Thursday, July 16, 2009

என்னைச் சுற்றி சில நடனங்கள் - நான் சுயம்பு அல்ல

இந்த ஐம்பத்தைந்து வயதில் வாழ்க்கையில் ஒரு நிலையை எட்டிவிட்ட சுகத்தில் ஏதோ சிலவற்றை சாதிக்க முடிந்தது என்கிற மெல்லிய சந்தோஷத்தில் நடந்தவற்றை, கடந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.
நான் சுயம்பு இல்லை. பல கைகள் என்னை தடவித் தடவி வளர்ந்திருக்கின்றன. அதில் ஒரு கை தழும்பாய் என் நெஞ்சில் இன்னமும் இருக்கிறது.
அந்த கைக்குப் பெயர் பால்யூ. என்னுடைய இருபத்து மூன்று, இருபத்து நான்கு வயதில் நான் மிகத் துடிப்பாக இருப்பேன். எதிர்த்து பேசினாலும் மிக மரியாதையாக எதிர்த்துப் பேசுவேன்.
அந்த கட்டுரைத் தொடர் மிக அழகாக அந்த விஷயங்களை வெளியிட்டிருந்தது.
ஒவ்வொரு கட்டுரைக்குக் கீழும் என்.பி. என்று பெயரிருக்கும்.
படித்தவுடன் மனதில் பதிகின்ற பெயர் அது. புதுமையான சப்தம் அது. அதனாலேயே அந்த பெயர், வெகு எளிதாய் எல்லோருக்குள்ளும் பதிந்தது. பதிந்தது மட்டுமல்லாமல் அந்தக் கட்டுரையின் சிறப்பால் அந்தப் பெயருக்கு ஒரு மதிப்பு கூடியது. அந்த என்.பி. ‘பால்யூ’ என்று எனக்கு சொல்லப்பட்டதும் நான் மிக சந்தோஷமாக ஓடிப்போய் அவரை நமஸ்கரித்தேன்.
இந்த கட்டுரைகளைச் சொன்னேன். அவர் ‘அப்படியா, மிக்க நன்றி’ என்று தானே சொல்லவேண்டும். இல்லை. ‘இதெல்லாம் நான் செய்யவில்லை. எங்கள் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி செய்கிறார். அவருடைய உத்தரவின் பேரில், அவருடைய ஆலோசனையின் பேரில், அவர் வழிகாட்டலின் பேரில் இதை வெறுமே கட்டுரையாக நான் எழுதிக் கொடுக்கிறேனே தவிர, இந்த மொத்த மதிப்பும் எங்கள் ஆசிரியருக்குத் தான் போய்ச் சேர வேண்டுமென்று அமைதியாகச் சொன்னார்.
ஆனால் பால்யூ மனிதர்களைப் பார்க்கும் விதமும், விசாரிக்கும் விதமும் எனக்கு புதிதாக இருந்தன.
அது நியூ உட்லாண்ட்ஸ் ஓட்டல். ஏதோ ஒரு திருமணத்திற்குப் போய் விட்டு நான் திரும்புகிறேன். என்னுடைய ஸ்கூட்டரை எடுக்க ஸ்கூட்டர் ஸ்டாண்டுக்கு வந்தேன். அதே இடத்திற்கு பால்யூவும் தன்னுடைய மொபட் எடுப்பதற்காக வந்தார்.
வணக்கம் சொன்னேன். வெகு நாளாயிற்று சந்தித்து என்று குசலம் கேட்டேன். அவரும் மிக சந்தோஷமாகவே பேசினார். “சுவாரசியமாக எழுதினால் குமுதம் ஏற்றுக் கொள்ளுமா. அந்த கோட்டைக்குள் புக முடியுமா” என்று அந்த ஹோட்டல் வாசலில் நின்று பால்யூவிடம் கேட்க, “கோட்டை என்று எந்த இடமும் இல்லை. எதற்குள் நுழைய வேண்டுமென்றாலும் அதற்குண்டான விஷயங்களை செய்தால் நுழைந்து விடமுடியும். உங்களுடைய எழுத்து சுவாரசியமாக இருக்கிறது என்று குமுதம் சுற்றி சுற்றி வந்து விஷயங்களை வாங்கும்.
குமுதம் என்ன விரும்புகிறது என்பதை திரும்ப திரும்ப குமுதம் படித்து புரிந்து கொள்ளுங்கள். இதில் கர்வம் பார்க்காதீர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமென்பதை இப்பொழுதே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இலக்கிய ரீதியாய் பத்திரிகையில் எழுதுவது ஒரு வழி. குமுதத்தில் எழுதுவது இன்னொரு வழி. ஆனந்த விகடனில் எழுதுவது இன்னொரு வழி. எந்த வழி உங்களுக்கு வேண்டுமென்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
வாசலுக்கு வந்து உள்ளுக்குள் வரவேண்டும் என்று கேட்டால், மாட்டேன் என்று யார் சொல்வார்கள். அதேபோல வாசலுக்கு வந்து வரட்டுமா என்று கேளுங்கள்.” என்று சொல்ல, நான் இதை சுப்ரமணியராஜுவிடம் தெரிவிக்க, நாங்கள் இரண்டு பேரும் குமுதம் போனோம்.
அங்கு போய் வாசலில் நின்று ஆசிரியரிடம் போனில் பேசினோம்.
“எங்கிருக்கிறீர்கள். இங்கு வர எவ்வளவு நேரம் ஆகும்.” என்று குமுதம் ஆசிரியர் கேட்க, “ஒன்றரை நிமிடம் ஆகும்” என்று நாங்கள் பதில் சொல்ல, அவர் திகைத்தார்.
“வாசலில் நின்று பேசினால் வரக்கூடாது என்று என்னால் சொல்ல முடியுமா, வேலைகள் அதிகமிருக்கின்றன. இருப்பினும், ஐந்து நிமிடங்கள் சந்திக்கின்றேன்.” என்று நேரம் ஒதுக்கி அவர் காத்திருந்தார்.
நாங்கள் அவரிடம் போய் வணக்கம் சொன்னோம்.
குமுதம் பற்றிய எங்களுடைய அபிப்ராயத்தை வேகமாகவும், தெளிவாகவும் சொன்னோம். அவர் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். “உண்மையாக பேசுகிறீர்கள். சந்தோஷமாக இருக்கிறது. குமுதம் இலக்கியப் பத்திரிகையாக மாற சொல்கிறீர்கள். எனக்கு ஆட்சேபணை இல்லை. இலக்கியத் தரமாக, அதே சமயம் எளிமையாக நீங்கள் எழுதிக் கொடுங்கள். அவை படிப்பதற்கு சுவாரசியமாக இருந்தால் நிச்சயம் போடுகிறேன்.
எப்பொழுது தருவீர்கள் உங்கள் சிறுகதைகளை.” என்று கேட்டார். என்று கேட்டார். நாங்கள் பேசாதிருக்க “நாளை தர முடியுமா. ஒரு வார பத்திரிகை அப்படித்தான் கேட்கும்.” என்று சொன்னார். நான் சரி என்று சொன்னேன்.
மறுநாள் கொண்டு போய் இரண்டு சிறுகதைகள் கொடுத்தேன்.
இதுதான் என்னுடைய வெற்றி. இந்த வெற்றிக்கு காரணம் பால்யூ.
இடதா, வலதா என்று தீர்மானம் செய் என்று எனக்கு சொல்லிக் கொடுத்தது பால்யூ. வழிகாட்டியது பால்யூ. இந்த இடம்தான் என்று தேர்ந்தெடுத்தப் பிறகு அந்த இடத்திற்கு சிறிதளவும் வஞ்சனை செய்யாது அதை முழுமையாக ஆக்ரமிப்பதற்கு முயற்சி செய்’ என்று சொல்ல, நான் அதேவிதமாக முயற்சி செய்தேன்.
சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் கவனமாகவும் எழுத முயற்சி செய்தேன். என் இலக்கியத்தரத்தை சற்றும் நழுவ விடாமல் தெளிவாக, எளிமையாக எழுத, என் எழுத்துக்கள் குமுதத்தில் பிரசுரமாக, அவற்றை படித்துவிட்டு குங்குமத்தில் அப்பொழுது ஆசிரியராக இருந்த சாவி எங்களை ‘குங்குமம்’ தயாரிக்க சொன்னார்.
அந்த குங்குமம் தயாரிப்புக்கு பிறகு வாரப் பத்திரிகைகள் ஒவ்வொன்றாய் எங்களை அணைத்துக் கொண்டன.
நான் இன்று சிறப்பாக இருப்பதற்கு காரணம் அந்த நியூ உட்லாண்ட்ஸ் ஹோட்டல் வாசலில் ஸ்கூட்டர் ஸ்டாண்டிற்கு அருகே பல நூறு ஸ்கூட்டர்களுக்கு நடுவே என்னிடம் அமைதியாகவும் தெளிவாகவும் அன்று பால்யூ கொடுத்த உபதேசமே.
நான் சுயம்பு இல்லை. பல கைகள் என்னிடம் படர்ந்திருக்கின்றன. பால்யூவின் கை அதில் தழும்பாக இருக்கிறது. என்னால் பால்யூவை, பால்யூவின் உபதேசத்தை மறக்க இயலாது. அன்று முதல் இன்று வரை பால்யூவை எங்கு சந்தித்தாலும் நான் மரியாதையாக எழுந்து நின்று கை கூப்புவது வழக்கம்.
இது என் உள்ளிருந்து கிளம்புகின்ற நன்றி. அவர் பெயரைக் கேட்டதும் எனக்குள் தோன்றும் பிரேமை. ஒரு மூத்த சகோதரன் என்கிற இனிய உணர்வு.
பால்யூ ஒரு அனுபவக்கடல். பத்திரிகை உலகில் அவர் சாதித்த விஷயங்கள் மிக ஏராளம். சிலவற்றை என்னிடம் பரிமாறிக் கொண்டிருக்கிறார். அவர் பரிமாறிக் கொள்ளாத பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு நாள் இதை அவர் விரிவாக எழுதவும் கூடும். எழுத வேண்டுமென்பது என் விருப்பம்.

8 comments:

said...

குமுதம் என்ன விரும்புகிறது என்பதை திரும்ப திரும்ப குமுதம் படித்து புரிந்து கொள்ளுங்கள். இதில் கர்வம் பார்க்காதீர்கள்.

see this is the key for everything in your life..

hats off bala sir...
i got 1 valuable magic word of the day
thank you mr.thulasi

said...

நன்றி மறப்பவர்கள் மலிந்திருக்கும் இந்த காலத்தில், தன் இருபத்தி மூன்று வயதில் தனக்கு உதவியவரை மறவாமல் இருக்கும் அய்யாவின் இந்த பண்பு கண்டிப்பாக ஒவ்வொரு மனிதருக்கும் வரவேண்டும்.

சந்துரு...

said...

பால்யுவின் பிள்ளை கல்யாண ஆல்பத்தில் உங்களைப் பார்த்ததும் மிக மிக சந்தோஷப்பட்டேன்... அட்டிக்கடி, மைலாப்பூரின் தெருக்களில் உங்களிடம் பேசியிருக்கிறேன், ஒரு மூன்று சக்கர கைனடிக் ஹோண்டாவில்... உங்களுடனான சம்பாஷணையை என் ப்ளாகில் கூட எழுதியிருக்கிறேன்...

நிறைய எழுதியாகிவிட்டது... உள்ளே பார்ப்பதை தகுதியானவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்...

said...

ஏறிவந்த ஏணியை மறக்கும் இந்த கலியுகத்தில்,ஐயா அவர்கள்,
நான் சுயம்பு இல்லை. பல கைகள் என்னிடம் படர்ந்திருக்கின்றன. பால்யூவின் கை அதில் தழும்பாக இருக்கிறது. என்னால் பால்யூவை, பால்யூவின் உபதேசத்தை மறக்க இயலாது. என்று தன் இருபத்தி நான்கு வயதில் ஏற்பட்ட அனுபவத்தை இந்த நிலையிலும் நினைவுகூர்ந்து, அவருக்கு நன்றி செலுத்தியது மிகவும் நெஞ்சை நெகிழ வைக்கிறது.

கலைவினோத்

said...

ஐயா

உங்களது இன்றைய நிலைக்கு ஒரு காரணியாக விளங்கியவரை நன்றியோடு நினைவு கூர்ந்திருக்கும் விதம் அருமை.

நான் சுயம்பு அல்ல என்ற அந்த தலைப்பு என்னைக் கவர்ந்தது.

said...

நண்பர் கிருஷ்ண துளசி நலம் தானே?
இந்த சிறியேன் உங்களுக்கு
பெஸ்ட் ப்ளாக் அவார்டு தர ஆசைபடுகிறேன்.
உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இருக்கிறதா?
என்பதை தெரிவிக்கவும்.

said...

அவருடனான சந்திப்பு இங்கே உள்ளது...

http://erodenagaraj.blogspot.com/2009_05_01_archive.html

said...

at this depressed moment, i take it as a piece of upadesam from you to me. Thanks