாக செய்கிறீர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், வாழ்வின் அறிவு என்பது சக உயிரினமிடத்திருந்தே வருகிறது. தலை வாருதலிலிருந்து காலணி அணிவது வரை மற்றவர்கள் சொல்லி தந்துதான் அறிந்து கொள்கிறீர்கள் என்கிற போது வாழ்வின் ஆதாரமாக உள்ள ஆத்ம தாகத்தை, உயிரின் தவிப்பை, தன் இருப்பை அறிவது என்பதை எவரும் அறியாமல் நீங்களாக உணர்ந்து கொள்ள முடியுமா? இதை நானாக தெரிந்து கொள்வேன் என்று இறுமாந்து திரிவது நல்லதா. கடவுள் அறிதல் அல்லது தன்னை அறிதல் என்கிற விஷயத்திற்கு வெகு நிச்சயம் ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறார். அந்த வழிகாட்டிக்கு குரு என்று பெயர்.

குரு என்பவர் சாக்கு போக்குக்காக உங்களை சில மந்திர ஜபங்கள் செய்யச் சொல்லி, பூஜைகள் செய்யச் சொல்லி மெல்ல மெல்ல பிரம்ம ரகசியத்தை உபதேசிப்பார் என்று சொல்லப்படுகின்றது. கடவுள் தேடுதல் எதற்காக என்ற கேள்வி எழவில்லையெனில் வாழ்வு பூரணமாகவில்லை என்று அர்த்தம். வாழ்வினுடைய தினசரி விஷயங்களில் அலுப்பு ஏற்பட்டு இது என்ன வாழ்க்கை என்ற கேள்வி எழுகிற போது கடவுளைப் பற்றிய தாபம் அல்லது தன்னை அறிதலைப் பற்றிய ஏக்கம் எழுகிறது. அப்பொழுது வெகு நிச்சயம் குரு என்பவர் தேவை.


அந்த குரு தன்னை அறிந்தவராக இருக்கிறபொழுது உங்களுடைய தவிப்பை முற்றிலுமாய் உணர்ந்து உங்களை அறியாமல் உங்களை உங்களுக்குள் தள்ளுகின்ற ஆற்றலையும் பெற்றிருப்பார். அந்த ஆற்றல் மிக ரகசியமாய் உங்களில் பாய்ந்து உங்களுக்குள் உங்களை அறிவிக்கும். இது விஞ்ஞான பாடமல்ல. அடிப்படையாய் புரிந்து கொள்வதற்கும், பேசி தெரிந்துகொள்வதற்கும். தடித்த புத்தகங்களிலிருந்து கற்று கொள்வதற்குண்டான விஷயமுமல்ல. இது ரகசியமானது. ரகசியம் என்பதற்கு வேறு ஒருவருக்கு சொல்லக்கூடாது என்ற அர்த்தமில்லை. எப்படி உள்ளே வந்தது என்றே தெரியாத ரகசியம் இது. நீங்கள் எப்படி மாறினீர்கள் என்றே தெரியாத ரகசியம் இது. உங்களை அறியாது உங்களை மாற்றுவது என்பது தன்னை அறிந்த குருவால் வெகு நிச்சயம் இயலும்.
எனக்கும், கடவுளுக்கும் இடையே இன்னொருவர் எதற்கு என்று கேள்வி வருவது மிகப் பெரிய அறியாமை. தான் எல்லாம் அறிந்துவிட்டோம், தன்னால் சகலமும் அறியமுடியும் என்கிற அறியாமை. உங்களுக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுத்தவரையே குரு என்று கொண்டாடிக் கொண்டிருக்கிற பொழுது கடவுள் தேடலை தானாக அறிந்து கொள்வேன் என்று கொக்கரிப்பது எவ்வளவு பெரிய பேதமை. உங்களை அறிவது தான் சரியான அறிவு. ஆனால் தன்னுள் தான் மூழ்குவது என்பது மிக மிக கடிமனான விஷயம்.

குரு என்பவரால் மட்டுமே உங்களை உங்களுக்குள் தள்ள முடியும். தங்களை அறிய வேண்டும் என்ற ஆவலுள்ளவர்களுக்கு குருவினுடைய தேடலும் கூடவே வரும். அவருக்கு குரு அவசியமா என்ற கேள்வியே இருக்காது. குரு எங்கே என்கிற ஆவல்தான் இருக்கும்.

யார் குரு. நான் தான் குரு என்று சொல்லிக் கொள்கிறவர்கள் உங்களுக்கு குரு அல்ல. தன்னை உணர்தலே கடவுள் உணர்தல் என்கிற மகாவாக்கியம் உணர்ந்தவரே குரு. அவர் தன்னை உணர்ந்தவர் என்று சொல்லிக் கொள்வதே இல்லை. கடவுள் தெரிந்துவிட்டது என்று குதிப்பதும் இல்லை. மாறாய் அவர் வாழ்க்கை முற்றிலும் மற்ற மனிதர்கள் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டிருக்கிறது. வாழ்வின் அநித்தியம், வாழ்வின் அபத்தம் புரிந்தபோது உள்ளுக்குளிலிருந்து ஒரு கருணை வெள்ளம் புறப்பட்டு சகலரையும் அணைத்து கொள்கிறது. யாரை வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் இழந்து தொலைப்போம் என்கிற பரிதவிப்பு இருப்பின் யாரை வெறுக்க முடியும். எவரும் இங்கே நிரந்தரமில்லை என்கிறது மிக தெளிவாக வந்து விட்டால் எவரை வெறுக்க முடியும் எனவே எவரையும் வெறுக்காத கருணை மழை தான் குரு. கருணை உள்ளவர் முகத்தில் அற்புதமான தேஜஸ் இருக்கும். அவர் ஒவ்வொரு அசைவும் அன்பை பொழியும். கடவுள் ரூபமாகவே இருக்கும். அந்த குரு உபன்னியாசம் செய்கிறவர் அல்ல. மிக பெரிய பிரசங்கங்கள் நிகழ்த்துவதை காட்டிலும் தனித்தனியே ஒவ்வொரு மனிதரின் உள்ளுக்குள் இருக்கின்ற ஆன்மாவைத் தொட்டு உசுப்பிவிடுவது தான் குருவின் வேலை. எவரைப் பார்த்ததும் உள்ளுக்குள் பெரிதாய் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டு அவரை உங்களை அறியாமல் வணங்கத் தோன்றுகிறதோ அவரை பின்பற்றத் தோன்றுகிறதோ, அவரை கொண்டாட ஆசை எழுகிறதோ, அவரை உங்கள் குரு என்று கொள்ளலாம்.

இங்கே ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும். மக்களுடைய யோக்கியதைக்கு ஏற்ப அரசாங்கம் அமைவது போல, கலை இலக்கியம் இருப்பது போல, உங்களின் யோக்கியதைக்கு ஏற்ப உங்களுக்கு குரு கிடைப்பார். உங்களுக்குக் காசுதான் வாழ்வின் பிரதானம் என்றால் உங்களுக்கு காசு தருகின்ற குரு கிடைப்பார். உங்களுக்கு சுகபோகம்தான் பிரதானம் எனில் சுகபோகம் தருகின்ற குரு கிடைப்பார். உங்களுக்கு கடவுள் தேடுதல்தான் பிரதானம் எனில் கடவுளை அறிந்த குரு கிடைப்பார். உங்கள் யோக்கியதைக்கு ஏற்ப குரு கிடைத்த பிறகு தான் உங்களை பற்றியே உங்களுக்கு தெரியவரும். குருவை எங்கே தேடுவது. கடைகளில் குரு தொங்கிக் கிடக்க மாட்டார். குரு இன்னவிதமாக இருப்பார் என்று எவராலும் சொல்லமுடியாது.

ஒரு ஜப்பானிய கேள்வி-பதில் ஒன்று உண்டு. சாலையில் நீ நடக்கும் போது புத்தர் உனக்கு எதிரே நடந்து வந்தால் நீ என்ன செய்வாய் என்று கேள்வி உண்டு. இந்த கேள்விக்கு பதில் சொல்லும்படி பணிப்பார்கள். விழுந்து வணங்குவேன், சுற்றி வந்து கொண்டாடுவேன், என் வீட்டிற்கு அழைத்துப் போவேன், உபசரிப்பேன், எல்லோரையும் கூட்டிக் கொண்டுபோய் புத்தரை அறிமுகப்படுத்துவேன் என்றெல்லாம் பதில்கள் உண்டு. ஆனால், அவை உண்மையான பதில்கள் அல்ல. புத்தர் எப்படி இருப்பார் என்று யாருக்குத் தெரியும். ஏதோ ஒவியத்தைப் பார்த்து, சித்திரத்தைப் பார்த்து புத்தர் இப்படித் தான் இருப்பார் என்று நாம் நினைத்து கொள்கிறோம். புத்தர் என்ன விதமாக இருந்தார் என்று யாருக்கும் தெரியாது, உங்கள் முன் என்னவிதமாக தோன்றுவார் என்பதும் தெரியாது.

புத்தரைத் தேட வேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டால் எதிர்ப்படுகின்ற ஒவ்வொருவரையும் இவர் புத்தரா? அவர் புத்தரா? இது புத்தரா? அது புத்தரா என்று தேடுவது போல நீங்கள் குருவை தேட வேண்டும். எல்லா இடத்திலும், எப்பொழுதும் இடையறாது, இடையறாது தேட வேண்டும்.உங்கள் தேடல் உக்கிரமடைந்தால், ஒருமுகப்பட்டால் குரு உங்களை நேரே வந்து சந்திப்பார். அவராகவே வந்து உங்களை தொட்டு உலுக்குவார். என்னைத் தானே தேடிக் கொண்டிருக்கிறாய். இதோ என்று எதிரே வந்து நிற்பார் என்று சொல்லப்படுகின்றது.

குருவை ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட ரூபத்தில், ஒரு குறிப்பிட்ட அடையாளத்தில் கண்டுகொள்ள முடியாது. குரு மனிதராகத் தான் இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை. பெரும் வானம் சிலருக்கு குருவாக அமைந்திருக்கிறது. காற்றின் இரைச்சல் குருவாக அமைந்திருக்கிறது. குரு தேடுதல் என்பது மனம் ஒருமுகப்பட்ட ஒரு உணர்வு. அந்த உணர்வு நிச்சயம் தேடுபவருக்கு குருவை கொண்டு வந்து கொடுக்கும்.

Thursday, June 18, 2009

தர்மம் வெல்லுமா ? - பாலகுமாரன் பேசுகிறார்.

ஐயா, வாழ்க்கையில் வெற்றி பெற சூழ்ச்சி மிக முக்கியமா.. சூழ்ச்சியில்லாமல் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாதா.. நான் நல்லவன், தர்மம் தலை காக்கும் என்றிருந்தால் அது இழிவான விஷயமா..

பாலகுமாரன் : இது முழுக்க முழுக்க ஒவ்வொரு தனி மனிதனின் ஆற்றலைப் பொறுத்த விஷயம். வலி தாங்கும் திறன், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கொக்கரிக்கும் திறன் போன்ற பல திமிர்களை உள்ளடக்கியது.

சூழ்ச்சி இருந்தால் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்பது இன்று நேற்றல்ல.. சகுனியின் காலத்திலிருந்தே சொல்லப்பட்டு வரும் வாக்கியம். இல்லை என்று சகுனியின் காலத்திலேயே தரும புத்திரரால் மறுக்கப்பட்டும் வந்தது.
“தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்” என்பது பாரதியின் வரிகள். அதாவது சூது, சூழ்ச்சி என்பவை தற்காலிகமாக ஒரு வெற்றியின் தோற்றத்தை தரக்கூடியவை என்பது தான் இதற்குப் பொருள். புளகாங்கிதம் அடைந்து சூழ்ச்சியினால் ஜெயித்து விடலாம் என்று சிலர் மார் தட்டலாம். அடி வாங்கி உருளும் போது அவர் வார்த்தைகள் வேறு விதமாகவும் இருக்கலாம். அல்லது நான் மறுபடியும் சூழ்ச்சி செய்து வெற்றி பெறுவேன் என்று பாதிக்கப்பட்டவரே மார் தட்டவும் செய்யலாம். அதனால் தான் சொல்கிறேன். இது தனிப்பட்ட மனிதனுடைய உரம் பொறுத்த விஷயம்.

அவமானம் தாங்கும் சக்தியைப் பொறுத்த விஷயம். அவமானத்திற்கு துடித்துப் போகிறவர்கள் சூழ்ச்சியில் இறங்க முடியாது, அவமானத்திற்கு துடிப்பதும், துடிக்காததும் இளம் வயதில் நீங்கள் வளர்க்கப்படுவதைப் பொறுத்தது. இளம் வயதிலேயே மானப்பிரச்சனைகள் ஏற்பட்டு அடிதடிக்கு அஞ்சாமல் இறங்கி அங்கேயே உரம் பெற்றால் தான் சூழ்ச்சி செய்கின்ற அல்லது சூழ்ச்சியை தேடிக் கண்டு பிடிக்கின்ற ஒரு மனோபாவம் வரும். சிறு வயதில் பொத்தி வளர்க்கப்பட்டு கிடைக்க வேண்டியவை கிடைத்து வெகுளியாக வளர்ந்தவருக்கு சூழ்ச்சி செய்ய முடியாது. சூழ்ச்சியை எதிர் கொள்ளவும் முடியாது.

இதற்கு அடுத்தபடியாக இடம் பெறுவது ஆசை. ஆசை என்பது பேராசையாகி விஸ்வருபம் எடுத்து உங்களைக் காட்டிலும் பிரம்மாண்டமாக வளர்ந்து, என்ன செய்தாவது வெற்றி அடைந்தாக வேண்டுமென்ற வெறி ஏற்படும். அது சூழ்ச்சி செய்யும். சூழ்ச்சிகளை முறியடிக்கும். கத்திக்கு கத்தி, வெட்டுக்கு வெட்டு, களவுக்கு களவு என்று களமிறங்கும். ஆசை எப்போது பேராசையாகும், சிறுசிறு வெற்றிகள் கிடைப்பதின் மூலம் ஆரம்ப நாட்களில் கிடைக்கும் விருதுகளின் மூலம் மிகப்பெரிய ஆசை வளரும். அது மட்டுமல்லாது சுற்றியுள்ள ஒரு தோழர் வட்டம் உங்களை உசுப்பேற்றி உலுக்கி உயரக்கொண்டு போய் வைத்துவிடும்.

நீங்கள் கார் விட்டு கீழே இறங்குகிற போது, ‘வருங்கால முதல்வர் வாழ்க’ என்று உங்கள் காரைச் சுற்றிக் கொண்டு நூறு பேர் உரக்கக் கத்தினால் கிறுகிறுப்பு வரத்தான் செய்யும். மண்டையிலுள்ள கர்வச் செதில்கள் வளர்ந்து விஸ்வரூபமாகும். கொம்புகள் முளைக்கும், சந்தேகமின்றி ‘நான் வருங்கால தமிழக முதல்வர் தான்’ என்று உங்களுக்கேத் தோன்றும்.

வருங்கால முதல்வர் என்று யாரைச் சொல்வார்கள். கொஞ்சம் காசு இருக்கிறவரை, கொஞ்சம் கூட்டம் சுற்றுகிறவரை ‘வருங்கால முதல்வர் வாழ்க’ என்று கூட்டம் கூடி சொல்வார்கள். அப்படி யாரையெல்லாம் சொல்லியிருக்கிறார்கள், சினிமா டைரக்டரை, நடிகரை, கவிஞரை, ஒரு ஜோசியரைக் கூட ‘வருங்கால முதல்வர் வாழ்க’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

யார் சொல்கிறார்கள், இதே போல சூழ்ச்சித்திறன் பெற்றவர்கள் தான் சொல்கிறார்கள்.“அண்ணா,நீங்க முதல்வர்னா பொதுப்பணித்துறையை எங்ககிட்ட விட்ருங்கண்ணா”. “ஏண்டா...ஏன் பொதுப்பணித்துறையை கேட்கற..”. “அதுலதாண்ணா சம்பாதிக்கலாம். உங்களுக்காக நான் நிறைய செலவு பண்ணிட்டேண்ணா. அதை எடுக்க வேணாமாண்ணா”
தம்பி சிரித்துச் சொல்ல, அண்ணனும் உரத்துச் சிரிக்க, அந்தச் சபையில் ஆனந்தப் பரவசம் கூத்தாடும். ஒருவர் தோளை ஒருவர் பற்றிக் கொண்டு மேலே வந்துவிடலாம் என்ற பேராவல் எழும்பும்.

“அவன் நமக்கு வேணும்ப்பா, கட் பண்ற நேரத்துல கட் பண்ணி விட்டுவிடலாம். நீ கவலைப்படாதே...” என்று ஒருவனை மற்றவனுக்கு எதிரியாக நியமித்து இடையறாது.. இடையறாது தந்திரம் செய்வார்கள்.
அவர் தேவரு.. இவர் வன்னியரு.. அந்த ஏரியாவோ தேவரு ஏரியா, நான் யாரை பிரசிடெண்ட் ஆக்குவேன். உங்களுக்குத் தெரியாதா, இல்லைன்னா இவராண்ட துட்டு இருக்கு, துட்டு என்னப்பா துட்டு, துட்டு எப்போ வேணாலும் சம்பாதிச்சுக்கலாம், ஆளுங்க சம்பாதிக்கறது தான் கஷ்டம். இப்போதைக்கு நமக்குத் தேவை ஆள் படை, படைபலம். படைபலம் இருந்து பதவி கிடைச்சிடிச்சுன்னா துட்டை காலுக்குக் கீழ் கொட்டுவாங்க. அப்படியே மணல் ஒதுக்கறா மாதிரி காலாலயே துட்டு ஒதுக்கி எடுத்துட்டுப் போயிடலாம்”

கலையிலிருந்து அரசியலா அல்லது அரசியலே கலையா. இடையறாது நிமிடத்திற்கு நிமிடம் குணம் மாறும். சூழ்ச்சி வெற்றியை நோக்கி விறையும். அந்த சமுத்திரத்தில் இறங்கி நீந்தி நெஞ்சாழம் போய்விட்டால் போதும், பிறகு கரைக்கு மீளுவது கடினம். உங்களைத் தாண்டிப்போன அலைகள் திரும்ப வந்து உங்களை உள்ளுக்குள் தள்ளிக் கொண்டிருக்குமே தவிர, வெளியே சேர்க்காது.

சமுத்திரம் உங்களை எப்போது கரை சேர்க்கும் தெரியுமா, நீங்கள் செத்த பிறகு. செத்து மிதந்த பிறகு தான் உங்களை கரையில் ஓதுக்கும். அதனோடு இருந்து கைகால் அசைக்க அசைக்க நடு சமுத்திரத்திற்கு இழுத்துப் போகப்படுவீர்கள். சூழ்ச்சி வெகு நிச்சயம் வெற்றி தரும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் எதற்காக சூழ்ச்சி? வெற்றி பெற, எதற்காக வெற்றி. அதுவொரு சந்தோஷம். ஆனால், வெற்றி பெற்ற பிறகு சந்தோஷமாய் இருக்க இயலுமா, நிம்மதியாய் சாப்பிட முடியுமா, அமைதியாய் தூங்க முடியுமா, நலமாய் புணர முடியுமா, யாரைக் கண்டாலும் கனிந்து கைகூப்ப முடியுமா, முடியாது. பெற்ற தாய் மீது சந்தேகம் வரும், மனைவியை வெறுக்கத் தோன்றும். மகனை ஆள் விட்டு கண்காணிக்கத் தோன்றும், பெண்களை விலைக்கு வாங்கத் தோன்றும். சூழ்ச்சி என்று ஆரம்பித்துவிட்டால் எல்லைகள் உண்டா, எல்லா நாகரிகமும் உடைத்து நாசமாக்கி, சூழ்ச்சி மட்டுமே சூழ்ந்து நிற்கும்.

பட்டயம் எடுத்தவன் பட்டயத்தாலே சாவான் என்பது வேதவாக்கு. சூழ்ச்சியை எடுத்தவன் சூழ்ச்சியாலேயே மரணமடைவான் என்பதைத் தான் அந்த வாக்கியம் சொல்கிறது. இதில் மோசமானது என்ன தெரியுமா, சூழ்ச்சியில் ஜெயித்து வெற்றிக் கொடி நாட்டி ஊர் வலம் வந்து பிறகு சூழ்ச்சியால் தாக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு அடிபட்டு துவண்டு கீழே சரிந்து விழுந்த பிறகு ஊரும், உற்றாரும் பழிக்க வெற்றி பெற்ற நாட்களில் எப்படியெல்லாம் சிலிர்த்துக்கொண்டோம் என்று நினைத்து நினைத்து வெட்கப்பட்டு குலைந்து இறுதி நேரத்திற்காக காத்திருக்கிற நிலைதான் கொடுமையானது. அப்போதும் சூழ்ச்சி எண்ணம் தோன்றும், அது இன்னமும் கொடுமையானது.


சூழ்ச்சி ஓரு போதையான விஷயம். ஒருமுறை செய்து பழக்கப்பட்டு விட்டால் பிறகு திரும்ப திரும்ப செய்யத்தான் தோன்றும். சூழ்ச்சி வேண்டாம். தர்மம் தலைகாக்கும் என்று பலநூறு கதைகள் நம்மிடையே புழங்கி வருகின்றது. ஆனாலும் சூழ்ச்சி தான் உத்தமம் என்று சொல்லி வருபவர்கள் இன்னும் இருக்கத் தான் செய்வார்கள்.

Thursday, June 4, 2009

பொன்னூஞ்சல் – எழுத்துச்சித்தருடன் ஒரு பேட்டி – பாகம் -3

கிருஷ்ணதுளசி :இப்பொழுது உங்களை ஐ யா என்றும் குரு என்றும் அழைக்கிறார்களே. இது புது டிரண்டாக இருக்கிறதே. இந்த டிரண்ட் உங்களுக்கு உவப்புத்தானா?

பாலகுமாரன்: எனக்கு மறுப்பேதும் இல்லை. என்னை ஐ யா என்று அழைத்தாலும், பாலகுமாரா என்று அழைத்தாலும் ஒன்றே. என்னுடைய மூப்பின் காரணமாக என்னை ஐ யா என்று அழைக்கிறார்கள். என்னுடைய விஷய கன த்தின் காரணமாக, அதைப் புரிந்து கொண்டு வியப்பவர்கள் குரு என்று கூப்பிடுகிறார்கள். என்னை நன்கு அறிந்த சிலர் எனக்குள் சின்ன சின்னதாக இருக்கும் சில சிறப்புகளையும் கண்டுபிடித்து வியந்து போய் குரு என்று நமஸ்கரிக்கிறார்கள். ஏதோ ஒரு வகையில் வழிக்காட்டியாக, கைவிளக்காக, வெளிச்சமாக நான் அவர்களுக்கு இருந்திருப்பதை நன்றியோடு உணர்ந்து குரு என்று சொல்பவர்களும் உண்டு. எப்படி அழைத்தாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை. இதில் நான் உச்சிக் குளிர்ந்து நிலைத் தடுமாறவும் இல்லை. நான் எங்கேயிருக்கிறேன், என்ன செய்துக் கொண்டிருக்கிறேன் என்ற தெளிவு எனக்கு பலமாக இருக்கிறது.

கிருஷ்ணதுளசி :எழுதுவதை ஏன் குறைத்து விட்டீர்கள்?

பாலகுமாரன்:
ஒரு ஓய்வு போலவும் ஒரு இடைவெளி வேண்டும் என்ற நினைப்பாலும் நான் எழுதுவதை குறைத்துக் கொண்டிருக்கிறேன். நான் வெறும் அரட்டைக்காரன் அல்ல . நான் உழைப்பதற்கு அஞ்சியதே இல்லை. நான்கு மணி நேரத் தூக்கம். வாரத்தில் ஏழு நாளும் வேலை என்று இடையறாது உழைத்துக் கொண்டிருந்தவன் நான். இருதய அறுவை சிகிச்சைக்கு பிறகும் இருபத்தியேழு நாட்களில் எழுந்து உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்து விட்டேன். மிக உற்சாகமாக வேலை செய்வதும், வேலையின் மீது காதலோடு இருப்பதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

‘உடையார்’ என்ற என்னுடைய மிகப் பெரிய கள மான அந்த நாவலை எழுதி முடித்து விட்டு அது கொடுத்த அயர்ச்சியில் சற்று அமைதியாக இருக்கிறேன். ஆனாலும் மரண த்திற்குப் பிறகு உள்ள வாழ்க்கையைப் பற்றியும், இ ராஜேந்திர சோழனைப் பற்றியும் நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய ஆன்மீக அனுபவங்களை ஒன்று சேர்த்து ‘காதலாகிக் கனிந்து’ என்ற ஒரு புத்தகம் வந்திருக்கிறது. மகான் ராகவேந்திரர் பற்றி ‘பிருந்தாவனம்’ என்ற பெயரில் இன்னொரு புத்தகம் வெளி வ ந்திருக்கிறது. நான் தொடர்ந்து எழுதுவேன். எழுதிக் குவிக்கின்ற எண்ணம் மட்டுப்பட்டிருக்கிறது. உடல் நலமும் அதற்கு காரணம். நோய் என்று ஏதும் இல்லை. ஆனாலும் குறைந்தப்பட்சம் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியமாக இருக்கிறது. உடம்பு தூக்கம் வேண்டும் என்று கேட்கிறது. அதனால் உடம்போடு இயைந்து ஒத்துழைத்து அதன் சொல் கேட்டு அதற்கு ஏற்றபடி என் வேலை நேரத்தை மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

தொழிற்சாலை இயங்கி கொண்டிருக்கிறது. கொஞ்சம் உற்பத்திக் குறைவு அவ்வளவே.


கிருஷ்ணதுளசி :மீண்டும் குதிரை கவிதைகள் எழுதியிருக்கிறீர்களே. இன்னும் பல குதிரை கவிதைகள் வருமா?

பாலகுமாரன்: ஒரு எழுத்தாளனிடமிருந்து என்ன வரும், எப்பொழுது வரும் என்று சொல்லமுடியாது. அந்த எழுத்தாளனால் கூட யூகிக்க முடியாது. இன்னும் கவிதைகள் எழுத வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. ஆனாலும் என்ன வரும் என்று சத்தியமாக சொல்ல முடியவில்லை. குதிரை கவிதைகள் மட்டுமல்ல அடி ஆழ்த்தில் இருக்கின்ற கடவுள் தேடலை கவிதை ஆக்குகின்ற ஒரு எண்ணம் இருக்கிறது. நான் உணர்ந்த, கன த்த, இருண்ட, அடர்த்தியான ஒரு தனிமையை கவிதை ஆக்க முயற்சிக்கவும் நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இது தமிழுக்கு புதிதாக இருக்கக் கூடும்.


கிருஷ்ணதுளசி :உங்களுக்கு பெண் வாசகர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்களே இது உண்மையா?

பாலகுமாரன்: அப்படி ஒரு சர்வே இங்கு யாரும் எடுத்தாக தெரியவில்லை. நானும் எடுக்கவில்லை. வாசகரை ஆண் என்றும் பெண் என்றும் பிரித்துப் பார்ப்பதில் எனக்கு உவப்பில்லை. ஆணாயினும் சரி ,பெண்ணாயினும் சரி சந்திக்க நேர்ந்தால் அந்த வாசகரோடு அவரைப் பற்றிய விஷயங்களை கிரஹித்துக் கொள்வது என் வழக்கம். அவரைப் படிக்கத் தூண்டுவதும் என் இயல்பு. என்ன படித்திருக்கிறார், எப்படி படித்திருக்கிறார் என்று பார்ப்பது என் பழக்கம். பெண் வாசகர்கள் தான் அதிகம் என்று எவரேனும் ஒரு பட்டியலிட்டால் என க்கு அதில் ஆட்சேபணையும் இல்லை. ஒரு எழுத்தாளருக்கு பெண் வாசகர்கள் அதிகமாக இருப்பதில் யாருக்கு வருத்தம் இருக்க முடியும்.


கிருஷ்ணதுளசி :உங்களை சந்திக்கும் வாசகர்களிடம் நீங்கள் என்ன பேசுவீர்கள்?

பாலகுமாரன்: வாசகரிடம் இலக்கியம் தான் பேச வேண்டும் என்று நான் எந்தக் கட்டுபாடும் விதித்துக் கொள்ளவில்லை. அந்த வாசகரின் தொழில் பற்றியும், அந்த தொழிலில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் பற்றியும், அவர் குடும்பம் பற்றியும், குடும்பத்தினுடைய மேன்மைப் பற்றியும், அதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் நான் பேசுவது உண்டு. அவையும் இலக்கியம் தான் என்பது என் அபிப்ராயம்.

Friday, October 10, 2008

சில கேள்விகள் – சில பதில்கள்


ஐயா, குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம் தானா?

ஒரு குழந்தைக்கு தவளையின் இருதயம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்தானா. ஒரு குழந்தைக்கு கீரை தண்டு எப்படி வளர்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் தானா. ஒரு குழந்தைக்கு செவ்வாய் கிரகமும், குருவும் எப்படி இருக்கின்றன என்று தெரிந்து கொள்வது அவசியம்தானா. ஆ மெனில் செக்ஸ் கல்வியும் அவசியம்.

நாம் காணும் கனவுகளுக்கு ஏதேனும் அர்த்தம் உண்டா? எனக்கு பல கனவுகள் வருகின்றன. நான் அந்தக் கனவில் கத்துகிறேன் என்று துணைவியார் சொல்கிறார். ஆ னால் எழுந்தப் பிறகு எனக்கு எதுவும் ஞாபகம் இருப்பதில்லை. கனவுகள் பற்றி சற்று விளக்க முடியுமா.

மனதின் இன்னொரு மொழிதான் கனவு. அந்த மொழிக்கு லிபி இல்லை. ஏன் சப்தம் கூட இல்லை. மனதின் மெள ன மொழி நாடகமாக கண் முன்னே விரியும். இயக்கங்களும், ஆ சைகளும், பயங்களும், கோபங்களும் மனதின் மெள ன மொழியில் வெளிப்படும். கனவு காணும் பொழுது விழிப்பாக இருந்தால் விழிக்கும்போது அந்தக் கனவைக் கைபற்றி விடலாம். கனவு காணும் பொழுதே “அட கனவு” என்று எவருக்கு தோன்றுகிறதோ அவர் கனவின் உத்தேசங்களை அறியக் கூடியவர். இதற்கு படுக்கும்பொழுதே என்ன கனவு வந்தாலும் நான் நிதானமாக புரிந்துக் கொள்வேன் என்று தீர்மானித்துக் கொள்வது நல்லது. உங்கள் உறுதியைப் பொறுத்து கனவில் உங்களுக்கு விழிப்பு ஏற்படும். கனவு முடிந்த பிறகு, விழிப்பு ஏற்பட்ட பிறகு கனவு காணாமல் போகும். அது தான் இயல்பு. உடனே கனவைத் துரத்தக்கூடாது. என்ன கனவு, என்ன கனவு என்று பதறக்கூடாது. பதறினால் கனவு இன்னும் அடி ஆ ழ த்தில் போய் சொருகிக் கொள்ளும். வெளியே வராது. கனவை மறந்து விடுங்கள். கனவை நோண்டி எடுப்பதை தவிர்த்து விடுங்கள். ஒரு அரைமணி நேரத்திற்குள் அந்தக் கனவு வந்து நிற்கும் அல்லது அதன் ஏதாவது ஒரு நுனி உங்கள் முன்பு வந்து நிற்கும். அந்த நுனியைப் பிடித்து இழுக்க மொத்தப் புடவையும் வெளியே வந்து விடும். அப்பொழுது கனவின் உத்தேசமும் உங்களுக்கு தெரிந்து விடும். கனவு என்பது சில சமயம் நீங்கள் என்ன செய்யக்கூடாது, என்ன செய்யலாம் என்றும் சொல்லக்கூடிய திறம் வாய்ந்தவை. கனவோடு போரிடாமல், கனவு மறுபடியும் நினைவுக்கு வரவேண்டும் என்று காத்திருக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல, கனவு காணும்பொழுதே கனவைப் பற்றிய அறிவு வேண்டும் என்று படுக்கும் முன்பு தீர்மானம் செய்யுங்கள். பழக பழக இது எளிதாக கைகூடும்.

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பார்த்து நீங்கள் கோபப்படுவதை கவனித்திருக்கிறேன். இந்த அவசர யுகத்தில் இந்த விதிகள் எல்லாம் அவசியமா?

அவசரமாக போவதற்கு தான் விதிகள். அலட்சியமாக போவதற்கு அல்ல. அவசரமாகப் போகிறவர் ஆ பத்தில்லாமல் போக வேண்டும் அல்லவா. அவசரமாக வேறு ஏதாவது இடத்திற்கு போவதற்குத் தானே முயற்சிக்கிறார். அவசரமாக மேல் உலகம் போகவா முயற்சிப்பது. அதைப் பார்த்து ஒருவர் பதறக்கூடாதா. ஒருவர் செய்கிற தவறு அவருக்கு மட்டும் மரணம் கொடுக்காமல் மற்றவருக்கும் பெரிய இடைஞ்சல் கொடுத்து விடுகிறது. இடது பக்கம் ஓவர்டேக் செய்வது போன்ற கேவலமான விஷயம் வேறெதுவும் இல்லை என்பது என் அபிப்ராயம். சந்து முனையில் லாரிகள், கார்கள், ஆ ட்டோகளை நிறுத்துதல் அடுத்தபடியான கேவலம். ஒரு தெருவில் திரும்பும் போது எதிரில் வரும் வண்டியை தெரியாமல் மறைக்க இம்மாதிரியான விஷயங்கள் தடை செய்கின்றன. போக்குவரத்தை மரியாதையாக மதிக்க கற்றுக்கொண்டால், போக்கும் வரத்தும் மிக எளிதாக இருக்கும். இல்லையெனில் நூற்றுகணக்கான விபத்துகள் ஒரு நாளைக்கு நிச்சயம். பட்டாலும் புத்தி வராத மனிதர்கள் இந்தியாவில் தான் நிறைய உண்டு.

நீங்கள் சமீபமாக பார்த்து ரசித்த படம்?



குறுந்தகட்டில் ஹோம் பாக்ஸ் ஆ பிஸ் என்கிற எச்.பி.ஒ.வின் “ரோம்” என்கிற டெலிவிஷன் சீரியல் பார்த்தேன். பன்னிரண்டு அத்தியாய ங்களாக ஜுலியஸ் சீஸர், மார்க் ஆ ண்டனி, புருட்டஸ் என்போரை வைத்து சாதாரண ரோமனிய போர்வீரர்களை மையமாக்கி, ரோமானிய பெண்களை முக்கியமான கதாப்பாத்திரம்
ஆ க்கி அருமையா டிவி சீரியல் செய்திருந்தார்கள். இதைப்போல நான் எழுதிய உடையார் என்கிற ராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாற்றை சமூகப் பொறுப்போடும், கலை நயத்தோடும் எவ ரேனும் எடுக்க மாட்டார்களா என்ற ஏக்கம் எனக்கு வந்தது. தமிழர் பற்றி தெரிந்துக் கொள்ளவேண்டும் என்றால் மானாட மயிலாட என்று இருக்க முடியாது. சரித்திரம் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும். தமிழின் மேன்மை சரித்திரத்தில் இருக்கின்றது. வெறும் ஆ ட்டத்தில் இல்லை.

உங்களுக்கு பேண்டு வாத்தியம் பிடிக்குமா?

மிகவும் பிடிக்கும். நாதஸ்வரம், தவிலை விட, தாரை தப்பட்டையை விட இந்த ஸாக்ஸபோன், பேண்டு வாத்தியம் மிகவும் காதுக்கு இதமாக இருப்பதாக என்னுடைய அபிப்ராயம். முன்பெல்லாம் வட்டமாக பீச்சில், பார்கில் நின்று இந்தப் பேண்டு வாத்தியக் குழு இசைக்கும்.
நல்ல கர்னாடக சங்கீதங்களை துல்லியமாக வாசிப்பார்கள். கர்னாடக சங்கீதத்தை பேண்டு வாத்தியத்தில் கேட்பது தனி சுகம். அது தயிர் சாதத்தை ஸ்பூனும், முள் கரண்டியுமாய் சாப்பிடுவது போன்ற அழகு.

கயிலாய மலையை போய் காசுக் கொடுத்து பார்த்து விட்டு அது வேறொன்றுமில்லை வெறும் பனி படர்ந்த மலை என்று என் நண்பர் சொன்னார். அவர் சொல்வது சரிதானா. வெறும் கல்லைப் பார்த்து கடவுள் என்று எப்படி பரவசப்படுவது?

பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிற பெற்ற தாயைப் பார்த்துவிட்டு இது என்ன வெறும் எலும்பும், சதையும், நரம்பும், ரத்தமும் கலந்த ஒரு பிண்டம். இதைப் பற்றி அம்மா என்று கொண்டாட என்ன இருக்கிறது என்று எவனாவது சொல்வானா. தாய்மை போன்ற உணர்வுகள் தோற்றம் தாண்டியவை என்று அறியாதவன் மனிதன் தானா.

Sunday, July 27, 2008

அம்மா... பாலகுமாரனின் நினைவுகள்


‘தோடுடைய செவியன்’ அம்மா பாடினாள்.
‘டுடைய என்றால் என்ன?’ என்று நான் கேட்டேன்.
‘தோடு உடைய செவியன்’ என்று அம்மா பிரித்து சொன்னாள்,

அடடா!! இப்படித்தான் தமிழைப் பிரித்துப்படிக்க வேண்டுமா? எனக்கு எட்டு வயதில் தமிழை எப்படி பிரித்துப் படிப்பது என்பது புரிந்துப் போயிற்று. தமிழ் சிக்கலாக இருந்தாலும் எப்படி பிரிப்பது என்பதை நான் யோசித்துப் பார்க்க கற்றுக் கொண்டேன்.

அம்மா நாயன்மார் கதைகளை சொன்னார், திருவிளையாடல் புராணம் சொன்னார். ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை விளக்கினார். எனக்கு பத்து வயது. அம்மாவும் நானும் சமையற்கட்டில் இருந்தபடி பேசிக்கொண்டே இருப்போம். பலதும் நான் கற்றுக்கொண்ட இடம் சமையற்கட்டு.


‘பாலகுமாரனைப் பற்றி கவலைப்படாதே சுலோச்சனா அவன் விழுந்து புரண்டு எழுந்து வருவான். எல்லோருமே பிறக்கின்ற பொழுது ஞானியாக பிறப்பதில்லை.நடுவில் சில விஷயங்கள் மனிதர்களை மாற்றும். உயரத் தூக்கி வைக்கும்’ என்று என் உறவுக்காரர் என் முகத்தைப் பார்த்தப்படியே சொன்னார். ‘இவனைதானே மகாப்பெரியவாள் முன்னாடி போய் நிறுத்தினே’ என்று கேட்டார், அம்மா, ஆம் என்று தலை அசைத்தாள், அது பற்றி அம்மாவிடம் வினவினேன். சென்னை சமஸ்கிருத கல்லூரியில் மகாபெரியவாள் முகாமிட்டிருந்தபோது அங்கே தனியே அமர்ந்திருந்த அவரிடம் என்னை கொண்டு போய் நிற்க வைத்து நமஸ்கரிக்க சொல்லி, ‘நீங்கள் இவனை ஆசீர்வதிக்க வேண்டும்’ என்று அம்மா கேட்க, மகாப்பெரியவாள் என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். மறுபடியும் அம்மா மெல்ல போய் கேட்க 'நீ இவனை கருவுற்றிருக்கும் போதே தடவி தடவி ஆசீர்வாதம் செய்திருக்கிறாய். அது போதும், அது இவனை நல்ல இடத்திற்கு கொண்டு வரும்’ என்று அவர் சொன்னாராம். அம்மா இதை சொல்ல, உண்மையா என்று கேட்க, அம்மா சிரித்துக் கொண்டே நகர்ந்து போனார்.




கார்ட்டூன் என்ற சித்திர கதைகளை தன்னுடைய பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுப்பாள். முழு ஆங்கிலத்தையும் உரக்க படிக்க சொல்வாள்.நான் படிப்பில் சுமாராக இருந்தாலும், மொழிகள் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட அவளே காரணம். பதிமூன்று வயதில் ‘பொன்னியின் செல்வன்’ படிக்கக் கொடுத்து, ஆழ்ந்து படி. உன்னை இது எங்கேயோ கொண்டு போகும் என்று சொன்னாள். சுற்றுசூழ்நிலை மறந்த ஒரு நிலைìகு கொண்டு போகும் என்று நினைத்து நான் அதைப் படித்தேன். எங்கேயோ கொண்டு போகிறது அம்மா என்று அவள் வாக்கியத்தை சொன்னேன். என்ன புரிந்தது என்று கேட்டாள். எல்லாம் புரிந்தது என்று சொன்னேன். எந்த இடம் பிடித்தது என்று கேட்டாள். வந்தியத்தேவனும் குந்தவையும் காதலித்த இடம் எனக்கு பிடித்தது என்று கூறினேன். ஏன் பிடித்தது என்று கேட்டாள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தொடாமல் பேச்சிலேயே காதலிக்கிறார்கள் என்று சொன்னேன். ‘பதிமூன்று வயதில் இது புரிந்துப் போயிற்றா நீ மிகவும் சிரமப்படுவாய். அதனால் என்ன. சிரமப்படுவதில் தவறில்லை. புரிந்து கொள்ளுவது தான் முக்கியம்’ என்று சொன்னாள்.



பதினாறு வயதில் இராமாயண சொற்பொழிவுக்கு போய் கொத்தமங்கலம் சுப்பு அவர்களிடம் சில குறுக்கு கேள்விகள் கேட்டு விளக்கம் கேட்க, ‘அதற்கு உனக்கு வாழ்க்கை பதில் சொல்லும். நான் சொல்லமுடியாது. ஆனால் சபையில் தைரியமாகக் கேள்வி கேட்டதற்கு என் அன்புப் பரிசு’ என்று பெரிய மாலையை என் கழுத்தில் போட்டார். நான் அந்த மாலையோடு அம்மாவிடம் போய் நின்றேன். என் கழுத்தில் விழுந்த முதல் மாலை என்று அவள் வாய் திறந்து சொன்னாள். இ ன்று நல்ல நாள், உனக்கு மாலை போட்டவர் மிக நல்ல மனிதர், நீ வாழ்வாங்கு வாழ்வாய் என்று ஆ சிர்வதித்தார். அ ந்த மாலை நாராகி என் வீட்டில் வெகுநாள் வரை தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் குப்பையில் போட அ ம்மா முயலவே இல்லை.




அப்பாவின் காட்டமான, ஆ த்திரமான, அசூயையான பேச்சிற்கு அம்மா பலமுறை இரையாகி இருக்கிறாள். ‘படிப்பு என்ன பெரிய படிப்பு, உன் படிப்புல நாய் .... ....’ என்ற வசவை அப்பா அடிக்கடி உபயோகப்படுத்துவார். ‘நான் வேறு என் படிப்பு வேறு.அதை ஏன் கேவலமாக பேசுகிறீர்கள்’ என்று அம்மா எதிர்த்த போது, ‘அப்படியா உன் படிப்பு தலையில இரண்டு அடி போடறேன், என்று சொல்லி அவள் கன்னத்தில் அறைந்தார். ‘நான் உன்னை அடிக்கலையே உன் படிப்பைதானே அடிச்சேன்’ என்று சொல்ல, நான் விக்கித்துப் போய் நின்றேன். முரட்டுத்தனமாய் அவரிடம் முட்ட முயன்ற போது, தடுத்தபோது, “முட்டினால் அவர்களுக்கு புரியாது, முரண்டு செய்தால் அவர்களுக்கு புரியாது.வாழ்க்கை அவர்களுக்கு பாடம் சொல்லித்தரும். முரடர்களை ஊன்றிக் கவனித்துப்பார், உன்னிடமிருந்த முரட்டுத்தனம் விலகும்” என்று சொன்னார்.



இருபத்தியோரு வயது. நான் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை செய்துக்கொண்டிருந்தேன். என் வீட்டிற்கு ஒரு உறவினர் வந்தார். மின்சாரம் தடைப்பட்டதால் ஹரிக்கேன் விளக்கை ஏற்றி வைத்தோம். இதற்கு ஏன் ஹரிக்கேன் விளக்கு என்று பெயர் தெரியுமா? என்று கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. நான் யோசித்தேன் ஒளி நிரம்பியதால் இதற்கு ஹரிக்கேன் என்று பெயர் என்று சொன்னேன், புரியவில்லையே என்று சொன்னார். ஹரி என்றதால் ஒளி என்று பெயர் அதனால் இது ஒளி நிரம்பிய பாத்திரம் கேன் பாத்திரம். கெரசின் வாங்குகிற டப்பா என்பதாக நான் சொன்னவுடன் அவர் வாய்விட்டு சிரித்தார். ஹரிக்கேன் என்பது ஒரு புயல். அமெரிக்காவில் வீசும் புயலுக்கு ஹரிக்கேன் என்று பெயர். சியாவில் வீசும் புயலுக்கு சைக்லோன் என்று பெயர். ஹரிக்கேன் என்ற புயலை தாங்கும் வண்ணம் அமைத்ததால் இதற்கு ஹரிக்கேன் லேம்ப் என்று பெயர் என்று சொன்னார். வீடு விழுந்து விழுந்து என்னுடைய விளக்கத்திற்கு சிரித்தது, அம்மாவும் சிரித்தாள். எல்லோரும் போன பின்பு ‘உன்னுடைய விளக்கமும் நன்றாக இருந்தது என்று ஒளி நிரம்பிய பாத்திரம் ஹரிக்கேன் என்று சொன்னாயே. உன்னுடைய கற்பனை எனக்கு பிடித்திருக்கிறது’ என்று சொன்னாள். நான் தவறு செய்தாலும் என் அம்மா என்னை கிறங்கிப் போய் கேட்டிருக்கிறாள். இதை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன்; காதார அனுபவித்திருக்கிறேன்.




அம்மா என்பவள் மகள் வடிவம்; மகள் என்பவள் அம்மாவின் ரூபம் என்று உணர்ந்திருக்கிறேன். என் அம்மாவிற்கு வயதாகிவிட்டது. இந்த மார்கழி தாண்டாது, இந்த பொங்கலுக்கு உயிரோடிருக்க மாட்டேன், இந்த தீபாவளிக்கு நானில்லை என்றெல்லாம் பல நூறு முறை சொல்லி எண்பத்து மூன்று வயது வரை திடகாத்திரமாகவே வாழ்ந்தாள். மூப்பின் காரணமாகத் தான் ஹ்ருதயம் தவித்ததே தவிர பெரும் நோய் எதுவும் அவளை தீண்டவில்லை. அம்மா என் தங்கையோடு என் வீட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இன்னொரு வீட்டில் இருந்தாள். என்ன தோன்றியதோ தெரியவில்லை.‘நான் உன்னோடு சில நாட்கள் இருக்கிறேன்’ என்று தனது பெட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு என்னிடம் வந்து விட்டாள்.



என் வீடு விசாலமானது. அவளை அன்போடு ஏற்றுக் கொண்டது. என் மனைவியர் இருவரும் என் அம்மாவின் மீது அன்பு மழை பொழிந்தார்கள். அவளுக்கு ஓடி ஓ டி உதவிகள் செய்தார்கள். என் அம்மாவும் ஒரு தமிழ் பண்டிதையைப் போல பள்ளிக்கூடத்து ஆ சிரியைப் போல கம்பீரமாக அந்த உதவிகளைப் பெற்றுக்கொண்டாள். வீட்டிற்கு வெள்ளை அடிக்க பேச்சு வந்த போது ஒரு மூன்று நாள் தங்கை வீட்டில் இருக்கிறாயா என்று தெரியாமல் கேட்டு விட்டேன்.பெரிய கோபம் வந்து விட்டது. ‘என்னை இங்கிருந்து ஒழித்து விட தீர்மானம் செய்து விட்டாயா. நான் இங்கிருப்பது பிடிக்கவில்லையா. நான் தண்டசோறு என்று நினைக்கிறாயா. உனக்கு நான் பாரமாக இருக்கிறேனா’ என்று வேகமாக வார்த்தைகளை அடுக்கினாள். என் அம்மாவின் குணம் இது. எப்பொழுது கொஞ்சுவாள், எப்பொழுது சீறுவாள், எதற்கு கொஞ்சுவாள், எதற்கு சீறுவாள் என்று கணிக்கவே முடியாது.




அம்மாவை நாங்கள் எல்லோரும் சேர்ந்து சமாதானப்படுத்தி, தூசு தும்பு இருக்குமே என்று சொன்னோம் என்று சொல்ல, அது பற்றி அக்கறை இல்லை என்று சொல்லி விட்டாள். வீடு வெள்ளையடிப்பு நடந்தது அம்மா அந்த தூசுக்கு நடுவே மேற்பார்வை பார்த்து கொண்டிருந்தாள். அந்த வேலையாட்களையும் அதட்டி வேலை வாங்கி கொண்டிருந்தாள். ‘எனக்கு இப்பத்தான் தெரிகிறது. நீ ஏன் போகமாட்டேன் என்கிறாய் என்று .கீழே வேலை செய்யறதுக்கு பத்துப்பேர் கிடைத்தால் போதும். உரத்தகுரலில் ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கலாம் இல்லையா? டீச்சராகவே இருந்து பழகிடுச்சு இல்லையா?’ என்று கேட்க வாய் விட்டு சிரித்தாள். நான் அவளை கேலி செய்தாலும் அவளுக்கு பிடிக்கும்.

இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு தடி ஊன்றி தன் கட்டிலை விட்டு இறங்கி ஹால் முழுவதும் நடந்து டைனிங் டேபிள் அருகிலே வந்து உட்கார்ந்து கொண்டாள். நாம் இரண்டு பேரும் சாப்பிடாலாமா என்று கேட்டாள். காலை சிற்றூண்டிக்கு என் எதிரே அமர்ந்து கொண்டாள். ‘இறப்பது என்றால் என்ன. மரணம் என்பது என்ன.மரணத்திற்கு பின் மனிதனுடைய நிலை எது.மரணம் வரும்போது ஒருவர் என்ன செய்ய வேண்டும்’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டாள். நான் அமைதியாய் உட்கார்ந்திருந்தேன். ‘தெரிந்தால் சொல், தெரியவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம்’ என்று சொன்னாள். ‘எனக்குத் தெரியும், உனக்குத் தெரிய வேண்டுமா என்பது பற்றி யோசிக்கிறேன்’ என்று பதில் சொல்ல, ‘அதையும் நீயே முடிவு செய். எனக்கு தெரிய வேண்டாம் என்றால் வேண்டாம்’ என்று சொன்னாள், ‘இல்லை நான் சொல்கிறேன்’ என்று பதில் சொன்னேன். பதில் சொல்லும் போதே உள்ளே ஆ டிற்று. மரணம் பற்றியும், அது வருகிற விதம் பற்றியும், மரணத்திற்கு பின் மனதின் நிலை பற்றியும், மனம் எதனோடு சேர்ந்து கொள்ளும் என்பது பற்றியும் நான் மெல்ல விவரித்தேன். அம்மா அசையாமல் கேட்டு கொண்டிருந்தாள். மெல்ல பேச்சு முடித்து அவளைப் பார்த்தேன். அவள் பதில் கூறாமல் எழுந்து தன்னுடைய படுக்கைக்கு போனாள். குழப்பம் அடைந்து விட்டாளோ. கோபம் அடைந்து விட்டாளோ என்று தோன்றி நான் பின்னாலேயே போனேன். வேறு ஏதேனும் கேள்விகள் உண்டா என்றேன். இல்லை, எவ்வளவு அழகாக ஒரு விஷயத்தை சொல்கிறாய், எத்தனை தெளிவாக யோசிக்கிறாய், உன்னை நினைத்தால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. உன் எதிரே அழுதால் நான் மரணத்திற்க்கு பயந்து அழுகிறேன் என்று நினைத்துக்கொள்வாய், நான் இப்படிப்பட்ட புத்திசாலியான பிள்ளையைப் பெற்றேனே என்று கண்கலங்குகிறேன். அதனால்தான் இங்கே வந்து விட்டேன். நீ போ. நான் கொஞ்சம் அழுகிறேன் என்று சொல்லி என்னை துரத்தி விட்டாள். எனக்கு அழுவதா? சந்தோஷப்படுவதா? தெரியவில்லை.

அம்மா இறந்தாள்.



நான் அழுதேன்.

அம்மாவை ஹாலில் கிடத்தியிருந்தார்கள். என்னுடைய நெருங்கிய நண்பர் தேவக்கோட்டை வா. மூர்த்தி வந்தார். அவரைப் பார்த்ததும் அம்மாவின் நினைப்பு அதிகரிக்க அழுதேன். தேவக்கோட்டை வா. மூர்த்தியை தனது இரண்டாவது மகன் என்று அம்மா அடிக்கடி சொல்வார். என்னுடைய சகோதரன் போன்ற நினைப்பு எழுந்ததால் அழுதேன். அம்மாவை வேனில் வைத்து அடையார் மின்சார சுடுகாட்டிற்கு எடுத்து போனோம். அம்மாவை அங்கு கிடத்தியிருந்தார்கள்.அடுத்த சிதைக்காக காத்திருந்தார்கள். அம்மாவுக்கு அருகில் உட்கார்ந்த படி, அம்மாவையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன், மிக ஆ சையாய் அவள் நெற்றியை, முகவாயை, தோள்பட்டையை தொட்டு தடவி விட்டேன். எத்தனை அழகு,எத்தனை அமைதி, எத்தனை அனுபவம் என்று பெருமிதப்பட்டேன். அம்மாவை தண்டவாளம் போன்ற இடத்தில் வைத்து, வயிற்றில் வரட்டி வைத்து, மேலே கற்பூரம் வைத்து என்னை கொளுத்தச் சொன்னார்கள். சீதைக்கு தீ மூட்டியது போல அந்த கற்பூரத்தை ஏற்றினேன். அம்மாவை சடேர் என்று உள்ளே தள்ளினார்கள். நெருப்பு உள்ளே வாங்கி கொண்டது, அம்மாவை விழுங்க துவங்கியது. நான் கதறினேன்.



என்னைப் பலரும் தாங்கிப்பிடித்து சமாதானம் செய்தார்கள். அதற்கு பிறகு நான் அழவில்லை. ஏனெனில் அம்மா தனியாக இல்லை. என்னோடு இரண்டற கலந்து விட்டார். இன்றைய என் தமிழ் அம்மா எனக்கு பிச்சையிட்ட தமிழ். என் தமிழில் அம்மா இருக்கிறார்.

Sunday, July 20, 2008

சிலை சொல்லும் செய்தி - நான்கு

ஐயா, எப்பொழுதும் சோழர்காலத்து சிலைகள் பற்றியே பேசுகிறீர்கள். உங்களுக்கு வேறு தேசத்து சிலைகள் பற்றி எதுவும் தெரியாதா?



உங்களுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. அதனால் என்னை தெரியாதா என்று கேள்வி கேட்கிறீர்கள். எனக்கு தெரிந்ததை, அதிகம் தெரிந்த உங்களுக்கு சொல்கிறேன்.


படப்பிடிப்புக்காக ஹைதராபாத்திற்கு பலமுறை போயிருக்கிறேன். ஹைதராபாத்து நகரிலிருந்து வெகு தொலைவில் உள்ள பிலிம்சிட்டியில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும், நேரம் கிடைக்கும்போது ஹைதராபாத்திற்கு வந்து அங்குள்ள சலார்ஜங் மியுசியத்திற்கு ஓடிவிடுவேன். சலார்ஜங் மியுசியத்தில் 'வேல் ஆப் ரபாக்கா' முகத்திரை அணிந்த ரபாக்கா என்கிற பெண்ணின் சலவை கல் சிற்பம் இருக்கும். இருநூறு வருடங்களுக்கு முன்பு செதுக்கிய ஒரு சலவை கல் சிற்பம். முகத்திரை அணிந்த அந்த பெண்ணின் மூக்கு, மூக்கின் குழி, கண்ணின் இமை, கண்ணின் விழிப்பு, கன்னம், உதடு என்று தெளிவாக தெரியும். முகத்திரையும் தெரியும், முகத்திரைக்கு உள்ளுக்குள் இருக்கிற அமைப்புகளும் தெரியும். எப்படி ஒரு சிற்பி இதை செதுக்கினான் என்று எனக்கு புரியவே இல்லை. சலவைகல்லின் காவியம் 'வேல் ஆப் ரபாக்கா'. தயவு செய்து ஹைதராபாத் போனால், கோவில்களுக்கு அப்புறம் போங்கள். சலார்ஜங் மியுசியத்தில் உள்ள இந்த சிலையை மட்டும் பார்த்துவிட்டு, நமஸ்கரித்து விட்டு வாருங்கள். தேவதையா என்று கேட்காதீர்கள். அற்புதமான கலைப் படைப்புகள் எல்லாமும் தேவதைக்கு சமானம். அதை படைத்தவன் கடவுளுக்கு சமானம்.