Monday, October 26, 2009

உடையார் - சில எதிரொலிகள்
தமிழ் மொழியில் தொகை என்று இலக்கணக் குறிப்பொன்றிருக்கிறது. சொல்லுக்கு முன்பும் பின்பும் தொகை இடம்பெறும். ( உ-ம்.)நம்பினார் கெடுவதில்லை. எதை நம்பினால் இறையை, உண்மையை நம்பினால் கெடுவதில்லை. அதுபோல் தாங்கள் எழுதிவரும் தமிழ் மண்ணின் மாமன்னன் அருண்மொழி என்ற இராசராசச் சோழன் கதையின் தலைப்பையும் நான் தொகையாக உருவகப்படுத்துகிறேன்.

அன்புடையார், பண்புடையார், பக்தியுடையார், பரிவுடையர், பற்றுடையார், அறிவுடையார், நன்றியுடையார், செல்வமுடையார், மனமுடையார், மக்கட்பண்புடையார், பெரும்பேறுடையார், நலமுடையார், அகமுடையார் இவையனைத்தும் அந்தப் பேரரசனுடைய தொகை மொழியாகக் கொள்ளலாம் என்பது என் உள்ளக்கிடக்கை.

ஒன்று செய்வோம்: நன்று செய்வோம்: இன்றே செய்வோம்’ என்ற எண்ணமுடன் பெருவுடையாருக்குக் கற்றளி எழுப்பிய இராஜராஜ சோழக் சக்கரவர்த்திக்கு நாம் என்ன கைமாறு செய்யமுடியும்.

இன்றைக்கு 1002 ஆண்டுகளுக்கு முன் எந்த ஒரு நவீன வசதியும் இல்லாமால் மக்கள் மேலும், இறைவன் மேலும் வைத்த நம்பிக்கையால் மட்டுமே மாபெரும் கோயில் கட்டி சாதனை படைத்த மன்னனுக்கு நாம் மரியாதையை எப்படிச் செலுத்துவது?.

அன்பே சிவம்.

உடையார் பற்றிய ஒரு முன்னுரையில் தாங்கள் எழுதும் பொழுது சோழ சாம்ராஜ்யத்தில் இக்கோயிலுக்கு உங்கள் பங்களிப்பும் இருந்திருக்கிறது என்ற பிரம்மை தோன்றுவதாகக் கூறுகிறீர்கள். அது பிரம்மையல்ல. உண்மையென்றே எனக்கும் தோன்றுகிறது. எனக்கும் அப்படி ஒரு பிரம்மை வந்தது.

உடையாரைப் படிக்கும் முன் எனது விபரம் தெரிந்த வயது முதல் சுமார் 10 வயதிலிருந்து 39 வயது வரை பத்து தடவை பிரகதீச்சுரம் சென்றுள்ளேன். அப்பொழுதெல்லாம் சிவபெருமானையும், நந்தியையும் பெரியநாயகி தாயாரையும் வியந்திருந்து அனுபவித்திருக்கிறேன்.

உடையார் படித்த பின்பு அம்மன்னனுடைய முயற்சிகளையும் கட்டுப்பாட்டுடன் சிற்பி, அந்தணர்,அரசர், படைக்கைதிகள், பாணார்கள், தளச்சேரி பெண்டிர், பொதுமக்கள், யானை, குதிரை, மாடு, கொல்லர், தச்சர், ஆதூரச் சாலையினர், பெண்டிர், புலவர் என்று அனைவரையும் அரவணைத்து, அனைவர் பிரச்சினைகளையும் சமாளித்து, திறம்பட சந்திராதிசூரியர் உள்ளவரை நிலைபெறும் வகையில் செய்த கற்றளியின் மேல் நாம் பாதம் வைத்து நடக்கவே மனம் பதறுகிறது. எத்தனைப்பேர் உழைப்புடையது. நாம் முடிந்தால் காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து கைலாசம் சென்றதுபோல்தான் நடக்கவேண்டும்.

நீங்கள் எழுதுவது கற்பனை கதை அல்ல. நேரடி ஒலி., ஒளிபரப்பு மட்டுமே செய்ய முடிவதைத் தங்கள் எழுத்துகளில் கொண்டு வருவதால் தாங்கள் எழுத்துச் சித்தர் என்பது மிகையாகாது. திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் அருளைவிடவும், அகிலாண்டேசுவரித் தாயின் கருணை என்பால் சுரந்ததன் விளைவே தங்களைக் கோவிலில் சந்திக்க நேர்ந்தது. நன்றி.

என்னையும், மனைவியையும், மகனையும் எழுத்துச் சித்தருடைய கைகளும் மனமும் வாழ்த்தியதால் மனம் அடைந்த ஆனந்த பரபரப்பு பத்து தினங்களாகியும் அடங்கவில்லை. கமலா அம்மையார், சாந்தா அம்மையார், சகோதரி ஸ்ரீகெளரி அவருடைய கணவர் கணேஷ், தங்கள் பேரன் ஆகாஷ், இனிய சகோதரன் சூர்யா மற்றும் தங்களுடைய நலமே நான் இறைவனிடம் வேண்டுவது.

பொன்சந்திரசேகர், மற்றும் இதழியல் துறை நண்பர்களுக்கும் நன்றி. உடையார் நினைவாக என் மகன் எடுத்த புகைப்படம் அனுப்பியுள்ளேன். கிடைத்தபின் பதில் எழுதினால் மிகக் கொடுத்து வைத்தவனாவேன்.

நன்றியுடன்
சு.ஞானபாஸ்கரன்

3 comments:

said...

karuvooraree vanakum. aen intha kallakkam.pattangal umaku thevayya? unathu pani eesanai kanbippathey.

drsiva2710@gmail.com

said...

உடையார் பற்றி எத்தனை எத்தனை விதவிதமான எதிரொலிகள். அனைத்தும் பிரமிக்க வைக்கின்றன. இவர் கூறியது போல் இது கதை அல்ல. நேரடி ஓளி பரப்பாகவே பார்க்க முடிகிறது ( உடையாரை படிக்கும் பொழுது ஒவ்வொரு இடமும்). கன்டிபாக எழுத்து சித்தர் என்பது மிகையாகதது தான்.
கலைவினோத்.

said...

பொன்னியின் செல்வனோடு நின்றிருந்த நான் உடையாரைப்படித்து பிரமித்துப் போனேன். நெகிழ்ந்து போனேன். இது எழுத்துச்சித்தரின் வரலாற்றுக் காவியம். இது கதையல்ல. எழுத்தோவியம்.