Tuesday, October 20, 2009

சூரியனோடு சில நாட்கள் - பாலகுமாரன் பேசுகிறார்

பத்து மாதங்களுக்கு முன்பு ஒரு படத்துவக்க விழா. அழைப்பு வந்திருந்தது. இவர் தலைமை, இவர் முன்னிலை, இவர் தயாரிப்பு, இவர் இயக்கம், இவர் இசை என்றெல்லாம் பத்திரிக்கையில் அச்சிடப்பட்டிருந்தாலும், குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து வாழ்த்துபவர் ரஜினிகாந்த் என்று பெரியதாய்-நாடு மையமாய்-கண்ணைப் பறிக்கிற விதத்தில் இருந்தது. அடடே, பார்த்து நெடுநாளாயிற்று. பேசி வெகுகாலமாயிற்று. இன்று சற்று நெருங்கி நின்று ‘ஹலோ’ சொல்ல வேண்டும். முடிந்தால் பேச வேண்டும்.

ஓரமாய் நிற்பதை மாற்றிக் கொண்டு, அவர் வரும் வழியில் சரியான கோணத்தில் நின்று கொண்டேன். அருகே வந்து பேசுபவர்களிடம் குறைவாகப் பேசி, அவர் வரும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஸ்டூடியோ வாசலுக்கு வந்துவிட்டதாய் சொன்னார்கள். சட்டென்று பரபரப்பானார்கள். ஓரமாய் வைத்திருந்த பூக்கூடை நூறு. மடமடவென்று எடுத்துக்கொண்டார்கள். ஒருவரை ஒருவர் அதட்டி மிரட்டி சத்தம் போட்டு வரிசையானார்கள், வரிசையாகும் முயற்சியில் என்னைப் பின்னடையச் சொன்னார்கள். பின்னடைந்து படியேறினேன். இடதும் வலதுமாய் இளைஞர்கள்-சினிமாவில் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டவர்களாய் ஒரு நூறு நூற்றிருபது பேர் இருப்பார்கள்.

அவர் வண்டியிலிருந்து இறங்கி நிமிர்ந்து மலரச் சிரித்து கைகூப்ப, பெரிய கைதட்டல். இரண்டு வரிசையாய் நின்ற நண்பர்களுக்கு இடையே நடக்க, பூக்கூடையிலிருந்து ரோஜாப்பூ மழையாய் கொட்டப்பட்டது. தூவப்பட்டது. சில கணங்களுக்கு எங்கும் பூ. இருபதடி உயரத்தில் எல்லா நேரமும் அந்தரத்தில் பூக்கள் இருந்தன. தரைபட்டு, துள்ளி வாசம் எழுப்பின. பூக்கள் வீசப்பட்டு தன்மேல் பொழிவது கண்டு சட்டென்று ஒரு தயக்கம் அவருக்கு-என்ன இது என்ற பார்வை. உடனே சிரிப்பு.

சரி இப்படி ஒரு அன்பா. சரி என்று கைகூப்பி ராஜநடையுடன் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வர, மற்றவர்கெல்லாம் மனசுள் என்ன தாக்கியது. ரஜினிகாந்த் மனிதர்தானே தெய்வமாய் போற்றுகிறார்களே. ரஜினிகாந்த் நடிகர்தானே, ஒரு அரசருக்கு உரிய வரவேற்பு தருகிறார்களே. மலர் மழையில் நடந்து வருமளவுக்கு என்ன உயர்த்தி... இது அன்பின் வெளிப்பாடா. சட்டென்று ஒரு புதுவிதமான காட்சி கண்ட திகைப்பில், திகைப்பின் விளைவாய் உள்ளே பொறாமை பொங்கியது.

இது என் புத்தி, எங்கே முதன்மை எவருக்கு நடந்தாலும் அது நானாய் இருக்க வேண்டும். எனக்கும் நடக்க வேண்டும் என்கிற புத்தி. இதைச் சொல்லிக் கொள்ள எனக்கு வெட்கமில்லை, உற்றுப் பார்த்தால் உங்களில் நிறையப் பேருக்கு புத்தி இப்படித்தான் இருக்கும். உண்மையை மட்டும் சொல்வது என்று ஊரார் தீர்மானித்தால் நூற்றுக்கு தொண்ணூற்றெட்டு பேர் இப்படித்தான் சொல்வார்கள்.

நான் மனசுள் பொங்கும் உணர்வுகளை காமம், காதல், பொறாமை, ஏக்கம், பேராசை இவைகளைத் தடுப்பதில்லை. ச்சீ வெளியே வராதே என்று எண்ணங்கள் வந்தால் அடக்குவதில்லை. மாறாய் அனுமதித்து விடுவேன். அது...அந்த எண்ணம் செலவாகும் போது மனம் கூர்மையாகி ஆராய்ந்து அலசி சுத்தம் செய்துவிட்ட பிறகே அனுமதிப்பதுண்டு. சட்டென்று ரஜினிகாந்த் மீது பொறாமை வந்தது. பொறாமைப்படுகிறோமே என்று வெட்கமும் வந்தது.

டேய் தம்பி, மனசுத்தம்பி, எதுக்கு பொறாமை, அவரை ஜனங்கள் விரும்ப ஆயிரம் காரணங்கள் இருக்கும். உனக்கு எதுக்கு பொறாமை. வரிசையில் நின்ற இளைஞர்களுக்கு அவர் பல்வேறு உதவிகள் செய்திருக்கக்கூடும். இது தெரியாமல் ஏன் புழுக்கம். உனக்கு அவர் கெடுதல் எதுவும் செய்ததுண்டா, இல்லையே. அப்படியிருக்க எதனால் புழுக்கம். முதலில் மற. புழுக்கம் விடு. உண்மையில் உன் உணர்வு பொறாமையல்ல. நீ பயந்து விட்டாய். நூறு பேர் ரோஜா தூவி மொத்த சூழ்நிலையையும் கண நேரத்தில் மாற்றியது உன்னை அதிர அடித்துவிட்டது. பெரிய ஆளுயர மாலைபோட்டிருந்தாலோ, சரிகைச் சால்வை சார்த்தியிருந்தாலோ, கற்பூர ஆரத்தி காட்டியிருந்தாலோ உனக்கு அதிர்ச்சி ஆகியிருக்காது. பூமழை ‘ஹா’ என்று வியக்க வைத்துவிட்டது. வியப்பு வழியே வந்த பொறாமை இது.

டேய் தம்பி, மனசுத் தம்பி தணிந்து போ, கேட்டு நடந்திருக்குமா, திட்டமிட்ட செயலா. அந்த மனிதனை உனக்குத் தெரியும். ‘ஹலோ’ என்று தானாய் நாலடி முன் வந்து கைகுலுக்கும் ஆள். ஒரு போட்டோ எடுத்துக்கணும் என்று யார் கேட்டாலும், எப்போது கேட்டாலும், எத்தனை நேரமானாலும் அலுக்காது சம்மதம் சொல்கிற நடிகர். சிறிது முகவாட்டம் தெரிந்தாலும் உடன் வேலை செய்யும் தோழர்களிடம் என்ன காரணம் என்று உடனே தயங்காது கேட்கும் மனிதன். இங்கு இப்படி மனிதர்கள் அபூர்வம். அதனால்தான் இந்த பூமழை பூப் போன்ற அன்புமழை.

பொறாமை விட்டு உற்றுப்பார். உன்னை, ரஜினியை இடைவிடாது பார். உனக்கு பேச வாய்ப்பு கிடைத்தாலும், உன் அருகே அவர் பிறரோடு பேசுவதைப் பார்க்க கிடைத்தாலும் உற்றுப்பார்.

அப்படி என்ன உயர்வு, கவனி.

மனிதர்கள் இயற்கையின் குழந்தைகள். பூமி, வாயு, அக்னி, நீர், ஆகாயம் என்று இயற்கைச் சக்திகள் கலந்தவர்கள்.சூரியனின் உதயம், சந்திரனின் குளுமை, நீரின் சலசலப்பு, ஆகாயத்தின் பெரும் சக்தி, வாயுவின் அலையல்-எல்லாம் மனிதர்களில் உண்டு.

மனிதரை கவனிப்பது இயற்கையைக் கவனிப்பது போல.

ரஜினிகாந்த் என்ற மனிதனை, அந்த மனிதனை நேசிக்கும் மனிதர்களைக் கவனி. ரஜினிகாந்த் உன் சகஜீவி. தென்னிந்தியா முழுவதும் வளைத்துப் பிடித்த ராஜராஜ சோழன். மராட்டாவிலிருந்து நகர்ந்து, கர்னாடகத்தில் குடியேறி, தமிழ் தேசம் வளைத்த சாளுக்கியன். அன்பான புலிகேசி.

இவரைத் தெரியாது என்று தென்னிந்தியாவில் எவராவது சொல்வார்களா, சகலருக்கும் தெரிந்த முகம். சகரும் பல தடவை உச்சரித்த பெயர். ஆறு மாதக் குழந்தையிலிருந்து அறுபது தாண்டிய பெரியோர்கள் வரை பார்த்துப் பரவசப்பட்ட முகம். டேய் தம்பி, மனசுத் தம்பி உற்றுப்பார். ரஜினிகாந்த் நெற்றியை, கண்களை, புருவத்தை, மூக்குக் கூர்மையை, கை விரல்களை, உள்ளங்கையை, தோல் நிறத்தை, நிற்பதை, நடப்பதை, முக அசைவை, கண் உருளலை, மூச்சு விடுதலை உற்றுப்பார்.

எதனால் இது இப்படி ஒரு சிறப்பு பெற்றது. ஒட்டாது உற்றுப்பார். ஐயோ என்று ஆங்காரப்படாதே. ஆஹா என்று கொண்டாடவும் செய்யாதே, ஓதுங்கி நின்று உற்றுப்பார். விருப்பு-வெறுப்பின்றி ரஜினியை ஸ்வீகரி. இப்படி தீர்மானம் செய்த ஆறாம் மாதம் மறுபடி சந்தித்தேன். மிக நெருக்கமாய் மூச்சு விடுகிற ஓசை கேட்கும் தூரத்தில் சந்தித்தேன்.

7 comments:

said...

இந்த புத்தகம் முழுதும் நான் படித்திருக்கிறேன்...

பாலா அவர்களின் எழுத்து வீச்சும், ரஜினியை அவர் உள்வாங்கி எழுதி இருக்கும் நடையும் மிகவும் சுவாரசியமாக இருக்கும்...

பாலா பாலா தான்..

நன்றி கிருஷ்ண துளசி....

said...

puthagaththin thalaippai theriviththal vaangippadikka eLithaai irukkum.

said...

உங்கள் எழுத்தே அருமை அதிலும் எங்களுக்கு பிடித்த ரஜினியை பற்றி எனும் போது இன்னும் அருமை...

தொடர்ந்து இதை வெளியிடுங்கள்..படிக்க ஆர்வமாக இருக்கிறேன்

said...

//fieryblaster said...
puthagaththin thalaippai theriviththal vaangippadikka eLithaai irukkum.//

**********

The book's name is "SOORIYANODU SILA NAATKAL" by Writer Balakumaran.

said...

thanks a lot gopi

said...

எழுத்துச் சித்தரின் வரிகள் பொய்ப்பதில்லை..அவருக்கு பொய்யாகவும் எழுதத் தெரியாது.
ரஜினி என்னும் மனிதனும் பொய்யாக வாழ்வில் நடித்ததில்லை..

புரிதல் மிக மிக
எதையும் புரியமுடியும் என்பதற்கு நீவிர் இருவருமே உதாரண புருஷர்கள்..

இருவருக்கும் சில ஒற்றுமை உண்டு..

இருவரும்
புகைத்திருக்கலாம் ;
ஆனால்
பிறர் வெற்றி கண்டு
புகைந்ததில்லை..!

இருவருமே உள்ளொன்று வைத்து
உதடொன்று பேசத் தெரியாதவர்கள் !

இருவரையுமே நான்
நெருங்கியதில்லை !

ஆனால்
விண்மீன்களை தொட்டுப் பார்த்தா
ஆனந்திக்க வேண்டும்.?

என்றாவது ஒருநாள்
நான் பறவையாகி
உம் வீட்டு அருகில்
வந்தமர்வேன்...

நன்றிகள் கிருஷ்ணதுளசி..

(இந்த பெயரை நான் தட்டச்சு செய்யும்போதே, விதுரனும் கிருஷ்ணனும் மனதிலே நிறைகிறார்கள்....)

said...

உங்கள் ஒப்பீடு நன்றாக உள்ளது ஈ ரா.

வாழ்க்கையின் அடிப்படை நம்பிக்கை.

சந்திப்புகள் நிகழ காத்திருப்போம்