Saturday, November 28, 2009

சூரியனோடு சில நாட்கள் - பாலகுமாரன் பேசுகிறார் -3

சந்தேகம் வந்தபோது மனசு சட்டென்று வெகுதூரம் பின்னோக்கிப் போயிற்று.

தர்மயுத்தம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது எனக்கு ரஜினிகாந்த் அவர்களோடு பழக்கம் ஏற்பட்டது. ரஜினிகாந்தின் பரபரப்பான நேரம் அது. வெற்றிகள் அவரை நோக்கி வந்து கொண்டிருந்தன. ஏதோ ஒரு விதத்தில் அவர் எல்லோராலும் கவரப்பட்டார். அவரைப் பற்றிய கிசுகிசுக்கள் உச்சக்கட்டம் அடைந்திருந்த காலம் அது.

சாவி பத்திரிக்கையின் சார்பாய் அவரை பேட்டி காணச் சென்றிருந்தேன். காலை எட்டு மணி இருக்கும்.

“டிபன் சாப்பிட்டீங்களா”. ரஜினி கேட்டார்.
“இல்லை”.

“கார் எங்கே’- தேடினார்.
அவருடைய கார் எங்கேயோ போயிருந்தது.
“எதில் வந்திருக்கிறீர்கள்”.
“ஸ்கூட்டர்”
“வாங்க போவோம்”

நான் வண்டியை ஸ்டார்ட் செய்ய, ரஜினிகாந்த் என்னிடமிருந்து வண்டியை வாங்கிக் கொண்டார். நான் பிலியனில் ஏறிக் கொள்ள, வண்டியை அவர் ஓட்டினார். டிரைவ்-இன் ஓட்டலுக்கு வண்டி போயிற்று,

கூட்டம் அதிகமில்லாத அந்த நேரத்தில் நிறைய மனம் விட்டுப் பேசினார். அவர் பேசிய விஷயங்கள் பலது எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றன. என் வாழ்க்கையில் அந்தப் பேச்சுகள் மிகவும் உதவின. அவர் சொன்ன நேரடி வாக்கியங்கள் நினைவில் இல்லை. அதனால் அதன் சாராம்சம் சொல்கிறேன்.


“எவர் உயர்ந்தாலும், உன்னதமான நிலைக்கு வந்தாலும் அவரைத் தூற்ற, அந்த நிலையிலிருந்து அவரைச் சாய்க்க, உலகத்தின் ஒரு பகுதி கடுமையாய் முயலும், அதுவும் மிகச் சாதாரணமாய் இருந்தவர் முன்னேறினால் அவருக்கு எதிரிகள் உடனே உருவாகி விடுவார்கள்.

தனக்கு யோக்கியதை இருந்தும் உயர்வு கிடைக்கவில்லை. யோக்கியதை இல்லாத இவனுக்குக் கிடைத்து விட்டது என்று சிலர் பொறாமைப்படுவார்கள். இவ்வளவு உயரத்துக்கு இவர் வந்துடுவார்னு அன்னிக்கே தெரிஞ்சிருந்தா இன்னும் க்ளோசா ஒட்டிட்டிருந்திருப்பேனே. தெரியாத போயிடுத்து. இப்ப ஓட்ட ட்ரை பண்ணுவோம். ஒட்டவிடலைன்னா தொந்தரவு பண்ணுவோம். எனக்கு தெரியும்டா உன்னைப் பத்தி, என்கிட்ட டீ வாங்கி குடிச்சவந்தான் என்று சொல்லி எரிச்சல் மூட்டுவோம் என்று வேறு சிலர் முயல்வார்கள்.

கண்டக்டரா, கன்னடமா, தமிழ், இங்கிலீஷ், ஃப்ரெஞ்ச் எதுவும் தெரியாதா. டான்ஸ் வராதா...நாவல் படிக்கிற பழக்கம் இல்லையா. ஸ்கேட்டிங், ரைஃபிள் ஷுட்டிங். ஒண்ணும் தெரியாதா. பின்ன எப்படி இவ்வளவு உயரத்துல. ஏதோ குருட்டு அதிர்ஷ்டமா. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் அவுத்துவிட்டு உனக்கு என்ன தெரியலை பார்னு குழப்பி வுட்டுரலாம். இப்படியும் சிலர் முயல்வார்கள்.

இவர்கள் எல்லோரையும் அமைதியாய் அதிகம் எதிர்ப்பு காட்டாது சமாளித்தாக வேண்டும். அளவுக்கு மீறிய பொறுமை வேண்டும். பொறுமையே சிறிதும் இல்லாத நான் வன்முறையாய், வலுக்கட்டாயமாய் மெளனத்தை-அமைதியை வரவழைத்துக் கொள்கிறேன். சில சமயம் சிதறடித்து விடுகிறேன். நான் பெரிய தத்துவவாதியில்லை, நான் அதிகம் புத்தகம் படித்ததில்லை. ஆனால் இரவில் மனம் நொந்து புரண்டு படுக்கிறபோது எனக்கு நடந்த வேதனைகளின் வேர் எது என்று யோசிக்கிறபோது வாழ்க்கை மொத்தமும் பிடிபட்டுப் போவது போல் இருக்கிறது.

மனிதர்கள் ஆரம்பத்தில் இப்படித் தான் வேதனைப்படுத்துவார்கள். தாங்கிக் கொள் என்று தெளிவாய் தெரிகிறது. எதிர்த்தால் சரிவு நிச்சயம். அதனால் பிறர் ஹிம்சையைத் தாங்கி அமைதியாய் நமது அடுத்த வேலையைச் செய்ய.. இன்னும் உயர்வு வரும். மனிதர்கள் தாக்கவே முடியாத உயர்வுக்குப் போய்விட வேண்டும். அதற்கு வேறு எதிலும் கவனம் சிதறாது உழைக்கவேண்டும்.”


இது ரஜினிக்கு மட்டுமல்ல, பாலகுமாரனுக்கும் பொருந்தும். செய்யும் வேலைக்குக் கேலி வரும். அது மனிதர் குணம். நமக்கு அடுத்த வேலை தான் கவனம். கேலி சாதாரணம்.

வார்த்தைகளாய் அன்று இருந்த ரஜினி, வார்த்தைகளை உள்வாங்கி ஜெயித்திருக்கிறார். உங்களுக்கு இது அது தெரியுமா எனக் கேட்டு, இழிவுபடுத்துவார்கள் என்று நினைத்த ரஜினிகாந்த், இன்று சித்தர்கள் பாடல் பற்றி சொல்லச் சொல்லி கேட்கிறார். ஓஷோ என்கிற பகவான் ரஜனீஷ் தத்துவங்கள் பற்றி படிக்கிறார். ரமணர் வாழ்க்கை பற்றியும், வாக்கு பற்றியும் அதிகம் தெரிந்திருக்கிறார்.

தத்துவங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது மட்டும் பெருமையான விஷயம் இல்லை. அவைகளை உள்வாங்கி ஒட்டி வாழ்தல் முக்கியம் என்பது புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் கோபப்படுவதில்லை. ஆனால் தீர்மனாமாய் இருக்கிறார்.

ரஜினிகாந்த் இனிமையாய் இருக்கிறார். ஆனால், எல்லாவற்றுக்கும் இணக்கமாய் இருந்து விடுவதில்லை. மனசு விட்டு பாராட்டுகிறார்.

‘பாலகுமார் சார், அந்த காலேஜ் அட்மிஷன் பத்தி யுவராணி பேசறாது நல்லாயிருந்தது.’

நான் அன்றைய ஷுட்டிங்கிற்கு எழுதிக் கொடுத்து விட்டு வேறு வேலைக்குப் போய் விட்டேன். ஆனாலும் கூப்பிட்டு பாராட்டி, “ரஜினி சார்.. நான் நேத்து ஷுட்டிங்க்கு வரலைன்றதுக்காக இப்படி கூப்பிட்டு பாராட்டறா மாதிரி..”

“கடவுளே.. மனசாரப் பாராட்டக் கூடாதா. ஏன் சந்தேகமாவே பார்க்கறீங்க. எனக்கு பிடிக்காத விஷயத்தை மூஞ்சிக்கு நேர சொல்லி விடுவேன்”.

“இதுவரைக்கும் சொன்னதில்லை”

“பிடிக்காதது எதுவும் இதுவரை உங்களாண்ட எனக்குத் தெரியலை. சொல்லலை”

ஆனால் சட்டென்று ஒருநாள் மெத்தென்ற குட்டு விழுந்தது.

“இந்த ஸீனை இப்படி ஆரம்பிச்சா என்ன..” அவர் சொல்ல ஆரம்பிக்க, அதனுடைய நூல் புரிந்து கொண்ட நான் அதே விதமாகவே யோசித்து வைத்திருந்த சந்தோஷத்தில் குறுக்கிட்டு, “க்ரெக்ட்.. இது சொன்னதுக்கப்புறம் அந்த டயலாக் தொடர்ச்சிய..”

சட்டென்று உற்றுப் பார்த்தார்.

“பாலகுமார் சார்.. உங்கக்கிட்ட ஒரு தப்பு இருக்கு.. சொல்லட்டா”.
“சொல்லுங்க சார்”.
“ஸ்பீட் ரொம்ப ஜாஸ்தி. இது தேவையில்லை. என்னை முழுக்கப் பேசவிடறதேயில்லை நீங்க. ஒரு இடம் தொட்டவுடனே மடமடன்னு கம்ப்யூட்டர் கணக்கா போயிடறீங்க. போலாம். தப்பில்லை. எதிராளியைப் பேசவிட்டு அப்புறம் உங்க நேரம் வரபோது பேசுங்க”.

“சரி சார். ஸீன் சொல்லுங்க”
சொன்னார். சொன்ன பிறகு கருத்து கேட்டார்.

அந்த ஸீன் ஆரம்பித்த விதம் பிடித்திருந்தது. முடித்த விதம் உறுத்தியது.
சொன்னேன்.

“பார்த்தீங்களா.. கரெக்ட்டுன்னு கத்தினீங்களே.. இப்ப இது திசைமாறி இருக்கறது புரியுதா”

“புரியுது சார்..” நான் ஸீனைத் தொடர்ந்து சிந்திக்க தள்ளிப் போனேன்.

அன்று போகும் முன் என்னைத் தேடி கை குலுக்கிவிட்டு முகத்தை உற்றுப் பார்த்து விட்டுப்போனார். அந்த வினாடி நேரத்தில் எனக்கு அவர் எண்ணம் புரிந்தது.

“புத்தி சொல்வது போல் எங்கோ உங்கள் மனதை மிதித்து விட்டேனா. ஆமெனில் மன்னிக்க,” முகம் பேசியது. மறுநாள் நேரடியாய் வாய் வார்த்தையாகவும் சொல்லப்பட்டது.

“ஆமா.. பாலகுமார் சார். என்னைப் பத்தி என்ன நினைக்கறீங்க. என்கிட்ட ஏதாவது குறை இருக்கா”. ஒருநாள் கேட்டார்.

நான் சொன்னேன்.

9 comments:

said...

பாலகுமாரன் அவர்களின் இந்த கருத்துகள்
உலகம் பற்றிய நிதர்சனமான உண்மையை என் வலைத்தளத்தில் இணைத்து இருக்கிறேன்,,

நன்றி வாழ்த்துகள்.

said...

இன்றுதான் முதல் முதலாகப் பார்த்தேன் - அருமையான கருத்துக்கள்!

மனிதத்துவம் தற்போது எங்கே என ஆராய வேண்டி இருக்கிறது!

said...

அஹா என்ன அருமையான விஷயம் சொல்லப்பட்டு இருக்கிறது. இதைப் பார்த்தவுடனே இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.மேலும் நல்ல விஷயங்கள் யாரிடம் இருந்தாலும் அதை கற்றுக் கொள்ளலாம் என்ற விஷயம் இதன் மூலம் உணரமுடிகிறது.
நன்றி
கலைவினோத்

said...

நன்றி கிருஷ்ண துளசி
மிகவும் நன்றி.
எங்களின் நமஸ்காரங்கள்.
மிகுந்த அன்புடன்,
ஸ்ரீனிவாசன்.

said...

வணக்கம் ஸ்ரீனிவாசன்

மரணத்திற்கு பின்னால் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள சில நாட்களுக்கு முன் கேள்வி கேட்டிருந்தீர்கள் என்ற ஞாபகம்.

சொர்க்கம் நடுவிலே என்ற தொடர் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று நினைக்கிறேன்.

சூரிய கதிர் என்ற புத்தகத்தில் வெளி வரும் இந்த தொடரை படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

said...

ரஜினிகாந்த் என்ற வெற்றி நட்சத்திரத்தின் ஜ்வால்யத்தையும் எளிமையையும் உணர்த்தும் புத்தகம்.

தன் எண்ண ஓட்டங்களை மறைக்காமல் மிக சுவையாக உண்மையாக எழுதியிருக்கும் நேர்த்தி..

கற்றல் வாழ்வின் இறுதி வரை நடைபெற வேண்டிய விஷயம் என்பதையும் உணர்த்துகிறது.........

said...

எங்கள் குரு அவர்களினைப் பற்றியும் அவர்களின் கருத்துகள் , கட்டுரைகள் நிறைந்த இவ்வலைப்பூ இன்று தான் எனக்குப் படிக்க கிட்டியது,

வாழ்த்துகள் . வாழ்க வளமுடன் உங்கள் முயற்சி.

said...

யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெய குருராயா!!! குருவே! நமஹ! திரு.ரஜினிகாந்தின் தற்போதய புகழ் திடிர் என்று வந்துவிடவில்லை எத்தனை விமர்சனங்கள் வேதனைகள் தாங்கி வந்தவை அவைகள் அவரின் நல்ல குணத்தை அறிய ஒரு வாய்ப்பையும் மற்றவர்களின் விமர்சனங்கள் நம்முடைய வெற்றிக்கு என்றும் என்றும் வழி வகுக்கும் அவை நாம் எடுத்து கொள்ளும் விதத்தில் அமையும் வெட்டி விமர்சனங்கள் வேதனை தரும் அவை நமக்கு தேவை இல்லை என்பதையும் நல்ல விமர்சனங்கள் மட்டுமே நம்மை வெற்றிக்கான நல்வழியில் நடத்தி செல்லும் என்பதையும் திரு.ரஜினிகாந்தின் வாழ்க்கை பதிவுகளில் இருந்து நமக்கு சொல்லி தரும் நம் குருவுக்கு ஒரு நமஸ்காரம்.இது போன்ற விமர்சனங்கள் ந்ம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வந்திருக்கும், வந்துகொண்டிருக்கும், வரும். வரும் அச்சமயங்களில் நம் குருவாசகமான நிதானம், அமைதி, தனிமை இவைகளே போதும் வெற்றி நம் கையில்.வாழ்க்கையில் வெற்றிக் காணத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இத்தளம் ஒரு அறுவடை நிலம் பசி உளளவர்கள் புசித்துக் கொள்ளலாம்.குருவே நமஹ!

பகிர்தலுக்கு நன்றி
பாபு
சிங்கபூர்.

said...

வணக்கம் சார்.. நான் தலைவர் ரஜினி அவர்களின் தீவிர ரசிகன்.. அவர் ஒரு நல்ல மனம் படைத்த மனிதர்.. சுயநலமில்லாத , பொறாமை இல்லாத.. மற்றவரை தூற்றாத அற்புத குணம் படைத்தவர் என்பதில் எனக்கு வேறு கருத்து இருந்ததில்லை.. இருந்தும் அவரை பற்றி அவதூறாக எத்தனையோ பேர் பேச, எழுத கேட்டிருக்கிறேன்.. பல சமயம் இது என் மனதை புண்படுத்தி இருக்கின்றன.. இன்று உங்களின் இந்த பதிவை படிக்கும்போது.. பல மனிதர்களின் தூற்றல்களைதாண்டி.. தலைவர் ரஜினியின் நல்ல குணங்களின் மேல் உள்ள நம்பிக்கை அதிகமாகிறது.. மிக்க நன்றி.. உங்களின் நாவல்களை நான் நாவல் படிக்க ஆரம்பித்த காலத்தில் படித்திருக்கிறேன்.. நான் படித்த ஒரு சில நாவல்களில் உங்களின் நேசமில்லாத்வர்கள் என்னை சிறிய வயதில் மிகவும் யோசிக்க வைத்த ஒன்று.. உங்கள் நாவல்களில் எனக்கு பிடித்த சாராம்சம்.. நீங்கள் ஓவொரு நாவல்களிலும் ஒருவருடைய வேலை அது சம்பந்தமான ஆழமான அலசல்.. அதற்கு பின் இயங்கும் அயராத உழைப்பு.. என எந்த தொழிலாக இருந்தாலும் உழைப்பு ஒன்றினால் மட்டுமே அந்த வேலையில் வெற்றி சாத்தியம் என்பதை சொல்லாமல் சொல்லி இருப்பீர்கள்.. உங்களை பதிவர் உலகத்தில் பார்ப்பது.. மனதுக்கு இனிமையான உணர்வை கொடுக்கிறது..
நன்றி
சே. ராமச்சந்திரன்