Monday, October 12, 2009

உடையார் - சில எதிரொலிகள்சாஸ்திரி நகர்,
அடையாறு, சென்னை-20

அன்புள்ள பாலகுமாரா,

என்றேனும் இன்னும் ஒரு முறை தஞ்சைப் பெரிய கோயிலைத் தரிசிக்க நேர்ந்தால் என் மனமும் மூளையும் பிரகதீஸ்வரரைப் பார்க்குமா? சந்தேகமே. உடையாரைப் படித்தபின் பார்வை கட்டாயம் வேறாகி விடும். இந்த இடத்தில்தான் பெருந்தச்சர் காப்புக்கட்டிக் கொண்டு பிரக்ஞை செய்திருப்பாரோ? இங்குதான் முதன்முறை மண் தோண்டப்பட்டு இருக்குமோ? இதற்கடியில் இராஜராஜன் பட்ட மகிஷியும் மற்ற மனைவியரும், தங்க வளையல்களையும், சங்கிலிகளையும் இதர நகைகளையும் அஸ்திவாரக் குழியில் போட்டிருப்பார்களோ? இந்தப் பிள்ளையார் அருகில் தான் யானை முதல்பலியாக இறந்து விழுந்திருக்குமோ? இங்கேதான் தோண்டிய மண்ணைக் கொட்டி இருப்பார்களோ? இங்கேதான் பாண்டிய வீரன் மதுகொடுக்கப்பட்டு பிதற்றியிருப்பானோ? என்று தான் யோசிக்கத் தோன்றும்.

இரண்டாம் தளத்தில் இருக்கும் ஓவியங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்தால், சீராளனும் உமையாளும் அருகே வந்து நிற்பார்கள். திரிபுராந்தகரையும், அவருக்கு உதவி செய்யும் பார்வதி சுப்ரமண்யர் பிள்ளையாரையும் வேறு கோணத்தில், நீ பார்த்த கோணத்தில் பார்க்கத் தோன்றும். கோபுரத்தை அண்ணாந்து பார்க்கையில், நீலநிற வானத்தின் கீழ் பொன் தகடுகள் போர்த்திய பெரிய கோபுரம் ஒருநாளில் ஜொலித்திருக்கும் எனத் கற்பனை செய்யத் தோன்றும்.

பெரிய கோயில் ஒரு பிரம்மாண்டம் என்றால், அந்தக் கட்டிடப்பணி அதைவிடப் பிரம்மாண்டம். அந்தக் கட்டிடப் பணியினைக் கற்பனை செய்து, (ஓரளவு ஆதாரங்கள் கிடைப்பினும்) புஸ்தகமாக்கியிருப்பது இன்னொரு பிரம்மாண்டம்.

படிப்பவர்க்கு மலைப்பை உண்டு பண்ணுவது, உடையார் ஸ்ரீஇராஜராஜத்தேவர் மட்டுமல்ல; பாலகுமாரனும்தான்.

அனேகமாய் எல்லாப் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் ரணகளம்தான். தேசத் தந்தை மகாத்மாகாந்தி, தந்தை என்ற பொறுப்பைச் சரிவர நிறைவேற்றினாரா, இல்லையா? என்று பட்டிமன்றம் போட்டுக் காந்தியைப் பரிகசிக்கிறார்கள். பெண் விடுதலை பாடிய பாரதி பெண்டாட்டியை வைத்துக் காப்பாற்றி இருந்தால் அவர் வெறும் சுப்பையா. தேசியகவி சுப்ரமண்ய பாரதி ஆகி இருக்கமுடியாது

நாலு பிள்ளைகளுக்கும் வசதியான வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால், அவர் வெறும் மோகந்தாஸ் காந்தி, மகாத்மா காந்தி இல்லை. அம்மங்கையைப் பற்றி நினைத்து அவளுக்காக வாழ்க்கையைச் செலவிட்டிருந்தால், குந்தவையைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தால் என்றோ இராஜராஜன் மக்கள் மனத்திலிருந்து இறங்கியிருப்பான். இன்றளவும் சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது.

இது அருள்மொழி என்ற தனிமனிதனின் கதை அல்ல; ஒரு சமுதாய அலசல். அந்தணர்கள், கல்தச்சர்கள், மறவர்கள், தேவரடியார்கள் என்று பிரிந்திருந்த தமிழ்ச் சமுதாயத்தின் வக்கரிப்புகளுக்கிடையே, கொக்கரிப்புகளுக்கிடையே இழிபடாமல் அத்தனை பேரையும், அணைக்க வேண்டிய இடத்தில் அணைத்து, கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து, அனைவர்க்கும் மேலாய் உயர்ந்து நின்று, உயர்ந்த கோயிலைக் கட்டமுடிந்தது என்றால் அது அந்த மஹாமனிதனின் மஹாகெட்டிக்காரத்தனம்.

சோழர் காலத்தில் ஒற்றர் படை மிக அதிகம் எனப் படித்திருக்கிறேன். அந்த வலை படர்ந்து விரிந்து கிடந்ததை ஒற்றனுக்கு ஒற்றன் அவனுக்கு இன்னொரு ஒற்றன் என்று எக்கசக்கமாய் ஒற்றர்கள் இருந்ததைக் காட்டியிருக்கிறார்கள். கற்பனைப் பாத்திரமென்றாலும் வைஷ்ணவதாஸன் கண்கலங்கச் செய்துவிட்டார். அவர் மனைவியை என்ன செய்ய போகிறாய்? அவளுக்கு நற்கதிகாட்டுவாய்.

சோழர்களின் மிகக் கொடுமையான போர் முறை பற்றி பல சரித்திர நூல்கள் கூறுகின்றன. அதற்கு இக்கதையில் சரியான காரணம் காண்பித்திருக்கிறாய். கோயில் கட்டுதல் ஒரு மிகப் பெரிய விஷயம் என்றால் மேலைச் சாளுக்கிய போர் இன்னொரு மகா பெரிய விஷயம். அதற்கு எத்தனை எத்தனை ஏற்பாடுகள். Picturesque Description என்று சொல்வார்கள். போர்ப்படை கம்பீரமாய் கண்முன்னே அணி வகுத்துச் செல்வதைக் காணமுடிகிறது.

உனக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன், தீர்த்த யாத்திரை என்ற தலைப்பில் தென்மேற்கு, வடகிழக்குப் பருவக்காற்று பற்றிய இசை நாடகத்தை எங்கள் பள்ளியில் அரங்கேற்றியபோது நீ தலைமை தாங்க வந்திருந்தாய். இந்தச் சிறிய அரை மணி நேர விஷயத்திற்கு நான் ஒரு மாதம் உழைக்க வேண்டியிருந்தது. இந்த அல்ப விஷயத்திற்கே இப்படி என்றால் நெடுந்தூரப் பயணத்திற்கு எத்தனை எத்தனை ஆயத்தங்கள், எத்தனை பாடுகள், உணவு, உடை, உளவுப் பிரிவு, வைத்தியம் இத்யாதி இத்யாதி. சிவகைங்கர்யம் என்ற உயரிய லட்சியமும் சில நல்லவர்களின் வல்லவர்களின் ஒத்துழைப்பும் அவனை வெற்றி பெற வைத்தன.

நெடுநாட்களாய் நெஞ்சில் நெருடிக் கொண்டிருக்கும் விஷயம். சுவைமிகுந்த நமது சரித்திரம் facts of figure ஆகப் பாடப் புத்தங்களில் வறண்டு கிடப்பதேன்? பாவம் குழந்தைகள் விஷயங்களை மனப்பாடம் செய்து கக்குகின்றன.

தஞ்சை பெரிய கோயிலை தரிசிக்க, அதை தரிசிப்பதின் மூலம் இராஜராஜனைத் தரிசிக்க நம் குடும்பம் முழுவதும் கெளரி, கணேஷ், ஆகாஷ், கமலா, கிருஷ்ணா, சாந்தா, சூர்யா, நீ, நான், லலிதா அனைவரும் தஞ்சை போனால் என்ன? நம் குடும்பம் மட்டுமல்ல; தமிழ்குடும்பம் ஒவ்வொன்றும் உடையார் நாவல் படித்ததும் தஞ்சை போகும். இராஜராஜனைத் தரிசிக்கும்.


சோழம்! சோழம்! சோழம்!

இப்படிக்கு
என்றும் அன்புடன்
ரவி
(சிந்தா ரவி )

4 comments:

said...

Dear Sir,

Is it possible, could you please ask ur team to translate english to our IYYA all books.

It will more helpful for other more peoples to understand what is life, hw to live!

with regards
arul kandan. S

said...

வணக்கம்

உண்மையான கூற்று அது என்னவென்றால் படிப்பவர்க்கு மலைப்பை உண்டு பண்ணுவது, உடையார் ஸ்ரீஇராஜராஜத்தேவர் மட்டுமல்ல; ஐயாவும் தான்..ஆம் எப்பேற்ப்பட்ட புதினத்தை படைத்திருக்கிறார் அவர்.
இது போன்ற பல உடையார் பற்றிய எதிரொலிகளை இப்பதிவில் வெளியிட வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம். ஒவ்வொரு முறையும் உடையார் பற்றிய தகவல்களை படிக்கும்பொழுது, மீண்டும் உடையார் என்ற புதினத்தை படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது.

கலைவினோத்.

said...

உடையார் அனைத்துப் பாகங்களும் படித்த பின்னர் ஒரு சோழ நாட்டுக் குடிமகன் போலவே நான் நடமாடிக் கொண்டிருந்தேன் என்றால் அது மிகை ஆகாது. எழுத்துச்சித்தரின் கதைகள் அனைத்தையும் காதலுடன் படித்தவன் நான். எனினும் உடையார் தமிழக வரலாற்றின் பொற்காலத்தை மீண்டும் சமூகப் பொருளாதார நோக்கில் காண துணை புரிந்தது என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. தமிழனின் பெருமை வாய்ந்த நாட்களை கண் முன்னே கொண்டு வர திரு.பாலா அவர்களுக்கு நிச்சயம் பரமசுவாமி துணை நின்றிருக்கிறார். நாத்தீகம் பேசும் அரசாங்கம் இருப்பதினால் இந்தப் படைப்பு விருது வாங்காமல் போகலாம். இழப்பு ஒருபோதும் திரு.பாலாவுக்கு அல்ல என்பதே உண்மை. இறைவன் இருக்கிறார். நல்லது செய்வார். ஓம் நமசிவாய.

அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com

said...

நீங்கள் எழுதிய வரிகள் அனைத்தும் 100 சதவிகிதம் உண்மை. பொன்னியின் செல்வன் படித்ததும் ராஜராஜன் மேல் ஏற்பட்ட ஈர்ப்பு , உடையார் படித்ததும் பல பல மடங்கு அதிகரித்து விட்டது. இன்னும் சொல்லப் போனால் என் அந்த காலத்திற்கு போகமட்டோமா என நினைக்க தோன்றுகிறது.