Wednesday, December 2, 2009

திருவண்ணாமலை வந்த காசி மகான் - யோகி ராம்சுரத்குமார்




திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அலைந்து திரிந்து, வருவோர் போவோரிடம் யாசகம் கேட்டு உணவருந்தி ஒன்றுமில்லாத போது பட்டினி கிடந்து, வெயிலிலும் மழையிலும் நனைந்து, திருவண்ணாமலையையே வியப்புறப் பார்த்து ஞானியாக வாழ்ந்து வந்தார் ராம்சுரத்குன்வர். அவருடைய உள்ளொளி மேலும் மேலும் பெருகி கடவுளின் அண்மை அவருக்குள் ஏற்பட்டது. கடவுள் தன்மை அவருக்குள் இறங்கியது. ராம்சுரத்குன்வர் திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமார் என்று மாறினார்.

தங்க நாணயமயமான சிரிப்பு.. தன்னைத் தெரிந்த ஒருவருக்கே அப்படி ஒரு கிண்கிணியாய் சிரிக்க முடியும். புரிந்து கொண்டு சில நண்பர்கள் அவரை தினசரி தரிசித்தார்கள். ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் திருவண்ணாமலை வலம் வரும்போது அவரை யதேச்சையாக சந்தித்து அந்தக் கண்களுடைய தீட்சண்யத்தைக் கண்டு வியந்து, அவர் கால் பற்றி அவரைப் பின்தொடர்ந்தார்கள். கடவுளைப் பற்றி விவாதித்தார்கள். வாழ்க்கையைப் பற்றி யோசித்தார்கள். மேலைநாட்டினர் அதிகம் வந்ததால் அவரைப் பற்றிய விவரங்கள் உள்ளூரில் தெரிய வந்தன.


புன்னை மரத்துக்கருகே ஒரு கிணறு. அதில் இரவில் மேய்ந்து கொண்டிருந்த குதிரை விழுந்து விட்டது. மேலே ஏற பலத்த முயற்சிகள் செய்தது. அருகே போய் அதை கயிறு கட்டித் தூக்கிவிட எவராலும் இயலவில்லை. யோகி ராம்சுரத்குமார் சிறிது நேரம் காத்திருந்தார். பிறகு எல்லோரையும் விலகிப் போகச் சொன்னார். குதிரையை உற்றுப் பார்த்தார். குதிரை அவரைப் பார்த்தது. குதிரையின் உள்ளுக்குள் தன் கவனத்தை செலுத்தினார். குதிரையின் உடம்புக்குள் சக்தி ஏறியது. தாண்டுவதற்குண்டான உத்வேகத்தை தன் மனதின் மூலமாக குதிரையின் மனதுக்குள் செலுத்தினார். குதிரை தயாராக இருந்தது. ‘ஜெய் ராம்’ என்று ஒரு முறை உரக்கக் கத்தினார். குதிரை ஒரே துள்ளலில் கரையேறி ஓடிப் போயிற்று. அருகிலிருந்தவர்கள் வியந்தார்கள்.


இது எப்படி சாத்தியம்? கேட்டார்கள். “இந்தப் பெயரைச் சொன்னால் போதும்.. எல்லாவற்றையும் கரையேற்றும்” என்றார். அன்று முதல் ராமநாமம் சொல்கிறவராக, ராமநாமத்தைப் பரப்புகின்றவராக அவர் அறியப்பட்டார்.


அவை கையில் எப்போதும் வெப்பத்தை தணிக்க ஒரு விசிறி, உணவு வாங்க ஒரு கொட்டாங்சச்சி, கையிலே சிறு கோல் . இவற்றை வைத்து, அவருக்கு ‘விசிறி சாமியார்’ என்ற பெயரும் கிடைத்தது. ஆனால், அவர் தன்னை யோகி ராம்சுரத்குமார் என்று கூப்பிடுவதையே விரும்பினார். ‘ஏன்?’ என்று கேட்டபோது “கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ என்ற பெயர். இந்தப் பெயர் எவர் உச்சரிக்கிறாரோ, எவர் மனதார சொல்கிறாரோ, அவருக்கு என் தகப்பன், அதாவது கடவுள் உதவி செய்கிறார் என்பார்.


இது எவ்வளவு உண்மை என்பது, பலரது அனுபவத்திலிருந்து தெரிந்தது.


கணவன் மனைவிக்குள் சண்டை, மனைவியைக் கண்டபடி கணவன் ஏச, மனைவி ‘உங்களோடு வாழ்வதற்குப் பதிலாக செத்துப் போகலாம்’ என்றார். ‘ரொம்ப நல்லது, செத்துப் போ. நானே உனக்கு விஷம் கொடுக்கிறேன்’ என்று ஒரு குப்பி நிறைய விஷம் கொடுத்தான் கணவன். அந்த விஷத்தை ‘யோகி ராம்சுரத்குமார்’, ‘யோகி ராம்சுரத்குமார்’, ‘யோகி ராம்சுரத்குமார்’ என்று மூன்று முறை சொல்லி, மட மடவென்று அவள் குடித்தாள்.

என்னாயிற்று..?

எதுவும் ஆகவில்லை. விஷம் வேலை செய்யவில்லை. ஒரு வாரம் கழித்து யோகியிடம் வந்தாள் அந்தப் பெண்மணி..


“பகவான் உங்கள் பெயரை சொல்லி விஷம் குடித்தேன், வேலை செய்யவில்லை. மாறாக என் கணவர் தன் மீது கொலைப் பழி விழுந்துவிடுமோ என்று பயந்தார். நான் உங்கள் பெயரை சொல்லி விஷம் குடித்ததும், விஷம் வேலை செய்யாததும் கண்டு திகைத்து மன்னிப்பு கேட்டார். அவரும் வந்திருக்கிறார். உங்களுடைய பக்தராக”,என்றாள். அந்தக் குடும்பம் அதற்குப் பிறகு வெகு செளக்கியமாக வாழ்ந்தது.
பக்தர்கள் சேர்ந்து திருவண்ணாமலை சந்நிதித் தெருவில் யோகிக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்தார்கள். திருவண்ணாமலை சுற்றியுள்ள வியாபாரிகள் அவரை நேசித்தார்கள். இரண்டு பழம் அவருக்குக் கொடுத்தால் போதும்.. வாங்கிய பழம் எல்லாம் விற்றுப் போகும். அவருக்கு இரண்டு பன்னும், ஒரு கப் டீயும் கொடுத்தால் போதும்.. அங்கே வியாபாரம் அமோகமாக நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கிரிவலம் வரும் போது ‘வந்தே மாதரம்’ என்றும் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்றும் ‘ராம ராம ராம’ என்றும் ‘ஓம் ஸ்ரீராம், ஜெயராம், ஜெய ஜெய ராம்’ என்றும் முழக்கங்கள் செய்து கொண்டிருப்பார்.

ஒரு நண்பர், திருப்பதிக்குப் போகும் வழியில் திருவண்ணாமலை திரும்பி, யோகி ராம்சுரத்குமாரை தரிசித்து விட்டுப் போகலாம் என்று வந்தார். தான் திருப்பதிக்கு போகின்ற விஷயத்தை அவரிடம் சொன்னார். ‘திருப்பதிக்கு போக வேண்டுமா..? இங்கேயே இருக்கலாமே’ என்று பகவான் சொல்ல, அவர் மறுத்து, ஏற்பாடுகள் செய்து விட்டதாகவும், போயே ஆக வேண்டும் என்றும் விளக்கினார். பகவான் சரியென்று சொல்லி, ‘வேங்கடாசலபதியைப் பார்க்கிறபோது, ‘இந்த பிச்சைக்காரன் யார் என்று கேளுங்கள்’ என்று சொல்லி அனுப்பினார்.

அந்த அன்பரும், திருமலைக்குப் போனார். பெருமாளை தரிசித்ததும், யோகி ராம்சுரத்குமார் கேட்க சொன்னது ஞாபகம் வந்தது. ‘பெருமாளே.. திருவண்ணாமலையில் இருக்கும் யோகி ராம்சுரத்குமார் யார்?’ என்று உரக்க வினவினார்.

“ நேனே” என்று கருவரையிலிருந்து பதில் வந்தது. மறுபடியும் கேட்க, மறுபடியும் அதே பதில். திருவண்ணாமலைக்கு வந்து, பகவானிடம் இந்த விஷயத்தைச் சொல்ல, பகவான் தங்க நாணயங்கள் இறைத்தது போல உரக்கச் சிரித்தார். கடவுளும், எல்லாம் கடந்த ஞானியும் ஒன்று என்பது தெளிவாக புரிந்தது.

இந்த கட்டுரையாளனுக்கு யோகி ராம்சுரத்குமாரை சந்திக்கின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டபோது.. தான் எழுத்தாளன் என்றும், பல நாவல்கள் எழுதியிருப்பதாகவும், தனக்கு நல்ல வாசகர் வட்டம் இருப்பதாகவும் சொல்லிக்கொள்ள ஆசை. ஒரு டிராக்டர் கம்பெனியில் உத்தியோகம் பார்த்ததால் ஏதேனும் கொடுத்து ஏதேனும் வாங்குகின்ற புத்தி. பரிசுப் பொருட்களை அள்ளிக் கொண்டு போய் கொடுத்தால் அவர் மகிழ்ந்து போய் தன்னிடம் பேசுவார் என்ற ஒரு கணக்கு..
அவன் பலதும் வாங்கிக் கொண்டு, அங்கே அவற்றைப் பரப்பினான், அவை மறுபடியும் அவன் பையிற்கே போயின. முதல் சந்திப்பில் தன்னை முன்னிலைப்படுத்த முயன்றபோது, இந்தக் கட்டுரையாளன் புறக்கணிக்கப்பட்டு பின்னே தள்ளப்பட்டான். வீடு வந்த பிறகே, தான் விழுந்து வணங்கக் கூட இல்லை என்பது இவனுக்குப் புரிந்தது.


வணக்கமற்ற மனிதரிடத்தில் குரு மீது அன்பிருக்காது. தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கின்ற மனிதரிடத்தில் மற்றவருக்கு மரியாதை செய்யும் குணம் இருக்காது. பரிசுப் பொருட்களைக் கொடுத்து வேண்டியதை வாங்கிவிடலாம் என்கிற தந்திரம் இருப்பின் ஞானியிடமிருந்து எதுவும் கிடைக்காது. இது புரிந்தவுடனே அந்த எழுத்தாளன் மாறிப் போனான்.

மறுபடியும் அவரை சந்திக்கும் போது, முற்றிலும் ஒரு புது மனிதனாக, “யோக்கியதை இருந்தால் கூப்பிடுங்கள், எனக்கு யோக்கியதை இருந்தால் பேசுங்கள், எனக்கு யோக்யதை இருந்தால் கற்றுக் கொடுங்கள்” என்று உள்ளுக்குள் நினைத்தபடி கை கூப்ப, அந்த கதவு திறந்தது.

‘உனக்கு என்ன வேண்டும்..?’

‘என் நண்பர்கள் பலருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், அடிமனதில் கடவுள் இருக்கிறாரோ என்ற எண்ணம் இருக்கிறது. என்க்கோ கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் கடவுள் இல்லையோ என்ற சந்தேகம் இருக்கிறது. தயவுசெய்து கடவுள் இருக்கிறாரா இல்லையா ? கடவுளை எனக்கு காட்டினீர்களானால் நலமாக இருக்கும்’ என்றான் பணிவாக.

அவர் பதறினார். இந்த நண்பர் கடவுளைக் காட்டும்படி கேட்கிறார். இந்தப் பிச்சைக்காரனால் முடியுமா? என்று சொல்லி, அந்த எழுத்தாளனுடைய முதுகைத் தடவி, பிடரியைத் தடவி அணைத்துக் கொண்டார். எழுத்தாளனுக்குள் படர்ந்திருந்த அன்பு இறுக்கமாயிற்று. முதுகிலிருந்து பீறிட்டு எழுந்த ஒரு சக்தி அவன் நெஞ்சைத் தாக்கியது. வலது கையை உயர விரித்து, இடது கையை தாமரையாக்கி நெஞ்சுக்கருகே வைத்து, மிகப் பெரிய குரலெடுத்துக் கதறினான். உள்ளுக்குள் பெரும் மாற்றங்கள். அறுக்கோண முக்கோணங்கள் தெரிந்தன. எழுத்துக்கள் தோன்றின. அதைப் பிளந்து இன்னும் முன்னேறி நீலமயமாக மாறியது. நீலமயத்திலிருந்து வேறு இடத்தை நோக்கி அவன் வெகு வேகமாக பயணப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் உடம்பு ஆடாமல் இருந்தது, உள்ளுக்குள்ளே இருக்கின்ற ஒரு மனம் வேகமாகப் பயணப்பட்டது. ஆக, உடம்பு வேறு, உள்ளுக்குள் இருப்பது வேறு என்பது அந்த எழுத்தாளனுக்குப் புரிந்தது.

ஞானியிடம் என்ன கேட்பது..? நம் எல்லோரிடமும் மிகப் பெரிய பட்டியல் இருக்கிறது. ஆனால், அந்தப் பட்டியல் முக்கியமல்ல. உன்னைத் தெரிந்து கொள்வதே, உன்னை அறிவதே, கடவுளைத் தெரிவதே முக்கியம் என்பதை அந்த எழுத்தாளனுக்கு மிக சூட்சுமமாக விளக்கினார். எழுத்தாளன் புரிந்து கொண்டதும் அவன் உள்ளொளியைப் பெருக்கி, இறை தரிசனம் காட்டினார்.

யோகி ராம்சுரத்குமார்....20 பிப்ரவரி 2001-ல் முக்தி அடைந்தார். ஆனாலும், அவர் திருவண்ணாமலையில் இருந்தபடி உலகமெங்கிலும் பக்தர்களின் உள்ளத்தில் வீற்றிருந்தபடி இடையறாது இடையறாது நற்செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார். நல்லவர்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறார். தன்னை அண்டியவருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.


திருவண்ணாமலை செங்கம் ரோடில் அவருடைய ஆஸ்ரமம் உள்ளது. அங்கே அவருடைய சமாதியும், உருவச் சிலையும் அழகாகத் திகழ்கின்றன. தினசரி வழிபாடு அற்புதமாக நடக்கிறது.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவருடைய பக்தர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

“ யோகி ராம்சுரத்குமார்!

யோகி ராம்சுரத்குமார்!

யோகி ராம்சுரத்குமார்! ”

என்று மூன்று முறை அழைத்தால் போதும். இந்தப் பிச்சைக்காரன் நீங்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும், எந்தப் பிரச்சனை இருந்தாலும் நிச்சயமாக வந்து உதவி செய்வான்” என்று அந்த மகான் சத்தியம் செய்திருக்கிறார். அது இன்றளவும் அவருடைய பக்தர்களின் வாழ்க்கையில் நடந்து வருகிறது.

நீங்களும் மனம் ஒருமித்து அவர் பெயரைக் கூப்பிடுங்கள்; உங்களுக்கும் நல்லது நடக்கும்.



Monday, November 30, 2009

திருவண்ணாமலை வந்த காசி மகான் - யோகி ராம்சுரத்குமார்



கங்கைக் கரையோரம் இருந்தது, அந்தப் பையனின் வீடு, பள்ளி நேரம் போக மீதி நேரங்களில், அந்தப் பையன் கங்கைக் கரையோரம் நடக்கின்ற சாதுக்களுக்குப் பின்னே ஓடுவான். அவர்கள் வட்டமாக உட்கார்ந்து பேசுகிற போது, அவர்கள் பேசுவதை கேட்பான். இரவு முழுவதும் அவர்கள் கடவுளைப் பற்றிய விஷயங்களை விவாதம் செய்வார்கள்.

விளைவு மிகச் சிறு வயதிலேயே அந்தப் பையனின் உள்ளத்தில் கடவுள் தேடுதல் என்ற விதை விழுந்தது. அந்தப் பையன் வீரிய வித்தாக இருந்தான். வளர்ந்து மிகப் பெரிய ஆலமரமானான். அந்த ஆலமரத்துக்கு “யோகி ராம்சுரத்குமார்” என்று பின்னால் பெயர் வந்தது. இயற்பெயர் ராம்சுரத்குன்வர். பள்ளிப் படிப்பில் படுகெட்டி. அவரது குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம். கங்கைக் கரையோரம் நல்ல விளைநிலங்கள் சொந்தமாக இருந்தன. விவசாய வேலைகள் அதிகம். ஆண்களும் பெண்களும் சேர்ந்து பாடுபட்டால்தான், அதில் லாபம் என்பது சிறிதளவு கிடைக்கும். எனவே உழைப்புக்கு அஞ்சாத குடும்பமாக இருந்தது. ஆனால், ராம்சுரத்குன்வருக்கு படித்து பட்டம் பெறுவதில்தான் ஆர்வம். அந்தக் குடும்பத்தில் வேறு எவரும் அப்படி ஈடுபாட்டுடன் இல்லாததால், குடும்பத்தினர் ராம்சுரத்குன்வரை உற்சாகப்படுத்தினர்.

அந்த கிராமத்திலேயே மகான் ஒருவர், தனியே வசித்து, கடவுள் சிந்தனையாக இருந்தார். கிராமத்தினர் அவரிடம் நல்லது கெட்டதுக்குப் போய் பேசிவிட்டு வருவர். ராம்சுரத்குன்வரும், கடவுளைப் பற்றிய கேள்விகளை அவரிடம் வைக்க... “இதற்கு நான் பதில் சொல்வதைவிட, நீ காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து வா, அப்போது புரியும்” என்றார்.

காசிக்கு பயணப்பட்டார் ராம்சுரத்குன்வர். விஸ்வநாதர் கோயிலை அடைந்து கை கூப்பினார். ‘எத்தனை மகான்களை தரிசித்த சிவலிங்கம். எத்தனை பேர் தொட்டு பூஜித்த இறைவடிவம். எத்தனை அரசர்களும், சக்ரவர்த்திகளும், அவதார புருஷர்களும் இங்கே நுழைந்திருக்கிறார்கள்; மண்டியிட்டு தொழுதிருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட புனிதமான இடம்.’. அவருக்கு மெய்சிலிர்த்தது.


இந்த புண்ணிய பூமியில் நானும் கால் வைத்திருக்கிறேன். நானும் இந்த சிவலிங்கத்தைத் தொடப் போகிறேன். எனக்குள்ளே இருக்கிற இந்த மனமானது, முழுக்க இந்த சிவலிங்கத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறது. அம்மா சொல்கின்ற அத்தனை கதைகளும் இங்கே நடந்திருக்கின்றன. இந்த இடத்திலே பல அவதார புருஷர்கள் நின்றிருக்கிறார்கள் என்ற தவிப்புடன் அந்த சிவலிங்கத்தைத் தொட, அதிர்ச்சியாக மிகப் பெரிய மாறுதல் ஒன்று ஏற்பட்டது. இறை தரிசனம் என்பது கடுமையான உழைப்பில், மும்முரமான முனைப்பில் வருவது அல்ல. ‘அதுவே தன்னைக் காட்டினால் ஒழிய அதைப் புரிந்து கொள்ள முடியாது’ . இறையே விரும்பித் தொட்டால் ஒழிய, இறை எது என்பதை அறிய முடியாது. அந்த இளம் வயதில் ராம்சுரத்குன்வருக்கு, அற்புதமான இறை தரிசனம், அவர் கேட்காமல் இறைவனால் அவருக்குத் தரப்பட்டது.

இது என்ன... இந்த அதிர்ச்சி, உள்ளுக்குள்ளே தெரிந்த வெளி, இந்த மயக்கம்... இந்தத் தவிப்பு... இந்த ஆனந்தம் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அவற்றை வார்த்தையாக்கி வேறு எவருடனும் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை. இங்கே... இந்த அற்புதமான கோயிலில் அந்த மூர்த்தியைத் தொட்டபோது ஒரு மிகப் பெரிய மாறுதல் ஏற்பட்டதே, அப்படி மற்ற இடங்களிலுள்ள மூர்த்திகளைத் தொடும் போதும் ஏற்படுமோ?. உள்ளுக்குள் கேள்வி எழ, ஊர் சுற்றிப் பார்க்க ஆவல் ஏற்பட்டது. ஆனால், வீட்டார் அவரை வேறு விதமாக வளைத்தார்கள். திருமணத்துக்கு வற்புறுத்தினார்கள். கடைசியில், அவரால் மறுக்க முடியமால் போனது.

மனைவியின் பிறந்த வீடு சுபிட்சமாக இருந்தது. எனவே, படிக்க ஆசைப்பட்ட ராம்சுரத்குன்வருக்கு மனமுவந்து உதவி செய்தது. ராம்சுரத்குன்வர் காசி சர்வ கலாசாலையில் தொடர்ந்தார். பட்டப்படிப்பு முடித்தார். படித்த ஆங்கில இலக்கியமும், அவருக்கு கடவுள் தேடலில் அதிகம் உதவி செய்தது. அதற்குள் சில குழந்தைகளுக்கு அவர் தந்தையானார். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கவும், மனைவிக்கு உதவி செய்யவுமே வாழ்க்கையின் பெரும் பகுதி போயிற்று. ஆனால், அடி மனதில் இடையறாது காசி தேசத்தில் ஏற்பட்ட அந்த அதிர்ச்சியும், அதுபோல வேண்டுமென்ற ஆவலும், அதைத் தேடுகின்ற குணமும் இருந்தன. இன்னும் சற்று வயதான பிறகு, கடவுள் தேடலை வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. கூடவே, கடவுள் தேடலை கடைசி வரை செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற கவலையும் இருந்தது. உண்மையான ஒருவனுக்கு, கடவுள் தேடலும் குடும்ப பாரமும் இடையறாது தொந்தரவு கொடுத்துக் கொண்டேதான் இருக்கும்.
கடவுளை நோக்கி நகரும் போது குடும்பம் இழுக்கும். குடும்பத்தையே சுற்றி வரும்போது கடவுள் நினைப்பு இழுக்கும். நல்ல மனிதனின் இடையறாத போராட்டம் இது. சரியான உறக்கத்தை கொடுக்காது; திடுக்கிட்டு எழ வைக்கும். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது இது தான்! அவர் இவை இரண்டுக்குமான வேதனையில் தவித்தார். பிரியமான மனைவி; அற்புதமான குழந்தைகள்; நல்ல மாமனார் வீடு; சுகமான தாய்-தந்தை, ஆயினும் கடவுள் என்பது வேறு இடத்தில், வேறு எங்கோ இருப்பதாக அவருக்குத் தோன்றியது.

பட்டப் படிப்பு முடித்த ராம்சுரத்குன்வருக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. பழைய பள்ளிக் கூடம் ஒன்றை, முழுவதுமாகத் தூக்கி நிறுத்த வேண்டிய சந்தர்ப்பம். அந்தக் பள்ளிக்கூடத்துக்கு அடிப்படையான வசதிகள் எதுவும் இல்லை. கரும்பலகையோ, மேஜையோ, நாற்காலியோ, மாணவர்கள் உட்கார்ந்து படிக்க காற்றோட்டமான இடமோ எதுவுமில்லை. விரிசல் விட்ட சுவர்கள், ஒழுகும் ஓடுகள் என்று சிதிலமாக இருந்தது. அவர் நிர்வாகத்திடம் முறையிட, ‘இது போதும்’ என்று நிர்வாகம் அலட்சியப்படுத்த, அந்தப் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து பையன்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார். பள்ளிக்கூடம் சரியாகும்வரை வரத் தேவையில்லை என்று கட்டளையிட்டார்.

நிர்வாகம் எகிறியது. ஆனால், இவர் விடாப்பிடியாக நின்றார். ஊர்மக்கள் ஒன்று கூடி நிர்வாகத்திடம் பேச, ஊரும் நிர்வாகமும் ஒன்று சேர்ந்து பள்ளிக்கூடத்தை நிமிர்த்தியது. ராம்சுரத்குன்வர் போராடி வெற்றி பெற்றார். இந்த விஷயம் அவரை உற்சாகப்படுத்தியது. எந்த ஒரு விஷயத்தை வெற்றி கொள்ள வேண்டுமென்றாலும் அதை நோக்கி முனைப்பாகவும், வேகமாகவும், விடாப்பிடியாகவும், உண்மையோடும், உறுதியோடும் இருக்க வேண்டும் என்பது புரிந்தது. இதைத்தான் கடவுள் தேடலிலும் கைக்கொள்ள வேண்டும் என்று அவர் புரிந்து கொண்டார்.

பள்ளிக்கூடம் நடக்கத் துவங்கியது. சிறிய வருமானம்;ஆனாலும், வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்தது, சிறிது காசு சேர்த்தால், கோடை விடுமுறையில் ஊர் சுற்றலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது. தெற்கே சாதுக்களும், மகான்களும் அதிகம்... அப்படிப் போவதுதான் நல்லது என்று உணர்த்தப்பட்டது. திருவண்ணாமலை.. பகவான் ஸ்ரீரமண மகரிஷி, ஸ்ரீ அரவிந்தர் என்ற பெயர்கள் அவருக்குச் சொல்லப்பட்டன. அவ்வாறே, தெற்கே போக ரயில் ஏறினார். டிக்கெட்டையும் பணப்பையையும் பத்திரமாக வைத்துக் கொண்டார். ஆனால், மூன்று ரயில் நிலையங்கள் தாண்டுவதற்குள் டிக்கெட்டும், பணப்பையும் காணாமல் போயின! பதறிப் போய் நான்காவது ரயில் நிலையத்தில் கீழிறங்கினார்.

என்ன செய்வது? ரமண மகரிஷியைத் தேடிப் போவதா.. அரவிந்தரை நோக்கிப் போவதா.. மெளனமாக வீடு திரும்புவதா? ஆரம்பித்த காரியம் சுணங்குகிறதே. ஏன் இப்படி? கடவுள் தேடலை கடவுளே விரும்பவில்லையோ?

தயங்கினார்; குழம்பினார்.

எது தடுத்தாலும், எவர் தடுத்தாலும் ஸ்ரீரமணரை நோக்கிப் போவேன் என்ற பிடிவாதம், வைராக்கியம் உள்ளே ஏற்பட்டது. ஆனால், டிக்கெட் இல்லாமல் பயணிக்க விரும்பவில்லை. அங்கு உள்ள பள்ளிக்கூடத்துக்குப் போய், ஆசிரியரிடம் கை கூப்பினார். தனது நிலைமையைச் சொன்னார். ஆசிரியர் அவரை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த, அந்த மாணவர்கள் எதிரே ஆசிரியர் ராம்சுரத்குன்வர் கைகூப்பி, தன் நிலையைச் சொல்லி, பள்ளி மாணவர்கள் உதவினால் அதை வைத்து, பயணச்சீட்டு வாங்கி தொடர்ந்து பயணம் மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். காலணா, அரையணா, இரண்டணா கொடுத்து அவரை ரயிலேற்றி அனுப்பினார்கள்.

யார் கையேந்தி கேட்கிறார்களோ, அவர்களுக்கே கடவுள் தன்மை இடப்படும். எனவே, கையேந்திக் கேட்கின்ற பணிவை முதலில் கொள்ள வேண்டும். தான் ‘ஆசிரியர்’ என்ற அகந்தையைத் தூக்கி எறிந்து, அந்த மாணவர்களிடம் மெள்ள கை கூப்பிக் கெஞ்சிய ராம்சுரத்குன்வருக்கு புதிய பாதை திறந்தது. கடவுள் தேடுதலுக்கு முதல் படியான கர்வம் அழித்தல் அங்கே தானாக, இயல்பாக நடந்தது. ஆசிரியர் என்ற அலட்டலில் இருந்து விடுபட்டு, யாரிடம் அவர் அதிகாரம் செலுத்த முடியுமோ அந்த மாணவர்கள் கொடுத்த காசைக் கொண்டே தன் கடவுள் தேடலைத் தொடர்ந்தார். ரயில் திருவண்ணாமலை வந்தடைந்தது.

ஸ்ரீரமண தரிசனம் அற்புதமாக அமைந்தது. இவரே! இவரே! என் குரு என்ற மிகப் பெரிய கேவல் எழுந்தது. அதே நேரம் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றி அறிந்து, பாண்டிச்சேரியை நோக்கி பயணப்பட்டார். ஆனால் அவரை தரிசிக்க முடியவில்லை, ஆனாலும், சூட்சுமமாக அரவிந்தர் தரிசனம் கிடைத்தது. மறுபடி திருவண்ணாமலை வந்தார்.ஊருக்குப் போக எண்ணம் எழுந்தது. மறுபடியும் ரயில் ஏறினார். மீண்டும் இல்வாழ்க்கை நடத்த வேண்டி இருக்கிறதே என்ற கலக்கம். கடவுளைத் தேடுபவர் வெளியே அலைய அலையத்தான் உள்ளுக்குள் போகமுடியும். வெளியே கடவுள் இல்லை; உள்ளே தன் உள்ளத்தில் இருக்கிறார் என்பதை, அலைந்ததுதான் தெரிந்து கொள்ள முடியும்.

அடுத்த விடுமுறையில் வடக்கே பயணப்பட்டார். இமயமலைச் சரிவுகளில் அலைந்தார். அதே நேரம் திருவண்ணாமலையில் ஸ்ரீரமண மகரிஷி முக்தியடைந்தார்; பாண்டிச்சேரியில் அரவிந்தர் மறைந்தார் என்பது தெரிய வர, இடிந்து போனார். அற்புதமான இரண்டு ஞானிகளுடன் நெருங்கி இல்லாமல், மறுபடியும் குடும்ப பாரம் இழுக்க வந்தேனே.. என்று கவலைப்பட்டார்.

அப்போது பப்பா ராம்தாஸ் என்ற பெயர் காதில் விழுந்தது. மங்களூருக்கு அருகில் கஞ்சன்காடு என்ற இடத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டார். அவரை இழக்க விரும்பவில்லை. எனவே ராமதாஸை நோக்கி விடுமுறையில் பயணம் துவங்கினார். ராமதாஸரின் ஆஸ்ரமத்தில் தங்கினார். பப்பா ராமதாஸ் அவருக்கு ராம நாமம் உபதேசித்தார். “இடையறாது ராம நாமம் சொல்” என்றார். ராம்சுரத்குன்வர் குருவின் கட்டளையை மீறவில்லை. ராம நாமம் அவருக்குள் மிக விரைவிலேயே மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரின் உள்ளொளி விகசித்துப் பொங்கியது. உடுப்பதும் உண்பதும் கூட மறந்து, ராம நாமம் சொல்வதே வேலையாக இருந்தது.

உள்ளுக்குள் ராம நாமம் பொங்க, எந்த நியதிக்கும் அவரால் கட்டுப்பட முடியவில்லை; எதுவும் புலப்படவில்லை. அவர் தன்வசம் இழந்தவராக, சின்மயமானவராக எல்லா இடத்திலும் இருப்பவராக உணர்ந்தார். ஆனால், பொது வாழ்க்கையில் இந்த நிலை பித்து என்று வர்ணிக்கப்படும். பைத்தியக்காரன் என்ற பட்டப்பெயர் கிடைக்கும். அதனால் ராம்சுரத்குன்வருக்கும் இப்படி பட்டப்பெயர் கிடைத்தது. அதனால், ராம்சுரத்குன்வர் ஆஸ்ரமத்தில் இருந்து மென்மையாக வெளியேற்றப்பட்டார்.

உன்மத்த நிலையோடே வீடு வந்தார். வீடு அவரை விநோதமாக பார்த்தது. மனைவி கவலையானார். அவரை சரியான நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால் உன்மத்தம் அதிகமானது, கிராமத்தின் மரத்தடிகளில் அமர்ந்து வேலைக்கு போகாமல் திரும்பத் திரும்ப ராம நாமமே சொல்லிக் கொண்டிருந்தார். தன்னந்தனியே கங்கைக்கரையோரம் திரிந்து கொண்டிருந்தார்.
உணர்தல் என்ற விஷயமே கடவுள் தேடல் விஷயம். தன்னை உணர முற்படுகிறபோது இது பிரமாண்டமாக விரிவடைகிறது. எல்லா இடங்களிலும் அது நீக்கமற நிறைகிறது. அப்போது அவருக்கு, தான் என்ன செய்கிறோம் என்கிற நினைப்பு இல்லை. இந்த உலகாயதமான மரியாதைகள் அவருக்குத் தெரியவில்லை. அவர் தனக்குள் பேசியபடி தன்னையே பார்த்தபடி இருக்கிறார். தன்னை உற்றுப் பார்ப்பவருடைய அவஸ்தை மற்றவரைப் பார்க்க விடுவதில்லை. தனக்குள் உள்ள அந்த ‘தான்’ என்பதை அனுபவிக்கிற போது வேறு எதுவும் மனதுக்குப் புலப்படுவதில்லை. இதுவொரு கலக்கமான நேரம். கலங்கியதுதான் தெளியும். விரைவில் தெளிந்தது. மிகப்பெரிய உண்மை ஒன்று எளிதில் புலப்பட்டது. அவர் குடும்பத்தை விட்டு மறுபடியும் திருவண்ணாமலை நோக்கிப் பயணப்பட்டார்.

திருவண்ணாமலைக்கு வந்து இறங்கினார். அங்கு ஒரு புன்னை மரத்தடியில் இடையறாது இறை நாமம் சொல்லி வந்தார். அதற்குப் பிறகு அவர் குடும்பத்தை நோக்கிப் போகவே இல்லை; கட்டு அறுந்து போயிற்று; கடவுளோடு பிணைப்பு உறுதியாயிற்று.

Saturday, November 28, 2009

சூரியனோடு சில நாட்கள் - பாலகுமாரன் பேசுகிறார் -3

சந்தேகம் வந்தபோது மனசு சட்டென்று வெகுதூரம் பின்னோக்கிப் போயிற்று.

தர்மயுத்தம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது எனக்கு ரஜினிகாந்த் அவர்களோடு பழக்கம் ஏற்பட்டது. ரஜினிகாந்தின் பரபரப்பான நேரம் அது. வெற்றிகள் அவரை நோக்கி வந்து கொண்டிருந்தன. ஏதோ ஒரு விதத்தில் அவர் எல்லோராலும் கவரப்பட்டார். அவரைப் பற்றிய கிசுகிசுக்கள் உச்சக்கட்டம் அடைந்திருந்த காலம் அது.

சாவி பத்திரிக்கையின் சார்பாய் அவரை பேட்டி காணச் சென்றிருந்தேன். காலை எட்டு மணி இருக்கும்.

“டிபன் சாப்பிட்டீங்களா”. ரஜினி கேட்டார்.
“இல்லை”.

“கார் எங்கே’- தேடினார்.
அவருடைய கார் எங்கேயோ போயிருந்தது.
“எதில் வந்திருக்கிறீர்கள்”.
“ஸ்கூட்டர்”
“வாங்க போவோம்”

நான் வண்டியை ஸ்டார்ட் செய்ய, ரஜினிகாந்த் என்னிடமிருந்து வண்டியை வாங்கிக் கொண்டார். நான் பிலியனில் ஏறிக் கொள்ள, வண்டியை அவர் ஓட்டினார். டிரைவ்-இன் ஓட்டலுக்கு வண்டி போயிற்று,

கூட்டம் அதிகமில்லாத அந்த நேரத்தில் நிறைய மனம் விட்டுப் பேசினார். அவர் பேசிய விஷயங்கள் பலது எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றன. என் வாழ்க்கையில் அந்தப் பேச்சுகள் மிகவும் உதவின. அவர் சொன்ன நேரடி வாக்கியங்கள் நினைவில் இல்லை. அதனால் அதன் சாராம்சம் சொல்கிறேன்.


“எவர் உயர்ந்தாலும், உன்னதமான நிலைக்கு வந்தாலும் அவரைத் தூற்ற, அந்த நிலையிலிருந்து அவரைச் சாய்க்க, உலகத்தின் ஒரு பகுதி கடுமையாய் முயலும், அதுவும் மிகச் சாதாரணமாய் இருந்தவர் முன்னேறினால் அவருக்கு எதிரிகள் உடனே உருவாகி விடுவார்கள்.

தனக்கு யோக்கியதை இருந்தும் உயர்வு கிடைக்கவில்லை. யோக்கியதை இல்லாத இவனுக்குக் கிடைத்து விட்டது என்று சிலர் பொறாமைப்படுவார்கள். இவ்வளவு உயரத்துக்கு இவர் வந்துடுவார்னு அன்னிக்கே தெரிஞ்சிருந்தா இன்னும் க்ளோசா ஒட்டிட்டிருந்திருப்பேனே. தெரியாத போயிடுத்து. இப்ப ஓட்ட ட்ரை பண்ணுவோம். ஒட்டவிடலைன்னா தொந்தரவு பண்ணுவோம். எனக்கு தெரியும்டா உன்னைப் பத்தி, என்கிட்ட டீ வாங்கி குடிச்சவந்தான் என்று சொல்லி எரிச்சல் மூட்டுவோம் என்று வேறு சிலர் முயல்வார்கள்.

கண்டக்டரா, கன்னடமா, தமிழ், இங்கிலீஷ், ஃப்ரெஞ்ச் எதுவும் தெரியாதா. டான்ஸ் வராதா...நாவல் படிக்கிற பழக்கம் இல்லையா. ஸ்கேட்டிங், ரைஃபிள் ஷுட்டிங். ஒண்ணும் தெரியாதா. பின்ன எப்படி இவ்வளவு உயரத்துல. ஏதோ குருட்டு அதிர்ஷ்டமா. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் அவுத்துவிட்டு உனக்கு என்ன தெரியலை பார்னு குழப்பி வுட்டுரலாம். இப்படியும் சிலர் முயல்வார்கள்.

இவர்கள் எல்லோரையும் அமைதியாய் அதிகம் எதிர்ப்பு காட்டாது சமாளித்தாக வேண்டும். அளவுக்கு மீறிய பொறுமை வேண்டும். பொறுமையே சிறிதும் இல்லாத நான் வன்முறையாய், வலுக்கட்டாயமாய் மெளனத்தை-அமைதியை வரவழைத்துக் கொள்கிறேன். சில சமயம் சிதறடித்து விடுகிறேன். நான் பெரிய தத்துவவாதியில்லை, நான் அதிகம் புத்தகம் படித்ததில்லை. ஆனால் இரவில் மனம் நொந்து புரண்டு படுக்கிறபோது எனக்கு நடந்த வேதனைகளின் வேர் எது என்று யோசிக்கிறபோது வாழ்க்கை மொத்தமும் பிடிபட்டுப் போவது போல் இருக்கிறது.

மனிதர்கள் ஆரம்பத்தில் இப்படித் தான் வேதனைப்படுத்துவார்கள். தாங்கிக் கொள் என்று தெளிவாய் தெரிகிறது. எதிர்த்தால் சரிவு நிச்சயம். அதனால் பிறர் ஹிம்சையைத் தாங்கி அமைதியாய் நமது அடுத்த வேலையைச் செய்ய.. இன்னும் உயர்வு வரும். மனிதர்கள் தாக்கவே முடியாத உயர்வுக்குப் போய்விட வேண்டும். அதற்கு வேறு எதிலும் கவனம் சிதறாது உழைக்கவேண்டும்.”


இது ரஜினிக்கு மட்டுமல்ல, பாலகுமாரனுக்கும் பொருந்தும். செய்யும் வேலைக்குக் கேலி வரும். அது மனிதர் குணம். நமக்கு அடுத்த வேலை தான் கவனம். கேலி சாதாரணம்.

வார்த்தைகளாய் அன்று இருந்த ரஜினி, வார்த்தைகளை உள்வாங்கி ஜெயித்திருக்கிறார். உங்களுக்கு இது அது தெரியுமா எனக் கேட்டு, இழிவுபடுத்துவார்கள் என்று நினைத்த ரஜினிகாந்த், இன்று சித்தர்கள் பாடல் பற்றி சொல்லச் சொல்லி கேட்கிறார். ஓஷோ என்கிற பகவான் ரஜனீஷ் தத்துவங்கள் பற்றி படிக்கிறார். ரமணர் வாழ்க்கை பற்றியும், வாக்கு பற்றியும் அதிகம் தெரிந்திருக்கிறார்.

தத்துவங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது மட்டும் பெருமையான விஷயம் இல்லை. அவைகளை உள்வாங்கி ஒட்டி வாழ்தல் முக்கியம் என்பது புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் கோபப்படுவதில்லை. ஆனால் தீர்மனாமாய் இருக்கிறார்.

ரஜினிகாந்த் இனிமையாய் இருக்கிறார். ஆனால், எல்லாவற்றுக்கும் இணக்கமாய் இருந்து விடுவதில்லை. மனசு விட்டு பாராட்டுகிறார்.

‘பாலகுமார் சார், அந்த காலேஜ் அட்மிஷன் பத்தி யுவராணி பேசறாது நல்லாயிருந்தது.’

நான் அன்றைய ஷுட்டிங்கிற்கு எழுதிக் கொடுத்து விட்டு வேறு வேலைக்குப் போய் விட்டேன். ஆனாலும் கூப்பிட்டு பாராட்டி, “ரஜினி சார்.. நான் நேத்து ஷுட்டிங்க்கு வரலைன்றதுக்காக இப்படி கூப்பிட்டு பாராட்டறா மாதிரி..”

“கடவுளே.. மனசாரப் பாராட்டக் கூடாதா. ஏன் சந்தேகமாவே பார்க்கறீங்க. எனக்கு பிடிக்காத விஷயத்தை மூஞ்சிக்கு நேர சொல்லி விடுவேன்”.

“இதுவரைக்கும் சொன்னதில்லை”

“பிடிக்காதது எதுவும் இதுவரை உங்களாண்ட எனக்குத் தெரியலை. சொல்லலை”

ஆனால் சட்டென்று ஒருநாள் மெத்தென்ற குட்டு விழுந்தது.

“இந்த ஸீனை இப்படி ஆரம்பிச்சா என்ன..” அவர் சொல்ல ஆரம்பிக்க, அதனுடைய நூல் புரிந்து கொண்ட நான் அதே விதமாகவே யோசித்து வைத்திருந்த சந்தோஷத்தில் குறுக்கிட்டு, “க்ரெக்ட்.. இது சொன்னதுக்கப்புறம் அந்த டயலாக் தொடர்ச்சிய..”

சட்டென்று உற்றுப் பார்த்தார்.

“பாலகுமார் சார்.. உங்கக்கிட்ட ஒரு தப்பு இருக்கு.. சொல்லட்டா”.
“சொல்லுங்க சார்”.
“ஸ்பீட் ரொம்ப ஜாஸ்தி. இது தேவையில்லை. என்னை முழுக்கப் பேசவிடறதேயில்லை நீங்க. ஒரு இடம் தொட்டவுடனே மடமடன்னு கம்ப்யூட்டர் கணக்கா போயிடறீங்க. போலாம். தப்பில்லை. எதிராளியைப் பேசவிட்டு அப்புறம் உங்க நேரம் வரபோது பேசுங்க”.

“சரி சார். ஸீன் சொல்லுங்க”
சொன்னார். சொன்ன பிறகு கருத்து கேட்டார்.

அந்த ஸீன் ஆரம்பித்த விதம் பிடித்திருந்தது. முடித்த விதம் உறுத்தியது.
சொன்னேன்.

“பார்த்தீங்களா.. கரெக்ட்டுன்னு கத்தினீங்களே.. இப்ப இது திசைமாறி இருக்கறது புரியுதா”

“புரியுது சார்..” நான் ஸீனைத் தொடர்ந்து சிந்திக்க தள்ளிப் போனேன்.

அன்று போகும் முன் என்னைத் தேடி கை குலுக்கிவிட்டு முகத்தை உற்றுப் பார்த்து விட்டுப்போனார். அந்த வினாடி நேரத்தில் எனக்கு அவர் எண்ணம் புரிந்தது.

“புத்தி சொல்வது போல் எங்கோ உங்கள் மனதை மிதித்து விட்டேனா. ஆமெனில் மன்னிக்க,” முகம் பேசியது. மறுநாள் நேரடியாய் வாய் வார்த்தையாகவும் சொல்லப்பட்டது.

“ஆமா.. பாலகுமார் சார். என்னைப் பத்தி என்ன நினைக்கறீங்க. என்கிட்ட ஏதாவது குறை இருக்கா”. ஒருநாள் கேட்டார்.

நான் சொன்னேன்.

Friday, November 27, 2009

சொர்க்கம் நடுவிலே - பாலகுமாரன்


"ஜெய விஜயீ பவ"
என் பெயர் கேசவன் நாராயணன். சோழ நாட்டின் உபதளபதி. நான் அந்தணன். ஆனாலும் போர் தொழில் செய்பவன்.
நான் இறந்து ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டன.



இப்போது பூமியிலுமில்லாமல் பிரபஞ்சத்திலுமில்லாமல் இடையிலே ஆகாயத்தில் அலைக்கழிகிறேன். இங்கே காலம் வித்தியாசமானது. சூரியன் உதிப்பது , மறைவது என்று எதுவுமே இல்லை. எந்நேரமும் மங்கலான ஒரு வெளிச்சம் மட்டுமே உள்ளது.




இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமா ? பனி படர்ந்த நேரத்து விடியற்காலை வெளிச்சம் போல மிகப் பிரம்மாண்டமான வெளி . அதில் தனியே இருப்பது போன்ற உணர்வு. பூமியில் பார்ப்பதும், கேட்பதும் உடல் வழியே நடைபெறுகிறது அல்லவா ? அது இங்கே சாத்தியமில்லை. எல்லாமே உணர்வு தான்.


.......................................... கீழே தொண்டை நாட்டின் ஒரு பகுதியான திருவான்மியூருக்கும் , மயிலாப்பூருக்கும் நடுவே ஒரு இடத்தில் ஒரு பெண் நடந்து கொண்டிருக்கிறாள் ...........................திடீரென்று அவளைச் சுற்றி ஒரு வெற்றிடம் உண்டானது.


இறப்பதற்கு சில விநாடிகள் முன்பு மனிதர்களைச் சுற்றி இப்படி ஒரு வெற்றிடம் உண்டாகும். அந்த வெற்றிடம் உடம்புக்குள் இருக்கின்ற உயிர்ச்சக்தியை உறிஞ்சி வெளியே இழுத்துப் போடும். அப்படி இழுத்துப் போடுவதற்கு சுற்றிலும் இருக்கின்ற சக்திகள் உதவி செய்யும் . அப்படித் தான் இந்தப் பெண்ணை சுற்றியும் வெற்றிடம் உண்டாகியது. அவள் உயிரை உறிஞ்சுவதற்கு வெளியே இருக்கின்ற சக்திகளும் தயாராக இருந்தன. .......














கற்றுக்கொண்டால் குற்றமில்லை


அறிதல் என்பது ஒரு மனிதனின் ஆயுள் முழுவதும் பரவிக்கிடக்கிற விஷயம். அறிதலில் வேகமும், அறிய வேண்டிய தேவையும் மனிதனின் ஒரு காலகட்டத்தில் அதிகமாகவும், ஒரு காலகட்டத்தில் குறைவாகவும் இருக்குமே தவிர, அறிதலற்ற வாழ்க்கை என்பதில்லை. அறிதல் என்பது இவ்வுலகத்தின் தொடர்ந்த நியதி. அறிதலில் இன்னொரு விதமான வார்த்தை பாகுதான் கற்றுக்கொள்ளல். இந்த கட்டுரையை படிக்கவும் இதை பற்றி சிந்திக்கவும் நீங்கள் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இதை படிப்பதின் மூலமும் ஒன்றை கற்றுக் கொள்கிறீர்கள். சிந்திக்கிறீர்கள், படித்ததைப் பற்றி சிந்திப்பது கற்றுக் கொள்வதில் ஒரு பகுதி, ஒரு பரிமாணம்.

இதைப் போலவே பார்ப்பதும், பேசுவதும், எதையோ இடைவிடாது கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன. கற்றுக் கொள்வது என்றால் என்ன? செய்ததை செய்வது. கொச்சையாக சொன்னால் காப்பியடிப்பது, அப்படி செய்வதில், அல்லது காப்பியடிப்பதில் ஒரு வளர்ச்சியை காண்கிறீர்கள். நெருப்புக்கு பயந்த ஆதி மனிதன், காட்டு தீயில் பொசுங்கி போன கன்று மாமிசத்தை தின்று பார்த்து விட்டு ஒரு ருசியை கண்டு கொண்டான். ஒரு உணவை இப்படி பக்குவப்படுத்தலாமோ என்று கற்றுக் கொண்டான். அப்படி கற்றுக் கொண்டதுதான் இன்றைய இடியாப்பம், வடைகறியாக, பிஸ்கட் ஐஸ்கிரீமாக, தந்தூரி சிக்கனாக இருக்கிறது.

உடையும், உறைவிடமும் இப்படி மாறி இருப்பதை நீங்கள் சுலபமாக தெரிந்து கொள்ளமுடியும், ஒரு தனி மனித வளர்ச்சியில் இந்த கற்றுக் கொள்வதுதான் அளவிடப்படுகிறது.

எனவே கற்றுக் கொள்வது என்பது தனி மனித வளர்ச்சி என்பது மட்டுமல்லாது, சமூக வளர்ச்சியாகவும் கருதப்படும். வளர்ச்சி தலைமுறை தலைமுறையாக வளரும் விஷயம். இந்த வளர்ச்சி தவிர்க்க முடியாத ஒரு நிர்பந்தம். நான் கம்ப்யூட்டர் தெரிந்து கொள்ளாமலேயே மத்திம வயதை தாண்டிவிட்டேன். என் பிள்ளை கற்றுக்கொண்டே ஆகவேண்டும், இல்லாவிடில் அவன் வாழ்க்கை சிக்கலாகும். இது அவனுக்கு ஏற்பட்ட நிர்பந்தம்.

எனவே கற்றுக்கொள்வது காப்பியடிப்பது மட்டுமல்ல அதை தாண்டியும் போவது. அதே பதினாறாம் வாய்ப்பாடுதான். கருவிதான் வேறு. கற்றுக்கொண்டே இருப்பதில் முன்னேறிக் கொண்டே இருப்பதும் ஒரு நிர்ப்பந்தம்தான். சரி, ஏன் கற்கவேண்டும்? வாலிழந்த நரிக்கூட்டத்தில் வாலுள்ள நரி விநோதம். பைத்தியம். நெருப்பு எதற்கு என்று பச்சையாக மாமிசம் சாப்பிட்டால் இளக்காரமாகும். ஏதோ போல் இருக்கும். உணவில் மட்டுமல்ல இனி குடுமியும், கோவணமும்தான் உடை. என் மூதாதையர்கள் அப்படிதான் இருந்தார்கள் என்று நாம் பேசக்கூட அனுமதிக்கவில்லை. பேண்ட் அத்தியாவசியம்.

கற்றுக்கொள்வதில் ஊரோடு ஒத்து வாழ் என்கிற அர்த்தமும் உள்ளடங்கி இருக்கிறது. அப்படி ஒட்டவில்லையெனில் ‘பல கற்றும் கல்லார்’ என்று சொல்லப்படாமல் இருப்பதற்கே நாம் கற்றாக வேண்டும். எதற்கு எழுதப் படிக்க தெரிய வேண்டும் என்ற காலம் போய் நிச்சயம் தெரிந்தே ஆக வேண்டும் என்ற காலம் வந்து விட்டது. நானும் உங்களுக்கு சிலதை கற்றுக்கொடுக்கப் போகிறேன். நான் எங்கோ கற்று கவனித்து தெளிந்து செயல்பட்டதை உங்களுக்கு சொல்லப்போகிறேன். நீங்கள் இதற்கு பிற்பாடு கவனித்து தெளிந்து பிறருக்கு நான் சொன்னதை காட்டிலும் தெளிவாய் சொல்லக்கூடும். இப்படிதான் மனிதன் இனம் வாழ்ந்தது. இனியும் வாழும்.

உங்களுக்கு யாரும் சொல்லித் தராததை சொல்லப் போவதில்லை. இவை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம், தெரிந்திருப்பின் கட்டுரையை புறக்கணித்து விடுங்கள். தெரியாதிருப்பின் கவனித்துக் கொள்ளுங்கள். நான் விஞ்ஞானி இல்லை. வேறு எந்த ஞானமும் கைவரப்படவில்லை. என் நாற்பத்தேழு வயதில் நான் ஊன்றி கவனித்து பழகியவைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விருப்புகிறேன். எனவேதான் கற்றுத்தருகிறேன் என்ற கர்வம் காட்டுவதுகூட செய்யாதிருக்க தோன்றியது. அனுபவ பகிர்தலை அவசியமான பாடம் என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது.

என் அனுபவத்தை நீங்கள் அறிந்து கொண்டால் அதாவது கற்றுக் கொண்டால் பெரிய குற்றம் வந்துவிடாது என்கிற தலைப்பு கொடுத்தேன். இது அவையடக்கமாக சொல்லப்பட்ட தலைப்பு அல்ல. ஆராய்ந்து ஆராய்ந்து ஆதார விளக்கங்களுடன் அதற்கான புத்தக குறிப்புடன் இந்த கட்டுரை எழுதப்படவில்லை என்பதற்காகவே இந்த தலைப்போடு இக்கட்டுரையை தொடர்கிறேன்.

காலையில் எழுந்திருப்பது என்கிற விஷயத்திலிருந்து பேசத் துவங்கி விடுவோமா, உறக்கம் கலைந்து படுக்கையை விட்டு எழுந்திருப்பது எப்படி என்பதைப் பற்றி பேசுவோமா?

மதரீதியான எந்த விளக்கமும் நான் உங்களுக்கு சொல்லப் போவதில்லை. வலது உள்ளங்கையில் சரஸ்வதி இருக்கிறாள் என்றெல்லாம் விளக்கப் போவதில்லை, ‘முருகா’ என்று படுக்கையில் அலறிவிட்டு அமர்ந்தபடியே படுக்கையை விட்டு எழுந்திரு என்கிற உபந்நியாசம் இல்லை. இவையெல்லாம் தனிப்பட்ட விஷயம். உங்கள் இஷ்டம். இவையாவுமே நன்றாக விழிப்பு கொடுத்தவுடன் வரும் முற்றிலும் மனம் தெளிவடைந்த பிறகு வரும் செயல்கள்.

நான் சொல்லப் போவது வேறு. உறக்கத்திற்கும் விழித்தபின் ஏற்படும் முழுத் தெளிவுக்கும் பின் உருவாகும் ஒரு நிலை. உறக்கம் கலைந்து மறுபடி உறக்கம் வருமே, மறுபடி உறங்கத் தோன்றுமே அந்தநேரம் அந்த நேரத்தில் இரண்டு செயல்கள் செய்யும் சாத்தியம் உண்டு. ஒன்று அந்த தூக்கத்தைப்பற்றி, ஆராய்ந்து, இரண்டு விழித்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பது.

தூக்கத்தை ஆராய்வது என்றால் என்ன?

தூக்கத்தை ஏன் ஆராய வேண்டும். உறக்கம் அற்புதமான விஷயம். அது உடலின் சோர்வு மட்டுமல்ல, உள்மனதின் விழிப்பு. உள் மனத்தின் ஒரு வித விழிப்பு நிலைதான் கனவுகளாக வருகின்றன. அந்த கனவு அநேகமாக விழித்த பிறகு மறந்து போகும், அல்லது வேறு ஒரு கற்பனையாக போய்விடும். அந்த விழிப்பும், உறக்கமற்ற ஒரு மெளன நிலையில் கனவு ஏதும் கண்டிருந்தால் யோசித்து பார்ப்பது நல்லது. அங்கே கண்ட கனவை நினைவு கூரல் எளிது. அங்கே நினைவுபடுத்திக் கொள்ள பல நேரம் அந்த கனவுக்கு அர்த்தம் புரிந்துவிடும். நமது மனவிகாரம் ஆசை, குறிப்பாய் பறக்கிற கனவு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு முன்னேறும் ஆசை அதிகமிருக்கின்றது என்று பொருள். தற்போது செய்ய அரியதாய் இருப்பதை செய்ய வேண்டும் என்கிற நோக்கம் இருக்கிறது என்று பொருள்.

உடனே ‘இப்படி கனவு வருகிறதே என்ன பலன்’ என்று ஆராய வேண்டாம். வேறு யாரையும் கேட்க வேண்டாம். அந்த பாதி விழிப்பு நிலையிலேயே நம் மனசு என்ன சொல்கின்றது என்று நமக்கு நிச்சயம் தெரியும். உங்கள் உள்மனதை உங்களை விட தெரிந்தவர் வேறு யாரும் இருக்கமுடியாது. அப்போது கனவைப் பற்றி தெரியவிட்டாலும் கனவை ஞாபகப்படுத்திக் கொள்ள அதுதான் மிகச்சரியான நேரம். விழித்த பிறகு என்னவோ கனவு வந்ததே, என்ன அது என்று தேடல் இருக்கும். சில சமயம் சுத்தமாய் துடைத்து விட்டதைப் போல் மறந்து போகும்.

சரி ஏன் கனவை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும், உங்களை அறிய உங்கள் கனவுகள் உதவி செய்யும், உங்களை அறிவதைவிட மிகப்பெரிய வேலை இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை. நாகரீகம் கருதியோ, நற்பயன் கருதியோ வெளியுலகில் நீங்கள் போட்டுக் கொண்டு இருக்கும் வேஷம் தேவையில்லாதது. உண்மையான உங்களை உங்கள் கனவுகள் அடையாளாம் காட்டும். தன்னை தெரிந்தவனுக்குப் பிறரை அறிதல் எளிது. பிறரை அறிய தன்னை அறிவதே முதல்படி. தன்னையும் பிறரையும் அறியவேண்டிய அவசியம் உலகில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு நிச்சயம் உண்டு.

எனவேதான் நன்கு விழித்த நிலைக்கு முன்பு புரண்டு மறுபடியும் தூங்கும் நேரத்தை உன்னிப்பாய்க் கவனிக்கச் சொல்கிறேன். அந்த பாதி விழிப்பு நேரம் மிக முக்கியம் என்கிறேன். இதைப் படித்த இரவே தூங்கும் முன்பு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பாதி விழித்த நிலையில் மனதை கவனிக்க வேண்டும் என்று ஆவல் கொள்ளுங்கள். அவ்வப்போது மறந்துபோனாலும், இடைவிடாது முயற்சி செய்யுங்கள். பிறகு, தினசரி விழிப்பு நிலையில் மனதைக் கவனிப்பது பழக்கமாகிவிடும்.

சரி. கனவே வரவில்லை எதைக் கவனிப்பது ஆழ்ந்த உறக்கம், சலனமில்லாத தூக்கம் இதில் கவனிக்க என்ன இருக்கிறது ஏதுமில்லை. அப்போது விழித்துக் கொள்வதைப் பற்றி யோசிப்போம். விழித்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்போம். விழித்து என்ன செய்ய வேண்டும். இன்றைய வேலைகள் என்னென்ன எதுஎது நிச்சயம் செய்தாக வேண்டும் என்று யோசிப்போம்.

நான் சொல்வதை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். கண்மூடி உடம்பு அயர்ந்து தூங்கும், தூக்கத்தின் தொடர்ச்சி உடம்பை விட்டு சற்றும் நீங்காது இருக்கும். ஆனால் மனசு மட்டும் விழித்துக் கொள்ளும். புற சத்தங்கள் அதிகமாகத் தாக்காது காதில் விழுந்தாலும் அந்த சத்தத்தை மனசு ஏற்காது. தூங்கும் நிலையே ஒருவகை தியான நிலை. அல்லது இப்படி சொல்லலாம். தியானம் செய்யும் போது இப்படி ஒரு முக்கால் தூக்க நிலை ஏற்படும். புற சத்தங்களால் பாதிக்கப்படாத ஒரு மெளனம் இருக்கும். அந்த மெளன நேரத்தில் நமது எண்ணங்களில் சார்புத் தன்மை இருக்காது. வேறுவிதமாக சொல்வது என்றால் விருப்பு-வெறுப்பு இருக்காது. தியானம் பழகாமல் இந்த பாதி விழிப்பு நிலையில் மனசை யோசிக்க பயன்படுத்தினால் போதும். நம்முடைய விஷயங்கள் பற்றி, நமது கோபதாபங்கள் பற்றி நமது ஆசைகள் அபிலாஷை பற்றி நம்மால் மிகத் தெளிவாக யோசிக்க முடியும். அதிலுள்ள நியாய அநியாய நிலையைப் பற்றி அல்லது அதை முடிக்கும் காலம் பற்றி, செயல்பட வேண்டிய வேகம் பற்றி கட்டுப்படுகின்ற உறுதி பற்றி தெள்ளத் தெளிவாக நமக்குத் தெரியும்.

இன்னொரு விஷயம் கவனமாக இருக்க வேண்டும். இப்படி சார்பு இல்லாமல் யோசிக்கும் போதே சில சமயம் மனசு முழு விழிப்பு கொள்ளும். உடம்போ உறக்கத்திலிருந்து மீளாது இருக்கும். சோம்பல் உடம்பை அழுத்திக் கொண்டு இருக்கும். அந்த நேரம் மனசு கற்பனைக்குப் போக வாய்ப்பு உண்டு. அதாவது மனசு முழுவதும் விழித்துக் கொண்டு கதை பண்ண ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.

இங்கே துணிச்சலாய், “அடச்சீ போ” என்று மனசை அறுத்து விட வேண்டும். இங்கே மனசை அறுக்க சுலபமான வழி எழுந்து படுக்கையில் உட்கார்ந்து விடுவதுதான் முழு விழிப்பையும் அனுபவிக்கத் துவங்குவதுதான். அடுத்த முறை முதல் விழிப்பு வந்த போது கண்ட கனவு பற்றியோ அல்லது மேற்கொள்ளப் போகும் நினைவு பற்றியோ மனதை யோசிக்க வைக்க முயலுங்கள்.

இந்த கட்டுரை புரியலையே என்று படித்து விட்டு சொல்ல வேண்டாம். நான் சொன்னதை பழகிப் பார்த்து விட்டுப் பேசுங்கள். அப்போது நான் சொன்னதையும் தாண்டி பலதும் புரியும். “நானா எங்க எழுந்துக்கறேன், அப்படி எழுந்தாத்தானே பாதி முழிப்பு எங்க வீட்டுல சுளீர்ன்னு தண்ணி ஊத்தி அடிச்சித்தான் எழுப்புவாங்க, நான் அலறிதான் எழுந்திருப்பேன்” என்பவர்களுக்கும் இக்கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லை.

“தினம் ராத்திரி தண்ணி போட்டோமா, காலையில புரண்டு படுத்தா தலை நோவறாதுதான் தெரியுது. கனவும் தெரியலை காட்சியும் தெரியலை” என்று சொல்பவர்களுக்கும் எந்தக் கட்டுரையும் அவசியமில்லை.
படுக்கையில் இருந்து எழுந்து பிறகு என்ன செய்ய வேண்டும்? என்று சொல்கிறேன்.


.........................................“அநேகமாய் ஒரு நாளின் மனோநிலையை அந்த நேரமே தீர்மானிக்கும். படுகையைவிட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோநிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது”................தொடரும்.

வெற்றி வேண்டுமெனில் - உடலின் ஆட்சி

காமம் தான் ஆரம்பத்திலிருந்து இன்றளவும் இவ்வுலகத்தை ஆட்சி செய்யும் சக்தியாக இருக்கிறது. ‘கூடல்’ என்பது மனிதருக்கான விதிமுறையாக மட்டுமில்லை, உலகின் எல்லா உயிர்களின் இயல்பாக இருக்கிறது. நாய், பூனை, ஆடு, மாடு, சிங்கம், புலி, யானை, குதிரை போன்றவைகளோடு தாவரங்களும் புழு, பூச்சி முதலான உயிரினங்களும் கலவையில் களிக்கின்றன. இன்னும் ஆராய்ந்து பார்த்தால் நீரும், நிலமும் புணர்ந்து தாவரங்கள். தாவரம், வெயிலோடு கூடி பச்சையம். வெளியில் காற்று நுழைந்து மழை, குளிர், வெப்பப்பரவல் என்று இடையறாது இடையறாது எதுவோ எதனோடோ கூடல் நடத்திக் கொண்டிருக்கிறது.

இதைக் கண்டு உணர்ந்து சனாதன தர்மம் என்கிற இந்துமதம் ‘ஆவுடையார் லிங்கம்’ என்று ஒரு சிலா ரூபம் உருவகப்படுத்தி கூடலே இவ்வுலகம் என்று மென்மையாய் உணர்த்துகிறது. ‘லிங்கம்’ என்கிற சொல்லுக்கு அடையாளம் என்று அர்த்தம். இவ்வுலகின் அடையாளம் கூடல். கூடலின் ஆதாரம் காமம். காமமே இவ்வுலகை ஆளுகிறது.

ஆளுவது எதுவோ அதைப் புரிந்து கொள்ள மறுத்தால் ஆளுபவர்க்கும், ஆளுமைக்கு ஆட்படுபவர்க்கும் மிகப் பெரிய மோதல், முரண்பாடு ஏற்பட்டுவிடும். வாழ்க்கை நிம்மதியற்றுப் போகும். இதுவே இவ்வுலகின் பல பாகங்களில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

எதை மிகப் பிரியமாய் வணங்கி, வரவேற்க வேண்டுமோ அதைக் கண்டு நடுங்கி ‘வெட்டி வீழ்த்துவேன்’ என்று விரட்டினால், வெறுத்தால் கலவரமே மிஞ்சும். நீங்கள் எதை வெறுக்கிறீர்களோ அதுவே உங்களைப் பல்வேறு ரூபத்தில் வந்து தாக்கி அடிமைப்படுத்தும்.

ஏன் இவ்வுலகம் காமத்தைப் புரிந்து கொள்ளவில்லை?

அடுத்து வாழும் மனிதரைப் புரிந்துகொள்ளாதவர், காமத்தையும் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் காமம் என்பதை உணர்ந்து அனுபவிக்க அடுத்தவர் தேவை. வேறு ஒரு உயிருள்ள உடல் தேவை. வாழ்ந்து மலர்ந்த மனிதர் தேவை.

தசையைத் தசை உரசுவது மட்டுமே காமத்தைத் தீர்த்துவிடாது. நிர்வாணப்படுத்துவது மட்டுமே ஜெயித்தாகிவிடாது. மதித்தால்தான் காமம் கண்டு மகிழ முதல்படி. பிறரை மதிக்க மனதில் பணிவு வேண்டும். பணிவு தன் மீது நம்பிக்கை உள்ளவருக்கு எளிதில் வரும்.

தன் மீது நம்பிக்கை இல்லாதவரே காமத்தை வெறுத்து இழிவுபடுத்தி வெளியே பேசியும், மனதுக்குள்ளே காமத்தைப் பெரிய ஆலமரமாய் வளர்த்தும் வாழ்வார்கள். இது இரட்டை வாழ்க்கை.

தாயும், தந்தையும் கூடுவதை பல இரவுகள் கண் விழித்துப் பார்த்த ஒரு சிறுவன் இதில் சிக்கித் தவியாய் தவித்தான். அடக்க முடியாது தாயை தவறாகத் தொட, தந்தையிடம் நாயாய் அடிப்பட்டான். படிப்பை புறக்கணித்து பம்பாய் போனான். ஒரு வீட்டில் தட்டு கழுவி, வயிறு வளர்க்க, அவ்வீடு ஒரு மதபோதகரிடம் அடிக்கடி போக அவனும் போதகருக்கு நெருக்கமாகி, ஓரினச்சேர்க்கைக்கு உதவி, அவ்வுதவியால் உயர் இடம் பெற்று போதகரைப் போலவே காமம் புறக்கணித்து அதை இழிவாகப் பேசி எப்படி கட்டுப்படுத்துவதென்று ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் அறிவுரை கொடுத்து மற்றவரை வியக்க வைத்து, அவனும் போதகராகி செல்வம் சேர்த்து ஆண்களை, பெண்களை விலைக்கு வாங்கி இடையறாது ஈடுபட்டு நோய்ப்பட்டு தெற்கே திரும்பி வைத்தீஸ்வரன் கோயிலே கதியென்று கிடந்தான்.

‘எனக்கு சொல்லித் தரவேயில்லை. அடித்து நொறுக்கினார்களே தவிர, ஆவேசமாகப் பேசி, இழிவுபடுத்தி மனம் குன்ற வைத்தார்களே தவிர, இது தவறு என்று விளக்கிப் பேசியிருப்பின் புரிந்துகொண்டிருப்பேன். நாற்பத்தேழு வயதில் தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும், ஓஷோவும் படித்து தான் காமம் கவனமாகக் கையாள வேண்டிய விஷயம் என்று புரிந்துகொண்டேன். பதினாறு வயதில் தவறு செய்து கடுமையாகக் கண்டிக்கப்பட்டு முப்பது வருடங்கள் குப்பையாய் வாழ்ந்து விட்டேன். காசு கொடுத்து காமம் வாங்கிவிட்டால் காமம் இனிக்காது. கசக்கும். குமட்டும். நேசிக்காத பெண்களோடு வாழ்தல் அபத்தம். கேவலம். எனக்கும் எவர் மீதும் நேசிப்பு இல்லையே. அதனால் கனவில் நேசிப்பு உள்ளவர்களை உருவகப்படுத்தி அவர்களை மனசுக்குள்ளே கூடிக் குலவி வாழ்ந்தேன். கற்பனைகள் வளர வளர காமவேட்டை மிக சுகம் என்று நினைத்தேன். நிர்வாணமாய் பார்த்த பெண்களை மனசுக்குள் இடையாறது கூடினேன். மனம், உடம்பு இரண்டும் நோய்ப்பட்டன.

வேறு எதுவும் முழுமையாய் யோசிக்க முடியாமல் காமவிகார எண்ணங்கள் முட்டி மோதின. நான் பொருளாதார ரீதியாகவும் தோல்வியுற்றேன். என் விழிப்புணர்வு செத்துப் போயிற்று.

இன்னமும் உடல் நோயுற்றப் பிறகும் காமம் அகலவில்லை. மனசுக்குள் நூறு நூறு கற்பனைகள். எனக்கு நானே பேசிக்கொள்கிற அளவுக்கு பகல் கனவுகள். ஒரு நாள் நிச்சயம் எனக்குப் பைத்தியம் பிடிக்கும்’ என்று அழுதான்.

சிறுவயதில் கற்பனைகளில் மிதந்து இடையறாது உடம்பை உஷ்ணப்படுத்தியதில் பிரச்சனைகள் வந்துவிட்டன. எதிரே யுவதிகள் நின்றபோது உபயோகப்படுத்த முடியவில்லை. எனவே, மீண்டும் கற்பனைகள். கனவுகள் என்று குழப்பம் வந்துவிட்டது.

இது நேராதிருக்க என்ன வழி ?

காமம் என்பது என்ன என்பதை இளம் வயதிலேயே பேசி புரிய வைக்க வேண்டும். இந்த உறுப்புகள்-வம்சவிருத்தியின் பொருட்டு, இந்த உணர்வுகள்-நல்ல குழந்தைகள் பெறுவதன் பொருட்டு என்று கூற வேண்டும்.

காசு, பணம், அதிகாரம், அந்தஸ்து போதுமா? திருமணம் நடந்து, குழந்தைகள் பெறுதல் மிக முக்கியம். வாழ்வு அப்போதுதான் முழுவட்டம், வடிவம் பெறுகிறது. குழந்தை இல்லாதவர் படும் துயரம் என்ன தெரியுமா என்று உதாரணம் காட்டிப் பேசவேண்டும்.

காமம் அனுபவிக்க அமைதி தேவை.

அமைதி என்பது என்ன? பயமற்று இருத்தல். எப்போது காமம் குறித்த பயம் போகும். முறைப்படி உறவுகொண்டால், நிம்மதியாய் எவர் இடையூறுமின்றி அனுபவிக்கலாம். அனுபவிக்க இச்சமூகம் எல்லா வசதியும் செய்து தரும். மற்றவைகளைக் கண்டிக்கும். கள்ளத்தனத்தை இழிவுபடுத்தும்.

‘கணவனின் துணையோடுதான் காமனை வென்றாக வேண்டும்’. என்பது கருத்துள்ள பாடல். உயர்ந்த அனுபவ வாக்கியம். இதே விதமாய் மனைவியிடம்தான் ருசியான உடலுறவு சாத்தியம்.

ஏன்?

மனைவி ஒரு பொறுப்பு. அவளைப் பேணுதல் ஒரு கடமை. அவள் உனது குழந்தைகளின் தாய். உனக்கு ஸ்நேகிதி. நோய்ப்பட்டபோது தாதி. சுகத்துக்கு மட்டுமான பெண்ணில்லை. வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் பங்குகொள்ளும் உறவு. தாய்-தகப்பனை விட்டு புருஷன் வீட்டிற்கு வந்த மனைவியைக் கொஞ்சி, சீராட்டி, ‘நானிருக்கிறேன். எந்த பயமின்றி எதுவும் கேள். மனம்விட்டுப் பேசு’ என்று ஆதரவு செய்ய, அவள் வாரி வழங்குவாள். தந்ததற்கு ஒரு பங்கும் இன்னும் தொடர்ந்து தரவேண்டும் என்ற நினைப்பில் இன்னும் கூடுதலாகவும் கிடைக்கும்.

இந்தக் கூடலின் நோக்கம் கூடல் மட்டுமல்ல. குழந்தைப்பேறும் உள்ளடங்கியது. ஒரு வருடம் ஆட்டம் ஆடலாம். மறுவருடம் குழந்தைப் பேறில்லையெனில் கவலை வந்துவிடும். ‘கடவுளே, கடவுளே’ என்று காமத்தில் ஈடுபடவேண்டியிருக்கும்.

இருபத்தியேழு வருடமாகக் குழந்தைப் பேறில்லாத தம்பதியர்கள் அவர்கள். கணவன் சினிமா பார்த்துவிட்டு கூடலுக்கு அழைத்தபோது, ‘வெறுமே எதுக்கு இது? என்ன பிரயோஜனம்?’என்று மனைவி அலுத்துக் கொண்டாராம். ‘அன்று காமம் அறுந்துவிட்டது. இறைவழிபாடு பக்கம் இருவரும் திரும்பிவிட்டோம்’ என்று நொந்தபடி பேசினார்கள்.

அவர்களிடம் செல்வம் உண்டு. அதிகாரம், அந்தஸ்து உண்டு. அனுபவிக்கத் தடையேதுமில்லை. ஆயினும், காமம் அறுந்தது. ஒரு கணம் அங்கே நம்மை நிறுத்திப் பார்க்க, காமத்தின் அர்த்தம், அபத்தம் புரியும்.

காமம் நன்கு அனுபவிக்க, வீடு வாகன சவுகரியங்கள் நிச்சயம் உதவும். இவைகள் பெற, உயர்ந்த படிப்பு, கடும் உழைப்பு அவசியம். படிக்க வேண்டிய காலகட்டத்தில் படித்து ஜெயித்து வேலையில் அல்லது வியாபாரத்தில் முழுமனதாய் ஈடுபட்டு இளமையிலேயே பலமான பொருளாதார அஸ்திவாரம் போட்டுவிட்டால் சுகம் என்கிற வீடு உயர உயர எழுப்பமுடியும்.

காமச்சேறே கதியென உழன்றால், குடிசை கூட கட்ட முடியாது. பாதுகாப்பு தரமுடியாது. ஆணை பெண் நேசிக்கமாட்டாள். நேசிக்காத பெண்ணிடமிருந்து காமம் வராது. வந்தாலும் ருசிக்காது.

போன தலைமுறையைவிட இந்தத் தலைமுறைக்குக் காமப்பிரச்சனைகள் அதிகம். மிக அதிகம். பெண்களிடம் மணி கேட்கவோ, ஒரு குவளை நீர் கேட்கவோகூட அப்போது பயம். கேட்பதை தவறாக நினைத்துக் கொள்பவர்கள் உண்டு. பெண்ணின் அண்மை இல்லாததால் தொந்தரவின்றி தன் காரியத்தில் ஆண் ஈடுபட முடிந்தது. இப்போது சினிமாவும், பத்திரிகைகளும், ஊடகமும், செல்போனும் பெண்களின் மேனியெழிலை பல கோணங்களில் நெருக்கமாய் காட்ட, இளைஞர்களின் மனம் குழம்புகிறது.

கள்ளத்தனமாய் கெட்ட விஷயங்களைப் பார்க்கும் வசதி அதிகரிக்க இருபாலரும் கள்ளத்தனமாகவே பேசிப் பெரிதாக்கிக் கொள்கிறார்கள். எது மூளையில் பதியவேண்டுமோ, அதைப் பதிய ஒட்டாது இவ்விஷயங்கள் மறைத்துவிடுகின்றன. எனவே தோல்வி, கண்ணெதிரே பேயாட்டம் ஆடுகிறது. தோல்வியிலிருந்து தப்பி உற்சாகம் பெற, இவ்விஷயங்களைக் கற்பனை செய்யும் முட்டாள்த்தனம் மிகுந்துவிடுகிறது. பிறகு, மீட்சியில்லாத மனநோய்தான் மிஞ்சுகிறது.

உடல் உறுதி முக்கியம் என்பது இளம் வயதிலேயே சொல்லித் தரப்பட வேண்டும். விளையாட்டு வீரராய்த் திகழும் ஆசையை விதைக்க வேண்டும். அப்போது தேவையற்ற பேச்சுகள், தொடர்புகள் குறைந்து, மனம் ஒருநிலைப்பட்டு உள்ளே நம்பிக்கை வெற்றியினால் அதிகரிக்கும். ஆரோக்கியமாய், கட்டழகாய் இருக்கிறோம் என்பதே நல்ல நம்பிக்கை. விளையாட்டு, வெற்றி முக்கியமில்லை.

இந்த ஆரோக்கியம் படிப்பில், தொழிலில் முழுவதுமாய் ஈடுபட வைக்க முன்னேறுவது என்பது எளிது. அதுமட்டுமின்றி, இந்த ஆரோக்கியம் பாதுகாப்பு, வைராக்கியம் வளர்க்கும். இந்த உணவு வேண்டாம், இந்தவித கெட்ட படங்கள் வேண்டாம் என்று வரையறைகள் ஏற்படும். வைராக்கியம் இல்லையெனில் வாழ்வே இல்லை. வைராக்கியம்தான் கடும் உழைப்பு தரும்.

‘ராத்திரி ஆச்சுன்னா தண்ணி போட்டே ஆவணும்’ என்று இருபது வயதில் தோன்றுமாயின், நாற்பது வயது தாண்டுவது அரிது. தாண்டினாலும் நிமிர்ந்த நடை இருக்காது. வெறுமே நோயுற்ற பூனையாய் இடையறாத சலிப்பில் வாழ்வு நகரும். நொந்துகொள்ளல் அதிகமாகும்.

‘தோன்றின் புகழொடு தோன்றுக. அஃதிலார் தோன்றலில் தோன்றாமை நன்று’ என்பதற்கு அர்த்தம் எல்லோரும் பிரதமராக, தலைவராக வரவேண்டும் என்பதல்ல. பிறர் பாராட்டும்படி நடந்துகொள்பவரே சிறந்தவர்.

“நல்லா வச்சிருக்கீங்களே உடம்பை. வெரிகுட்” “பெரிய படிப்பு படிச்சிருக்கீங்களே” “கல்யாணத்துக்கு முன்னாடியே சொந்த வீடு கட்டிட்டீங்களா. வாழ்க, வாழ்க...”, “ஆங்கிலப் பத்திரிகைகளில் நீங்க எழுதின கட்டுரை படிச்சேன். நல்ல சிந்தனை” இம்மாதிரி ஆயிரம் ஆயிரம் பாராட்டுகள், புகழோடு தோன்றியதை உறுதிப்படுத்துகின்றன. நாலு பேர் பாராட்டாது வாழ்வது வாழ்வே அல்ல.

‘சினிமா ஆசையில் புருஷனை விட்டு ஓடிவந்து எவனோ அயோக்கியனை நம்பி சீரழிந்து அவனும் ஏமாற்ற, கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போயிட்டாப்பா’ என்று தலையில் அடித்துக்கொண்டு அழுவதற்கு அடியில் கட்டறுந்த காமம் இருக்கிறது.

இனி மீட்சி எப்போது?

காமத்தை நன்கு அனுபவிக்க வேண்டுமென்றால், உண்மையான பிரியம் மட்டுமே உதவி செய்யும். பரஸ்பர அக்கறை பலப்படுத்தும். விலகி இருந்தால்தான் எதிர்ப்பட்டதை நன்கு பார்க்க முடியும். காமத்தை தலையிலேயே தூக்கி சுமந்து திரிந்தால் எதுவும் தெரியாது. சுமையால் சலிப்பு ஏற்படுவதே மிஞ்சும்.

இளைஞர்களும், யுவதிகளும் காமம் குறித்து கேள்வி கேட்க, முதியோர் தட்டாது பதில் சொல்லி நல்வழிப்படுத்தல் அவசியம். ஒதுக்கி மறைத்து வைத்தால் ஆர்வம் அதிகமாகும், பிரச்சனைகள் பெரிதாகும்.

காமம்தான் இவ்வுலகை ஆட்சி செய்கிறது. எது ஆளுகிறதோ அதை அறிவதே நல்லது. அறிவுதான் மரியாதை தரும்.

வாழ்வில் வெற்றிபெற வேண்டுமெனில், காமம் பற்றிய தெளிவோடு இருங்கள்.

என்னை சுற்றி சில நடனங்கள் - சுயமாக சிந்தித்து செயல்படுதலே சுதந்திரம்

பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா என்று கேட்கிறபொழுதே யாராவது கொடுத்து விட்டார்களா என்பது போலத் தான் தொனிக்கிறது. கொடுத்துப் பெறுவதல்ல சுதந்திரம். அடித்துப் பிடுங்கப்படுவது. பெண்கள் சுதந்திரம் அடைந்து விட்டார்களா என்று கேட்பீர்களாயின் அதை நோக்கி அவர்கள் முன்னேறிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு ‘போர்’ முனையில் வெகு வேகமாக தங்களுடைய சுதந்திரம் குறித்து யுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.




இன்றைய பெண்கள் சுதந்திரம் அடைந்து விட்டார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


சுதந்திரம் என்பது என்ன.



ஆண்-பெண் உறவு முறைகளில் யார் உயர்ந்தவர்கள். யார் தாழ்ந்தவர்கள் என்று பார்ப்பதா அல்லது ஆண் சமையலுக்குப் போகட்டும். நான் அலுவலகத்திற்கு போகிறேன். நீ பாவாடை அணிந்து கொள் என்று அட்டகாசம் செய்வதா.


இல்லை. தனக்கு வேண்டும் என்பதை தானே தேர்ந்தெடுத்துக் கொள்கின்ற ஒரு மனப்பக்குவம் வருவதுதான் சுதந்திரம் என்று எனக்குத் தோன்றுகிறது. இது அறிவின் பாற்பட்ட சுதந்திரம்.


‘இந்த ப்ளவுஸ், இந்தப் புடவைக்கு மேச்சா இருக்காடி’ என்று நான்கு தோழிகளோடு இரண்டு ப்ளவுஸுக்கு கடை கடையாய் ஏறுவது சுதந்திரம் என்று எனக்குத் தோன்றவில்லை. எதிலேயோ அடிமைப்பட்டுக் கிடக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.


‘அந்தப் பையன் என்னைப் பார்த்து லவ் யூன்னு சொல்றான். நான் என்ன செய்யட்டும்’ என்று தன்னுடைய தோழிகளோடு ஒருத்தி புலம்புவாளாயின் அவள் சுதந்திரம் பெற்றவளாக நான் நினைக்க மாட்டேன்.
‘நான் வேலைக்குப் போகட்டுமா, வேலைக்குப் போனா ரெண்டாயிரம் ரூபா காசு கிடைக்கும். காசு கிடைச்சா நம்ம வீட்ல அரிசி பருப்புக்கு உதவும்’ என்று அனுமதி கேட்டு கை பிசைந்து நின்றால், அவளுக்கும் ஏதோ அடிமை சிரமம் இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.


சுதந்திரம் என்பது தன்னுடைய விஷயங்களை தானே மிக சுயமாகச் சிந்தித்து செயலாற்றுவதுதான் என்று நான் நினைக்கிறேன். இந்தச் சுதந்திரம் திருமணமான பெண்களுக்கும், இனி திருமணமாகப் போகிற பெண்களுக்கும் கொடுக்கப்படவில்லை என்பதே என் அபிப்ராயம்.
பெண்களுக்கு சில விஷயங்களில் தீர்மானம் செய்யும் அறிவு போதாது என்று ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிற அகம்பாவம் காரணம் அல்லது அவர்கள் சொல்வது சரிதான் என்று இவர்கள் கிடக்கின்ற அடக்கமும் காரணம்.


‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்ற துணிச்சல் பெண்களுக்கு வர வேண்டும். அது பட்டுப்புடவையாக இருந்தாலும் சரி, கெட்டிக்கார புருஷனாக இருந்தாலும் சரி. ‘அவன் இல்லையெனில் நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்’ என்ற பிடிவாதம் பிடிப்பது ஆரோக்கியம் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏதோ ஒரு நோய்த்தன்மை இருக்கிறது.
வாழ்க்கையை மிக லகுவாக எடுத்துக் கொள்வதும், அடுத்த கட்டத்திற்கு விரைவாக போவதும், விஷயங்களைத் தானே தீர்மானிப்பதும் வாழ்வின் மிக முக்கியமான அம்சங்கள். இதற்கு பொருளாதார விடுதலை நிச்சயம் உதவி செய்யும். பொருளாதார விடுதலை வேண்டுமாயின், படிப்பு என்பது மிக முக்கியமான விஷயமாக இருக்கும். படிப்பு என்கிற விஷயத்திற்கு ஒரு முரட்டுத்தனம், வைராக்கியம் தேவைப்படுகிறது. தான் பெண், தான் மெல்லியவள், தான் நாசூக்கானவள், தான் பஞ்சுபோல் மிருதுவானவள் என்ற எண்ணங்களையெல்லாம் உடைத்தெறிந்து மனதில் திண்மையும், மனத்திண்மையால் உடைகளில் மாற்றமும் ஏற்படுத்தி கம்பீரமாக தன்னை நடத்திக் கொண்டு போவதே சுதந்திரத்தின் அடிப்படையான விஷயம்.
ஆரம்ப கட்டங்களில் பெற்றோர்களின் சிறிய ஒத்துழைப்பு இருந்தால் போதும். கூடப் பிறந்தவர்களின் அனுசரணை இருந்தால் போதும். அப்படி வளர்ந்த பிறகும் அது கிடைக்கவில்லையெனில் அந்த இடத்தை விட்டு விலகி தனியாக வாழத் தெரிந்து கொள்ள வேண்டும்.


தனிமையை உணர்ந்த எல்லோருமே விடுதலை பெற்றவர் என்பது யோக மார்க்கம் சொல்கின்ற வழி. தனிமையில் இருக்க பயந்து கொண்டுதான் பல பெண்கள் பிறரை சார்ந்தும், சார்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.


வன்முறையை தன்மீது ஏவி விட்டால், எந்த நிலையிலும் எப்படியும் சந்திக்கத் தயார் என்ற திமிரும், வீராப்பும் ஒரு பெண்ணுக்கு நிச்சயம் வரவேண்டும். ‘ரெளத்திரம் பழகு’ என்று பாரதி இதைத்தான் சொன்னான்.


மெத்தப்படிப்பு, மெல்லிய ரெளத்திரம், பொருளாதார மேன்மை, தன்னைத் தானே எடைப்போட்டு தான் யார் என்று தெளிகின்ற மேன்மை, அதனால் வரும் உன்னதம் அடைந்த பெண்ணுக்கு சுதந்திரம் காலுக்குக் கீழே இருக்கிறது என்பதை எவரும் புரிந்து கொள்ளலாம். இந்தவித விடுதலை நோக்கி பெண்கள் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருப்பது உண்மை. ஆனால் வெகுதூரம் போகவேண்டும்.

Sunday, November 8, 2009

சூரியனோடு சில நாட்கள் - பாலகுமாரன் பேசுகிறார்

அது ஒரு ப்ரிவியூ தியேட்டர்...

திரைப்படம், வழக்கமான தியேட்டர்களில் திரையிடப்படும் முன் இங்கே டெக்னீஷியன்களுக்காகவும், நடிக நடிகையருக்காகவும், விநியோகஸ்தர்களுக்காகவும் திரையிட்டுக் காட்டப்படும். அந்தப் ப்ரிவியூ தியேட்டரில் ‘ஜென்டில்மேன்’ திரையிடப்பட்டிருந்தது. உள்ளே ரஜினி படம் பார்க்கிறார் என்பது எனக்குத் தெரியாது. படம் பார்த்துவிட்டு, சக டெக்னீஷியன்கள் படம் எப்படி என்று அபிப்பிராயம் சொல்வார்கள். கேட்போம் என்று போனேன். படம் முடிந்துவிட்டது என்று தெரிந்தது.

அந்தத் தியேட்டரில் நாலு பேர் போகக்கூடிய லிஃப்ட் இருந்தது. ஏறி கதவு சார்த்தி இரண்டாவது மாடி குமிழ் அழுத்த, பெட்டி உயரே நகர்ந்தது, லிஃப்ட் இரண்டாவது மாடி தொட்டது. மாடியில் சிரிப்புச் சத்தம் கேட்டது.

கதவு திறக்க, ரஜினிகாந்த். நான் வெளியே வர முயல, ரஜினி என்னை மறுபடி லிஃப்டுக்குள் தள்ளினார். “பாலகுமார் சார்... க்ளாஸ்... ஏக்ளாஸ் படம், ரொம்ப நல்லா வந்துருக்கு” கைகுலுக்கினார். அவரும் இன்னொரு நண்பரும் உள்ளே வர, லிஃப்ட் கதவு சார்த்தி தரை நோக்கி போகும் குமிழை அந்த நண்பர் அழுத்த, லிஃப்ட் கீழிறங்கத் தொடங்கியது. ஐந்தடிக்கு ஐந்தடிபெட்டியில், அவர் மூச்சு என்மீது படும் அளவு நெருக்கமாய் நின்று படம் பற்றி சில வாக்கியங்கள் சொன்னார். என் காதில் ஏறவில்லை. எல்லாம் பாராட்டுக்கள் என்று தெரிந்தது. ஆனால், மனசுள் வாங்கவில்லை.

ரஜினிகாந்த் அருகே இருக்கும் திகைப்பு மட்டுமல்ல காரணம். ஒரு சிறிய வெட்கமும் உள்ளே சேர்ந்தது. அவர் கூறும் பாராட்டுக்களை ஏற்க மறுத்தது. சினிமா ஒரு டீம் ஓர்க். ஒரு படத்தின் வெற்றிக்கு இன்னார்தான் காரணம் என்று கூற இயலாது. ஒரு நூறு பேர் மிக கவனமாய் ஒருங்கிணைந்து, புரிந்து கொண்டு பரஸ்பரம் விட்டுக்கொடுத்து செயலாற்ற வேண்டிய இடம். நாவல் ஒரு தனிமனிதனின் சக்தி. ஒரு நாவல் சிறப்புடையதானால் எழுத்தாளரே கொண்டாடப்பட வேண்டியவர். நாவல் வந்த பத்திரிகையோ, அச்சிட்டவரோ, கம்பாஸிடரோ அங்கு பேசப்படுவதில்லை.
ஆனால் சினிமா நூறு துடுப்புகள் போடப்பட்ட நீண்ட ஓடம். எந்தத் துடுப்பால் படகு வேகமாயிற்று என்று சொல்வது கடினம். நடுவே நாலு துடுப்பு சரியாகப் போடவில்லையெனில், வேகம் குறைந்து ஆட்டம் அதிகமாகும். மற்ற துடுப்புகளுக்குச் சிரமம் வரும் என்பதும் நிச்சயம். போடப்பட்ட நூறு துடுப்பில் ஏழாவது துடுப்பைப் பார்த்து, ரொம்ப சந்தோஷம்... ஜெயிச்சுட்டீங்க என்றால் என்ன பதில் சொல்வான் அந்தத் துடுப்புகாரன்.

பாராட்டை ஏற்றும், ஏற்காமலும் கைகூப்பி நிற்க வேண்டியதுதான்.

பாராட்டிய ரஜினிகாந்துக்கும் இது தெரியும். அவரும் பல நீண்ட ஓடங்களை ஓட்டிய துடுப்புக்காரர்தான். ஜெயித்து கரையேறிய போது, எதிர்ப்பட்ட துடுப்பாளை ரஜினிகாந்த் கைகுலுக்கிப் பாராட்டுகிறார் என்பது சிறிது நேரம் கழிந்து புரிந்தது.

லிப்ட் தரை தொட்டது.

“எல்லாப் பெருமையும் டைரக்டருக்கே” என்று சொன்னேன்.

“உண்மை...” ரஜினி பதில் சொன்னார். “அதோடு கூட இது ஒரு நல்ல டீம். படத்தின் எல்லா கலவையும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டிருக்கிறது. என் வாழ்த்துக்கள்.” மறுபடி அவர் மூச்சுக்காற்று என்மீது பட்டது. என் காற்றும் அவரைத் தொட்டிருக்கும்.

லிஃப்ட் திறக்க, சரட்டென்று வெளியேறி கார் ஏறிப் பறந்து போனார்.

வேகமான ஒரு சுழல்பந்து தலை உரசிப் போனது போல, அந்தப் பந்தை எப்படி விளையாடுவது என்று தெரியாத பேட்ஸ்மேன் போல திகைத்துக் கிடந்தேன்.

‘டேய், பாலகுமார் தம்பி, முட்டற மாதிரி ரஜினி எதிர்க்க வந்தே...அதனால் பாராட்டு கிடைச்சுது. ரொம்ப எமோஷனலாயிடாதே... இது மரியாதை...அன்பு. பெரிய முக்கியத்துவம் உனக்கு எதுவும் இல்லை. அடடா... ரஜினியே கைகுலுக்கினார்... நாலுபேர்கிட்ட பேசாதே... சும்மா இரு.’ திகைப்பிலிருந்து வெளிவந்தேன்.

மற்ற நண்பர்கள் தியேட்டர் வாசலில் பாராட்டினார்கள். இன்னொரு காட்சி ப்ரிவியூ தியேட்டரில் ஆரம்பமாக, வீடு திரும்பினேன்.

படியேறினேன்.

“ரஜினி வீட்டுலேர்ந்து போன் வந்தது... ஜெயராம் கேட்டாரு உங்களை”... வீட்டில் கூறினார்கள்.

“அப்படியா... இப்பதானே பேசிட்டு வரேன்.” நான் எண்களைச் சுழற்றினேன். ரஜினியின் உதவியாளர் ஜெயராம் போனை எடுத்தார். “அண்ணன் பேசணும்னார் சார்” ஒரு நிமிஷம், சில விநாடிகள் நகர்ந்தன. “ஹலோ பாலகுமார் சார்... பிரமாதமா பண்ணிட்டீங்க... அங்க நிறைய பேச முடியவில்லை, வாசல்ல கும்பல் ஜாஸ்தியாயிடுச்சு. அடுத்த ஷோ நம்மால ஜாம் ஆயிடக்கூடாதுன்னு வண்டியேறிட்டேன். படத்துல பல இடங்கள் தனியா தெரிஞ்சுது. ஷங்கர் யாரு... யார்கிட்ட இருந்தாரு”. பத்து நிமிடங்கள் படத்தின் பல சிறப்புகள் பற்றிப் பேசி.. மனதாரப் பாராட்டி.. வாய் விட்டு சிரித்து.. அப்படியானால் வெறுமே எதிர்ப்பட்டதால் வெளிவந்த பாராட்டில்லையா... உண்மையாகவே என் வேலை பிடித்திருக்கிறதா... இது மனசு திறந்த பாராட்டா...சக தொழிலாளியைக் கட்டிப் பிடித்து உற்சாகமூட்டும் செயலா.

சினிமா ஒரு டீம் ஓர்க்...

இதனால் சில சங்கடங்கள் உண்டு. நாவலில் கிடைக்கிற தனித்துவம் சினிமாவில் எவருக்கும் கிடையாது. ஒரு காட்சி அமைப்பு, காமிரா, நடிக நடிகையரின் மேக்கப்; செட் ப்ராப்பர்டி, லொகேஷன் போன்றவையும் காரணமாய் இருக்கலாம். ஒரு நல்ல காட்சி வசன பலமின்மையால், வசன பலமிருந்தாலும் காமிரா கோணம் சரியின்மையால் காமிரா, வசனம் சரியாய் இருப்பினும் நடிகர் உணர்ந்து செயலாற்றாததால்; நடிப்பு, காமிரா, வசனம், சரியாய் இருப்பினும் எடிட்டரின் கவனக்குறைவால் சிதையலாம்.

சினிமா ஒரு நெட்டி வேலை...

ஒரு நெட்டி பொம்மையை, கோவில் கட்டடம் போன்ற நெட்டி பொம்மையை நூறு பேர் சேர்ந்து செய்யும் வேலை. ரஜினி தனித்தனியே எல்லோரையும் என்னிடம் பாராட்டினார். “ எனக்கு டைரக்டர் நம்பர் தெரியாது. அதனால் உங்ககிட்ட என் பாராட்டைச் சொல்றேன். ஷங்கர் கிட்டே என் பாராட்டை சொல்லுங்க”.

நண்பர் ரஜினிகாந்தின் பாராட்டு பற்றி யூனிட்டில் சொல்ல, அங்கே பலபேருடைய முகம் மலர்ந்து.. மகிழ்ந்து மறுபடி என்னைச் சொல்லச்சொல்லி கேட்டு புளகாங்கிதமடைவதை நான் உணர்ந்தேன். ரஜினிகாந்த் இங்குள்ள சினிமா கலைஞர்களுக்கு அவ்வளவு முக்கியம். அவர் பாராட்டு மிகப்பெரிய பெருமை.

சினிமாவில் ஒரு வெற்றிப் படத்தை இப்படி மனம் நிறைய பாராட்டுபவர்கள் மிகக்குறைவு. ப்ரிவியூ தியேட்டரில் நான் பல முகங்களை உற்றுக் கவனித்திருக்கிறேன். “படம் ரொம்ப நல்லா வந்துருக்கு. நிச்சயம் நூறு நாள் கவலையேபடாதீங்க”. டைரக்டரிடம் கைகுலுக்கிவிட்டு, தியேட்டர் தாண்டி தெருவுக்கு வந்ததும், எப்படி படம் என்று எதிர்ப்பட்டவர் கேட்க, “ஊத்திக்கிச்சு. ஊத்திக்கிச்சு” என்று நீட்டி முழக்கி சிரிப்பவர்களை கண்டிருக்கிறேன்.

‘கிட்டதட்ட இதே ஸ்டோரி நான் சொன்னேன். எவனும் கேட்கலை, இப்ப அதே கதையே வச்சு சக்ஸஸ் ஆக்கிட்டாம் பார்...’

“சக்ஸஸுன்றே...”

“அட, நாப்பது நாள் ஓடும்பா...பாட்டு சரியா அமைஞ்சு போச்சு. நடிகர் சரியா அமைஞ்சு போச்சு.. வசனம் கூட சரியா வுழுந்துடுச்சுப்பா”. இந்த வெற்றி, பிறர் திறமை என்பது ஏற்காமல், தெய்வச் செயல், எதேச்சை என்று பாராட்டும் பாதி மனங்களை கண்டிருக்கிறேன்.

ரஜினி முழுமையானவர்...

பிறகு ஒருநாள் அவரிடம், நீங்கள் இத்தனை மனமுவந்து பாராட்டிப் பேசுவீர்கள் என்று நினைக்கவேயில்லை என்று சொல்ல, சிரித்தார் ,நிதானமாய் பேசினார். “சினிமாவில் ஒரு படம்கூட ஃபெயிலியர் ஆகக்கூடாது. சுமாரான படத்தைக் கூட நல்லா பாராட்டணும். நல்ல படத்தை வாய்விட்டு மனசார பலமுறை பாராட்டணும். அந்தப் பாராட்டால இன்னும் நாலு நல்ல படம் சம்பந்தபட்டவங்க தரணும். சினிமா இன்டஸ்ட்ரில ஒரு படம் கூட ஃப்பெயிலியர் ஆகக்கூடாது. அது யார் படமா இருந்தாலும் சரி... என்னவிதமான படமா இருந்தாலும் சரி...”

தனக்கு ஒரு கண் போனாலும்,பிறருக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்று வேண்டும் உலகத்தில் இந்த மனிதர் வித்தியாசமானவர்.

எதனால் இப்படி.. பலபேருக்கு இல்லாத இந்தத் தெளிவு ரஜினி எப்படி வந்தது. “இது மொத்தமும் ட்ராமா, இந்த நடிகன் அந்தஸ்து, பணம், புகழ், கைதட்டல், பூமாலை, பூத்தூவல் எல்லாம் நாடகம். இந்த நாடகத்துக்கு வேற யாரோ ஒருத்தர் தான் டைரக்டர்.

இந்த உலகத்துல உங்களுக்கு ரைட்டர் வேஷம். எனக்கு நடிகன் வேஷம். அவருக்கு மேக்கப் மேன் வேஷம். கொடுத்த வேஷத்தை டைரக்டர் திருப்தி ஆகற மாதிரி செய்யணும். அந்த டைரக்டர் பேரு கடவுள், ஆண்டவர், அல்லா, ராம், சிவா, புத்தன், விஷ்ணு எதாவது வச்சுக்கலாம். எல்லாப்பணமும், புகழும் ட்ராமா, நாடகம், இது நானில்லை.”

ஒரு நாள் ரஜினி பேச, எனக்கு கேள்வி வந்தது,

ரஜினி புரிந்து பேசுகிறாரா.. இல்லை, எவரேனும் பேசியது கேட்டு பேசுகிறாரா.. சந்தேகம் வந்தது.



நான் எழுத்தாளன்... எதையும் சந்தேகத்தோடு பார்ப்பதே என் வழக்கம்.

Thursday, October 29, 2009

இராஜராஜ சோழன் என்கிற பெருமிதம்





இன்று ஐப்பசி சதயம். சக்ரவர்த்தி உடையார் ஸ்ரீ இராஜராஜ தேவரின் பிறந்த நாள். செயற்கரிய செயலை தன் வாழ்நாளில் முடித்து இறவாப்புகழ் பெற்று தன் மக்களோடு இந்த உலகில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மாமன்னனுக்கு எங்கள் இதயபூர்வமான அஞ்சலி.

சோழம் ! சோழம் ! சோழம் !

Tuesday, October 27, 2009

வெற்றி வேண்டுமேனில் - காதல் செய்வீர் உலகத்தீரே

யாரையாவது காதலித்தே ஆகவேண்டும் என்கிற பேராவல் சுமதிக்குள் கிளர்ந்தது. இதற்கு காரணம் ஒரு நடிகர். அவரின் உயரம், அகலம், கள்ளச் சிரிப்பு, கனமான நடை, சரளமான ஆங்கிலம், அவ்வப்போது தலைகாட்டும் கொச்சையான இந்தி, கொச்சையான கொஞ்சும் தமிழ். ‘ஐய்யோ...ஹி ஈஸ் சிம்பிளி கிரேட் யா’ என்று எல்லோர் போலவும் கூவினாள்.

சுமதிக்கு வயது இருபத்தியொன்று. நல்ல உயரம், வளைவான உதடுகள். எடுப்பான அங்கங்கள், ஸ்டைலான மேனி, துருதுரு கண்கள். கொஞ்சம் செம்பட்டையான நீளமுடி. ஆனால் உடலோ கருப்பு, மாநிறத்திலும் சற்று மங்கல். “நீ மட்டும் சிவப்பா பொறாந்திருந்தேன்னா என்னைய மாதிரியே உனக்கு பதினாறு, பதினேழு வயசுலயே கல்யாணம் ஆயிட்டிருக்கும். கொஞ்சம் நிறம் மட்டமா பொறந்துட்டதால, காலேஜ் படிக்கிறே...” அம்மா மெல்லிய பொறாமையோடு பேசுவாள்.

ஜீன்சும், முக்கால் ‘டி-ஷர்ட்டும்’ போட, அவளை வீடு அனுமதித்ததில்லை. கல்லூரியிலும் அவ்வித உடைக்கு கடும் தடை இருந்தது. ஆனாலும் அந்த மாதிரி உடைகள் அவளிடம் இரண்டு இருந்தன. புது நடிகர் ஒருவர் கல்லூரிக்கு வருகிறார் என்றும், மாணவிகள் புதுமையாக ஆடை உடுத்தி வருவது பற்றிதான் பேசினார்கள். என்ன உடையில் வரப்போகிறேன்? என்ன ஸ்டைல்? என்ன நிறம்? என்ன விதம்? என்று உரக்க கூவலாய் விவரித்தார்கள்.

இதை அம்மாவிடம் அன்று மாலை கிட்டதட்ட அதே கூச்சலுடன் சுமதி விவரித்ததும், அம்மா திகைத்தாள். “என்னடி அசிங்கம், இது? நடிகர் வர்றாருன்னு ஒரு டிரஸ்சா? என்ன அர்த்தம். நடிகர் மயங்கிடுவாரா? ‘இவ வேணும்’னு கைகாட்டி உன்னை கூட்டிக்கிட்டு போயிடுவாரா? முட்டா பொண்ணுங்களா. அந்த நடிகருக்கு கல்யாணம் ஆகி, குழந்தை இருக்கு தெரியுமில்லா...”

“ஆக நடிகருக்கு கல்யாணம் ஆனது எங்களுக்கு மறந்துடுச்சு. எங்களைப் பார்த்ததும் அவருக்கு, தன் கல்யாணம் மறக்கணும். அடடா... தப்பு பண்ணிட்டோமே... லட்டு லட்டா பொண்ணுங்க இருக்கே, எதைப் ‘பிக்கப்’ பண்ணுறதுன்னே தெரியலையேன்னு உள்ளே தவிக்கணும்”

“அடி செருப்பால...நினைப்பு பொழப்ப கெடுக்குதுடி”
அம்மா கத்தினாள்
“எங்க பொழப்பே அதாம்மா.”
“எது?”
“ஜாலியா கத்தறது, பாடுறது, ஊர் சுத்தறது. எல்லாரையும் பார்க்க வைக்கறது, பசங்க என்னமா ஜொள்ளு விடுறாங்க தெரியுமா? சாவறானுங்க. காலேஜ், பஸ் ஸ்டாண்ட் முழுக்க பையனுங்கதான். எந்த பஸ் வந்தாலும் ஏறமாட்டான், எங்களையே பார்த்துகிட்டிருப்பானுங்க.
“போதும்டி... கேவலமா இருக்கு.”
“என்ன கேவலம்? உன்னை மாதிரி பதினாறு வயசுல கல்யாணம் பண்ணி, ரெண்டு பெத்தபிறகு எவன் திரும்பி பார்ப்பான்?”
“எத்தனை பேரை திரும்பிப் பார்க்க வைக்க முடியுமோ அத்தனை பேரை திரும்பிப் பார்க்க வச்சுட்டு, எவனையாவது கல்யாணம் பண்ணிக்கணும்.”

இது பெரிய குற்றமில்லை... வக்கிரமான எண்ணமில்லை. ஆண்களால் பார்க்கப்படவே கூடாது என்கிற தீர்மானங்கள் ஏதுமில்லை. சுமதி அடிக்கடி சொல்வதுபோல், ‘சும்மா ஒரு ஜாலிக்கு’ என சிறிது நாள் ஆட்டம். ஆனால், வாழ்க்கை - கண்ணாடிப் பாத்திரம். எவர் லேசாய் இடித்தாலும் நொறுங்கிப் போகும். இதைச் சொன்னால் அந்த வயதுப் பெண்ணுக்குக் காதில் ஏறாது.

ஏனெனில், சுமதி போன்ற பெண்களுக்குக் காதல் என்பது கவர்ச்சியால் ஏற்பட்ட உருவகம். ஆனால், கவர்ச்சி என்பது மனம் செய்யும் கனவு. அழகு என்பது மெல்லிய தோலால் செய்யப்பட்டது. தோலுக்கு அடியில் சதை, ரத்தம், நரம்பு, எலும்பு என்று பலதும் நிரந்தரமாய் குடி இருக்கின்றன. திமிறிய உடம்பும், சிரிப்பும், துள்ளலும் முதலில் காட்சியாகின்றன. வியக்க வைக்கின்றன. பிறகு, பேச்சு கவர்கிறது. அதன்பின் நடவடிக்கைகள் காதலுக்கு வலுவேற்றுகின்றன. காதல் என்பது தன்னைத்தானே கொண்டாடிக் கொள்வது. தான் காதலிக்கப்பட தகுதியானவன் என்கிற நினைப்புதான் இன்னும் தேட வைக்கிறது.


‘ஐய்யோ, செம ஜொள்ளுவுடுது’ என்றோ, ‘பாப்பா வழியுது கண்ணா’ என்றோ பெருமிதம் கொள்வது, ‘தான்’ என்ற அகம்பாவத்தின் இன்னொரு விளைவு-காதல். தன் திறமைபற்றி, அழகுபற்றி, உயரம்-அகலம் பற்றி, வலுவு பற்றி சந்தேகம் உள்ளவர்கள் காதலில் ஈடுபடுவதில்லை.


தரையில் அமர்வதைவிட, குதிரையில் ஏறி அமர்வது ஒரு தனி கம்பீரம், சுகம். ஆனால் குதிரையேற்றம் கற்றுக்கொண்டு குதிரையேறுவது நல்லதல்லவா? இல்லையெனில், எங்கேனும் விழுந்து வாரி வேதனைப்பட வேண்டுமல்லவா?



காதல் என்பது என்ன என்று புரிந்து கொள்ளாது போவதாலேயே காதல் தோல்விகள் ஏற்படுகின்றன. காதல் என்பது மதித்தல். அடுத்தவரின் மன உணர்வுகளை, விருப்பு வெறுப்புகளை, திறமைகளைப் புரிந்து மதித்தல், பாராட்டுதல், பாராட்டப் பெறுதல். உற்சாகமடைதல், உற்சாகப்படுத்துதல். வேறுவிதமாய் சொல்வதென்றால், காதல் என்பது அடுத்தவரைக் கவனமாய் பார்த்தல். பரிசீலித்தல்.

ஆனால், சுமதி போன்ற பெண்கள் தங்கள் மேனியெழிலில் மற்றவர் மயங்குதலே காதல் என்று மயங்குகிறார்கள். யார் அதிகம் புகழுகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு, அவர்களை அறியாமல் ஏற்படுகிறது. அதிகம் புகழுகிறவர்கள் நல்லவர்களா என்கிற கேள்வி வருவதே இல்லை.

ஒரு கல்லூரியில் பேராசிரியர் என்கிற பச்சைப்பொய்யோடு ஒரு முன் வழுக்கைத் திருடன் அறிமுகமாகிப், சுமதியை வானளாவப் புகழ்ந்து, மோட்டர் சைக்கிளில் ‘மாயாஜால்’ அழைத்துப் போய்-கண்ணாடிப் பானையில் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து, அவ்வப்போது அசிங்கமாகப் பேசி, கொஞ்சம் தொட்டு, பிறகு நன்கு தொட்டு சூடேறவிட்டு, நாலு நாட்கள் ஏங்கவிட்டு, தேர்வு தாள் திருத்தத்துக்கு மதுரை போனதாய் சொல்ல-‘உங்க பேப்பர் எல்லாம் மதுரைக்குத்தான் வருது. எல்லோரையும் எனக்குத் தெரியும், பொருளாதாரத்துல நீ தங்கப்பதக்கம்’ என்று பேசி, பதிலுக்கு ‘நீ முத்தம் கொடு போதும்’ என்று வளைத்து ஒரே மாதத்தில் குறி வைத்து அவளை வீழ்த்தினான். அவள் அழுதாள்.

“என்ன ருசி... இந்த பத்தொன்பது வயதுக் குட்டி.” அவளைத் தொடர்ந்து உண்ணத் திட்டமிட்டான். ஒரு கிராமத்துக் கோயிலில் தாலி கட்டினான். சாமிக்கு சாராயம் வாங்க இருநூறு ரூபாய் கொடுத்தான். அவனும் குடித்து, அவளையும் குடிக்க வைத்தான். மூன்று நாட்கள் விதம் விதமாய் கிடந்தார்கள்.
வீடு அலறியது. தேடியது. நண்பிகளை விசாரித்தது. விவரம் தெரிந்து போலீசுக்குப் போனால், பத்திரிகைக்கு செய்தி போகும். பிறகு, வீட்டு மானம் போகும் என்று தாங்களே தேடினார்கள். அவள் வந்தவுடன் மூலைக்கு ஒருவராய் நின்று விளாசினார்கள். ஒரு அடி, தலையில்பட்டது. சுமதி மயக்கமானாள். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அதற்குள், அவன் அவளைப் பற்றி தவறான அபிப்பிராயங்களை கல்லூரியிலும், வீட்டருகிலும் பரப்பினான். வீடு ஒளியிழந்தது.


ஆனால், கடவுள் மிகப்பெரியவர். இன்னொரு பெண்ணிடம் இவ்விதமே அவன் முயற்சிக்க, அவனுடைய பல்வேறு தகிடுதித்தங்கள் செய்தியாயின. சிறைக்குப் போனான். அவனுக்கே கால்ல, கையிலே விழுந்து கட்டிவச்சுடலாம் என்கிற நினைப்பை அறுத்துவிட்டு, சுமதிக்கு வேறு இடம் பார்த்தார்கள். புரிதல் உள்ள ஒருவன் புருஷன் ஆனான். அவள் வாழ்க்கை மறுபடியும் வண்ணத் தோட்டமாயிற்று.

காதல் என்பது மதித்தல், மதிப்பவரை ஏமாற்ற இயலுமா? ஏமாற்றினால் மதித்தல் என்பது உண்டா. மதித்தல் எப்படி ஏற்படும்? உன்னால், உன் உதவியால் நான் சிறக்க முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட, மதித்தல் நிகழும். “நான் சுமாரா தான் சமைப்பேன். அதுவும் குழம்பு செய்ய வரவே வராது.” என மனைவி சொன்னால், கணவன் என்ன செய்ய வேண்டும்?

“அப்ப குழம்பே வேணாம்” எனக்கும் குழம்பு அவ்வளவா பிடிக்காது என்று பேசலாம். அல்லது, “குழம்பு செய்யறது பெரிய விஷயமா. சமையல் புத்தகத்தை எடு, துவரம்பருப்பு எங்கே” என கணவனும் களத்தில் இறங்கி, மனைவிக்கு உதவி செய்யலாம். குழம்பு தேனாய் இனிக்கும்.

காரக்குழம்பு, முருங்கைக்காய், மசாலா குழம்பு என்று பலவித பக்குவம், போட்டி போட்டு செய்யத் தோன்றும். எனக்குக் குழம்பு செய்யத் கற்றுக்கொடுத்தீங்க அல்லவா. உங்களுக்கு உடுத்த சொல்லித் தருகிறேன்.
மனைவி, கணவனுக்காகத் திட்டமிடலாம்.

அலுவலகத்துக்கு சீருடை, ‘அதனாலென்ன? அதையே ‘டிரிம்’மா போட்டுக்கலாம். வெளிர்நிற ‘டீசர்ட்’, ஜீன்ஸ், கல்யாண வீட்டுக்கு வேட்டி, வெள்ளை முழுக்கை சட்டை. பதக்கம் தர்றாங்களா? கோட் சூட்’ல போங்க. வீட்டுல லுங்கி வேணாம். தடுக்கும். அரைக்கால் சட்டை’என்று சொல்லலாம்.

மதித்தல்தான் அன்பு, அன்புதான் ஒருமுகப்பட்ட அக்கறை. மதித்தல், பொய் சொல்லாது. புறங்கூறாது. அது மிகுந்த சகிப்புத்தன்மை உடையது. கனிவுமிக்கது.

கணேஷ், அலுவலகத்தில் தன் உதவியாளராய் இருந்த விஜயலட்சுமியைத் திருமணம் செய்துகொள்ளலாமா என்று கேட்க, அவள் திகைக்க, அப்புறம், ‘இத்தனை தெளிவாய் நீ வேலை செய்யுறே. அதான் பிடிச்சுப் போச்சு’ என்று கணேஷ் காரணம் காட்ட,
“நான் கல்யாணம் பண்ணிட்டு வேலைக்குப் போகக்கூடாதுன்னு நினைக்கிறேன். நீங்க பி.ஏ.வாக நினைக்கிறீங்க” என்று விஜி மறுக்க, “பி.ஏ.தான் வீட்டுல” என்று அவன் விளக்க, பதினான்கு மாதங்கள் யோசித்து, காத்திருந்து, கல்யாணம் செய்துகொண்டார்கள்.

அந்த பதினான்கு மாதங்கள் பரஸ்பரம் புரிந்துகொண்டார்கள். தங்களைக் கணவன் மனைவியாய் தயார் செய்து கொண்டார்கள். காதல் என்பது திருமண ஒத்திகை. ஒத்திகையில் உண்மையாய் இருந்தால் தான் நீண்ட நெடிய திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பொய் சொல்லி, ஏமாற்றிய ஒத்திகை, வாழ்க்கை நாடகத்தை கலைக்கும். பாதியில் நிறுத்தச் சொல்லும். பரிகசிப்பாய் போகும்.

பொய்யற்று இருப்பது ஒரு சுகம்.

வெற்றி வேண்டுமெனில், பொய்யற்ற காதலைப் பழகுங்கள். காதலால் வெற்றியும், வெற்றியால் காதல் பலப்படுத்தலும் எளிதாய் நிகழும்.

Monday, October 26, 2009

உடையார் - சில எதிரொலிகள்




தமிழ் மொழியில் தொகை என்று இலக்கணக் குறிப்பொன்றிருக்கிறது. சொல்லுக்கு முன்பும் பின்பும் தொகை இடம்பெறும். ( உ-ம்.)நம்பினார் கெடுவதில்லை. எதை நம்பினால் இறையை, உண்மையை நம்பினால் கெடுவதில்லை. அதுபோல் தாங்கள் எழுதிவரும் தமிழ் மண்ணின் மாமன்னன் அருண்மொழி என்ற இராசராசச் சோழன் கதையின் தலைப்பையும் நான் தொகையாக உருவகப்படுத்துகிறேன்.

அன்புடையார், பண்புடையார், பக்தியுடையார், பரிவுடையர், பற்றுடையார், அறிவுடையார், நன்றியுடையார், செல்வமுடையார், மனமுடையார், மக்கட்பண்புடையார், பெரும்பேறுடையார், நலமுடையார், அகமுடையார் இவையனைத்தும் அந்தப் பேரரசனுடைய தொகை மொழியாகக் கொள்ளலாம் என்பது என் உள்ளக்கிடக்கை.

ஒன்று செய்வோம்: நன்று செய்வோம்: இன்றே செய்வோம்’ என்ற எண்ணமுடன் பெருவுடையாருக்குக் கற்றளி எழுப்பிய இராஜராஜ சோழக் சக்கரவர்த்திக்கு நாம் என்ன கைமாறு செய்யமுடியும்.

இன்றைக்கு 1002 ஆண்டுகளுக்கு முன் எந்த ஒரு நவீன வசதியும் இல்லாமால் மக்கள் மேலும், இறைவன் மேலும் வைத்த நம்பிக்கையால் மட்டுமே மாபெரும் கோயில் கட்டி சாதனை படைத்த மன்னனுக்கு நாம் மரியாதையை எப்படிச் செலுத்துவது?.

அன்பே சிவம்.

உடையார் பற்றிய ஒரு முன்னுரையில் தாங்கள் எழுதும் பொழுது சோழ சாம்ராஜ்யத்தில் இக்கோயிலுக்கு உங்கள் பங்களிப்பும் இருந்திருக்கிறது என்ற பிரம்மை தோன்றுவதாகக் கூறுகிறீர்கள். அது பிரம்மையல்ல. உண்மையென்றே எனக்கும் தோன்றுகிறது. எனக்கும் அப்படி ஒரு பிரம்மை வந்தது.

உடையாரைப் படிக்கும் முன் எனது விபரம் தெரிந்த வயது முதல் சுமார் 10 வயதிலிருந்து 39 வயது வரை பத்து தடவை பிரகதீச்சுரம் சென்றுள்ளேன். அப்பொழுதெல்லாம் சிவபெருமானையும், நந்தியையும் பெரியநாயகி தாயாரையும் வியந்திருந்து அனுபவித்திருக்கிறேன்.

உடையார் படித்த பின்பு அம்மன்னனுடைய முயற்சிகளையும் கட்டுப்பாட்டுடன் சிற்பி, அந்தணர்,அரசர், படைக்கைதிகள், பாணார்கள், தளச்சேரி பெண்டிர், பொதுமக்கள், யானை, குதிரை, மாடு, கொல்லர், தச்சர், ஆதூரச் சாலையினர், பெண்டிர், புலவர் என்று அனைவரையும் அரவணைத்து, அனைவர் பிரச்சினைகளையும் சமாளித்து, திறம்பட சந்திராதிசூரியர் உள்ளவரை நிலைபெறும் வகையில் செய்த கற்றளியின் மேல் நாம் பாதம் வைத்து நடக்கவே மனம் பதறுகிறது. எத்தனைப்பேர் உழைப்புடையது. நாம் முடிந்தால் காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து கைலாசம் சென்றதுபோல்தான் நடக்கவேண்டும்.

நீங்கள் எழுதுவது கற்பனை கதை அல்ல. நேரடி ஒலி., ஒளிபரப்பு மட்டுமே செய்ய முடிவதைத் தங்கள் எழுத்துகளில் கொண்டு வருவதால் தாங்கள் எழுத்துச் சித்தர் என்பது மிகையாகாது. திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் அருளைவிடவும், அகிலாண்டேசுவரித் தாயின் கருணை என்பால் சுரந்ததன் விளைவே தங்களைக் கோவிலில் சந்திக்க நேர்ந்தது. நன்றி.

என்னையும், மனைவியையும், மகனையும் எழுத்துச் சித்தருடைய கைகளும் மனமும் வாழ்த்தியதால் மனம் அடைந்த ஆனந்த பரபரப்பு பத்து தினங்களாகியும் அடங்கவில்லை. கமலா அம்மையார், சாந்தா அம்மையார், சகோதரி ஸ்ரீகெளரி அவருடைய கணவர் கணேஷ், தங்கள் பேரன் ஆகாஷ், இனிய சகோதரன் சூர்யா மற்றும் தங்களுடைய நலமே நான் இறைவனிடம் வேண்டுவது.

பொன்சந்திரசேகர், மற்றும் இதழியல் துறை நண்பர்களுக்கும் நன்றி. உடையார் நினைவாக என் மகன் எடுத்த புகைப்படம் அனுப்பியுள்ளேன். கிடைத்தபின் பதில் எழுதினால் மிகக் கொடுத்து வைத்தவனாவேன்.

நன்றியுடன்
சு.ஞானபாஸ்கரன்

Sunday, October 25, 2009

என்னைச் சுற்றி சில நடனங்கள் - என்னை நெகிழ்த்திய சம்பவம்

ஜனனம் என்கிற படத்திற்காக திருச்சியில் ஜென்னிஸ் ரெசிடென்சியில் தங்கியிருந்தேன். சினிமா நண்பர்கள் சற்று தாமதமாக தூங்கி எழுவார்கள். ஒன்பதரை மணிக்கு ஒன்று கூடுவார்கள். விடியலில் எழுந்து விடுவது என் பழக்கம் என்பதால் எழுந்து குளித்து பூஜை முடித்து ஏதேனும் கோயிலுக்குப் போய் எட்டு எட்டரை சிற்றுண்டிக்காக ஹோட்டலுக்குத் திரும்பி விடுவேன். ஹோட்டல் வாசலில் நின்றபடி எதிர்ப்பக்க சினிமா போஸ்டர்களைப் பார்த்துக் கொண்டிருக்க ஒரு ஆட்டோ வேகமாக கடந்து போயிற்று. அதே வேகத்தில் கிறீச்சிட்டு நின்றது. வட்டமடித்து திரும்ப என்னிடம் வந்தது.

ஆட்டோவிலிருந்து நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி இறங்கினார். படித்தவர் போலும், எங்கோ வேலை செய்பவர் போல காணப்பட்டார். அவர் தோளில் வேலைக்குப் போகும் பெண்கள் வைத்திருந்த பை இருந்தது. மெல்லத் தயங்கியபடி கீழிறங்கி ‘நீங்கள் பாலகுமாரன் தானே’ என்றார். ‘ஆமாம்’ என்று சொன்னேன். ‘இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்’ என்று வியப்போடு கேட்டார்.

‘ஜென்னிஸ் ரெசிடென்சியில் தங்கியிருக்கிறேன். போஸ்டரை பார்த்துக்கொண்டிருக்கிறேன். என்ன விஷயம்’ என்று பதிலுக்குக் கேட்டேன்.

அவர் தன் பெயரையும், உத்தியோகத்தையும் அறிமுகப்படுத்திக் கொண்டார். என்னைச் சந்தித்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி என்று கூவினார். வாசகர்கள் என்னைச் சந்திக்கும்போது, சிலர் உணர்ச்சிவசப்படுவது இயல்புதான். எனினும் இந்த அம்மாள் சட்டென்று கண்ணீர் பெருக்கெடுக்க கைகூப்பி உதடு துடிக்க நின்றது சற்று வித்தியாசமாக இருந்தது.

‘ஏன் உணர்ச்சி வசப்படுகிறீர்கள். நான் ஒரு சாதாரண எழுத்தாளன்’ என்று அமைதியாகச் சொல்ல, அந்த அம்மாள் வேகமாக தலையாட்டி மறுத்தார்.

‘ நீங்கள் யாருக்கு சாதாரண எழுத்தாளன் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், என் வீட்டில் உங்களை வேறுவிதமாக நாங்கள் கொண்டாடுகிறோம். குறிப்பாக என் தாய் உங்களை மிக உயர்வான இடத்தில் வைத்திருக்கிறாள். அனேகமாக தினமும் பாலகுமாரன் புத்தகம் புதிதாக ஏதாவது வந்திருக்கிறதா என்று கேட்பார். வரவில்லை என்றதும், ஏதேனும் ஒரு படித்த புத்தகத்தைச் சொல்லி, அதைக் கொடு . படித்துப் பார்க்கிறேன் என்று அந்தப் புத்தகம் வாங்கி பாதியிலிருந்து படிக்க ஆரம்பிப்பார். பலமுறை படித்த புத்தகங்கள். இருப்பினும் கையில் பென்சிலோடு உட்கார்ந்து அடிக் கோடிட்டு அந்தப் புத்தகத்தை அனுபவித்துப் படிப்பார். அப்படிப் படிப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய டைரியில் உங்களைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார். மகனைப் பற்றியோ, மகளைப் பற்றியோ, புருஷனைப் பற்றியோ, வேறு உறவுகள் பற்றியோ அவர் அதிகம் எழுதவில்லை. வந்தார்கள், போனார்கள் என்ற விவரம்தான் இருக்கும். ஆனால் உங்களைப்பற்றி மட்டுமே நிறைய அபிப்ராயங்கள் சொல்லியிருக்கிறார்.
அம்மாவின் டைரியை படிப்பதற்காக நான் எடுத்து வந்தேன். இதோ பாருங்கள்’, என்று பையிலிருந்த ஒரு நீலநிற டைரியை பிரித்துக் காண்பித்தார்.
அந்த டைரியில் அழகான கையெழுத்தில் நிறைய என் கதைகளைப் பற்றிய அபிப்ராயங்கள் எழுதப்பட்டிருந்தன.

‘சபாஷ்.. பாலகுமாரா.. சபாஷ். நீ அபிராமிபட்டரா’ என்று கேள்வி ஆச்சரியக்குறி எல்லாம் போட்டிருந்தது.

‘உன் கேள்வி பதிலைக் கூட தனிப்புத்தகமாகப் போடலாம். எத்தனை விஷயங்கள் சொல்லித் தருகிறாய்’ என்று எழுதியிருந்தது.

என் தாயார் இறந்தபோது குமுதத்தில் நான் உருக்கமாக எழுதியிருந்த ஒரு கட்டுரை பற்றிய அபிப்ராயம் இருந்தது.
‘பாலகுமாரன் தாயார் கொடுத்து வைத்தவள். புண்ணியவதி. இந்தக் கட்டுரை முடிவில் இதை படிக்க அம்மா இல்லை என்று பாலகுமாரன் எழுதியிருக்கிறார். அந்த அற்புதமான கட்டுரையை எப்படி அவன் அம்மாவால் படிக்காமல் இருக்க முடியும். அவன் அம்மா இந்தக் கட்டுரையையும் படித்திருப்பாள். படித்து நெகிழ்ந்திருப்பாள். என் மகனே.. என் மகனே.. என்று அவனை கட்டித் தழுவி கொஞ்சியிருப்பாள். பாலகுமாரனுக்கு இது தெரியாது போயிருக்கும். சூட்சுமமாக அவனை நிச்சயம் ஆசிர்வதித்திருப்பாள். பாலகுமாரன் தாய் புண்ணியவதி’ என்று எழுதியிருந்தது.

நான் சற்று மனம் தடுமாறினேன்.
கடவுளே.. யார் யார் மனதையோ நான் தொட்டிருக்கிறேன் என்று நெகிழ்ந்தேன்.

‘அம்மாவுக்கு என் நமஸ்காரங்கள் சொல்லுங்கள். உங்கள் வீடு எங்கே இருக்கிறது. அவரை நான் பார்க்கலாமா’ என்று கேட்டபோது அந்த பெண்மணி திகைத்து என்னை பார்த்தாள்.

“என் அம்மா இறந்து மூன்று மாதம் ஆகிறது. மாதாந்திரச் சடங்குகள் அவளுக்காகச் செய்து வருகிறோம். இன்றைக்கு அந்தச் சடங்குகளை முடித்துவிட்டு நான் தாமதமாக அலுவலகத்திற்குப் போகிறேன். அதனால்தான் உங்களைப் பார்த்தேன். உங்களை இந்த நாளில் அம்மாவின் டைரியோடு நான் சந்திக்க முடிந்தது ஆச்சரியம். அம்மாவே உங்களை சந்தித்தாள் என்பது போல எனக்குத் தோன்றியது. என் அம்மா மட்டும் இந்த இடத்தில் உங்களைப் பார்த்திருந்தால் என்ன செய்திருப்பாள் என்று எனக்குத் தெரியாது. அந்த எழுபத்தியாறு வயது கிழவி உங்களை காலில் விழுந்து நமஸ்கரித்திருப்பாள். கட்டித் தழுவி முத்தமிட்டு ஆசிர்வத்திருப்பாள்” என்று சொல்லி அழத் துவங்கினார்.

ஒரு ஹோட்டல் வாசலில் ஒரு பெண்மணி, என் எதிரில் குலுங்கி குலுங்கி முகம் பொத்தி அழ, சுற்றி இரண்டு மூன்று ஆட்கள் நின்று பார்த்தார்கள். நான் மெளனமாக அந்த துக்கத்தை ஏற்றுக் கொண்டேன். அவர் ஆத்மா சாந்திடைய பிரார்த்திக்கிறேன் என்று சொன்னேன்.

அவர் அழுததற்கு மன்னிப்பு கேட்டு, முகம் துடைத்துக் கொண்டு, என்னிடம் விடைபெற்று ஆட்டோ ஏறி பறந்து போனார். நான் சற்று தள்ளாட்டமாக ஹோட்டலுக்குள் நுழைந்தேன்.

ஒருவர் மனமுவந்து பாராட்டியிருப்பதை அவர் இறந்த பிறகு அறிந்து கொள்வது என்பதை நான் அப்பொழுது தான் முதன்முதலில் உணர்கிறேன். ஒரு சந்திப்பு நிகழாமலேயே போய்விட்டது என்று ஒரு துக்கம் ஏற்பட்டது. ஆனால், இன்னொரு ஜென்மத்தில் நானும், அந்த அம்மாவும் நிச்சயமாக எங்கேனும் சந்திப்போம், உறவாகவோ, நட்பாகவோ, ஒருவரையொருவர் கொண்டாடுவோம் என்ற நம்பிக்கை பிறந்தது.

எல்லா நம்பிக்கையும் அன்பின்பாற்பட்டது.

Friday, October 23, 2009

சில கேள்விகள் - பாலகுமாரன் பதில்கள்


காசு சம்பாதிப்பது கடினமாக இருக்கிறதே.....

உங்களுக்கு எதில் காசு இருக்கிறது. அதை எப்படி சம்பாதிக்க வேண்டுமென்று புரியவில்லை.

வெறுமே கடுமையாக உழைத்தால் மட்டும் போதாது. உழைப்புக்குண்டான பலனைப் பெறுவதிலும் சற்று கூர்மையாக இருக்க வேண்டும். எது முக்கியம், ஓய்வா, உழைப்பா. எவ்வளவு ஓய்வு, எவ்வளவு உழைப்பு என்று உங்களுக்குள் நீங்களே தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்.

உழைக்கின்ற நேரத்தையே ஓய்வு நேரம் போல பல பேர் பயன்படுத்துகிறார்கள். “வாழையடி வாழை” என்ற நாவல் முடித்த மறுநாள் நான் அடுத்த நாவல் ஆரம்பித்து விட்டேன். அடுத்த நாவல் முடித்த பிறகு சினிமா விவாதங்களில் கலந்து கொண்டேன். சினிமா விவாதங்கள் முடித்த பிறகு இன்னொரு கம்பெனிக்கு பயணப்பட்டு விட்டேன். பயணத்தின் போது அடுத்த நாவல் பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டேன். உழைப்பு என்பது இடைவிடாத விஷயம். ஓய்வு நேரத்திலும் உழைப்பதற்கு ஒரு பக்குவம் இருக்க வேண்டும். ஆனால் எவ்வளவு காசு வேண்டும் என்பது முக்கியமான விஷயம். அளவில்லாத காசுக்கு ஆசைப்பட்டோம் என்றால் அதற்கு முடிவே இருக்காது. போதும் என்று ஒரு கோடு வரைந்து கொள்ள வேண்டும். கோடு இல்லாத போது எவ்வளவு சம்பாதித்தாலும் வாழ்வின் எல்லா சந்தோஷங்களும் குறைவானதாகவே தோன்றும்.


“ஈசனோடாயினும் ஆசை அறுமின்” என்று சொல்லுகிறார்களே.. அப்போது குரு மீது கூட பற்று வைக்கக் கூடாதா?

கூடாது.

குருவிடமிருந்து விலகி இருக்க வேண்டும். நன்கறிந்தவர்கள், தவத்தில் முதிர்ந்தவர்கள் குருவிடமிருந்து விலகி விடுவார்கள். என்னுடைய குருநாதர் யோகி ராம்சுரத்குமார் கஞ்சன்காடு என்ற இடத்தில் உள்ள ஆனந்தாசிரமம் என்ற ஆசிரமத்தின் தலைவரான பப்பா ராமதாஸ் என்பவரை குருவாகக் கொண்டவர். ஒரு காலகட்டத்தில் பப்பா ராமதாஸ், யோகிராம்சுரத்குமார் அவர்களை தன் ஆசிரமத்திலிருந் நகர்த்தி வைத்து விட்டார். அப்படி நகர்த்தி வைத்தததே யோகிராம்சுரத்குமாரின் ஆன்மீக வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.

வன்முறையை அதிகமாகக் தூண்டுபவர்கள் யார்? அரசியல்வாதிகளா? மதவாதிகளா?

இரண்டு பேர்களும்தான்.

யாருக்கு ஜெயிக்க வேண்டும் என்ற பேராசை அதிகமாக இருக்கிறதோ, யாரிடம் நான்தான் மிக முக்கியமான நபர் என்கிற அலட்டல் அதிகமாக இருக்கிறதோ, யாருக்கு தனக்கு அதிகம் தெரியும் என்கிற கர்வம் இருக்கிறதோ அவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். சந்தேகம் உள்ளவர்களுக்கு வன்முறை வராது. எனக்கு எல்லாம் தெரியும் என்கிற கர்விக்கு வன்முறை மிகப்பெரிய ஆயுதம். ஆனால் எல்லாம் தெரிந்தவர் என்று இங்கே எவருமில்லை.

புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் வர சிறந்த வழி எது?

உங்களை சுற்றியுள்ள உலகத்தை விருப்பு வெறுப்பின்றி பார்த்தால், ஒவ்வொரு பிரச்சனகளைச் சந்திக்கின்ற போதும் உங்கள் மனது என்னவெல்லாம் கூச்சல் போடுகிறது, எப்படியெல்லாம் திசை மாறுகிறது என்று கவனித்துக் கொண்டிருந்தால், உங்களையும் பிறரையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தாலே புரிதல் ஏற்பட்டு விடும். உங்கள் மனதை எப்போது கவனிக்க முடியும் தெரியுமா... நட்போ, உறவுகளோ இல்லாமல் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரமாவது தனியாக இருங்கள். போகப் போக உங்களைக் கவனிக்க முடியும்.


ஒழுக்கம் குறித்து அதிகம் பேசுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சந்தேகப்படுவேன். எதை ஒழுக்கம் என்று சொல்கிறார் என்று அவரை ஆராய முயல்வேன்.

ஆண், பெண் உறவு மட்டுமே ஒழுக்கம் என்று பேசுகின்ற கசடர்கள் பல்வேறு நிலைகளில் ஒழுக்கக்கேடர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக சமூகத்தில் பெரிய மனிதர்களாக, பெரிய பட்டாளத்தை தன்னோடு வைத்திருப்பவர்களிடம் இந்த நம்பிக்கை துரோக ஒழுக்கக்கேட்டைப் பார்க்கிறேன். பொய்யான பிரியமும், போலியான பேச்சும், ஆள் பார்த்து முகமன் சொல்வதும், காசுக்காக கள்ளனை தர்மதாதா என்று சொல்வதும் மிக பெரிய ஒழுக்கக் கேடுகள். ஞானமற்றவரின் செய்கைகள். இவர்கள்தான் புலனடக்கம் பற்றி நிறைய பேசுவார்கள். அவர்கள் சமூகத்தின் சாபங்கள். அவர்களிடமிருந்து நான் அதிகம் விலகியிருக்கவே விரும்புகின்றேன்.

Tuesday, October 20, 2009

சூரியனோடு சில நாட்கள் - பாலகுமாரன் பேசுகிறார்

பத்து மாதங்களுக்கு முன்பு ஒரு படத்துவக்க விழா. அழைப்பு வந்திருந்தது. இவர் தலைமை, இவர் முன்னிலை, இவர் தயாரிப்பு, இவர் இயக்கம், இவர் இசை என்றெல்லாம் பத்திரிக்கையில் அச்சிடப்பட்டிருந்தாலும், குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து வாழ்த்துபவர் ரஜினிகாந்த் என்று பெரியதாய்-நாடு மையமாய்-கண்ணைப் பறிக்கிற விதத்தில் இருந்தது. அடடே, பார்த்து நெடுநாளாயிற்று. பேசி வெகுகாலமாயிற்று. இன்று சற்று நெருங்கி நின்று ‘ஹலோ’ சொல்ல வேண்டும். முடிந்தால் பேச வேண்டும்.

ஓரமாய் நிற்பதை மாற்றிக் கொண்டு, அவர் வரும் வழியில் சரியான கோணத்தில் நின்று கொண்டேன். அருகே வந்து பேசுபவர்களிடம் குறைவாகப் பேசி, அவர் வரும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஸ்டூடியோ வாசலுக்கு வந்துவிட்டதாய் சொன்னார்கள். சட்டென்று பரபரப்பானார்கள். ஓரமாய் வைத்திருந்த பூக்கூடை நூறு. மடமடவென்று எடுத்துக்கொண்டார்கள். ஒருவரை ஒருவர் அதட்டி மிரட்டி சத்தம் போட்டு வரிசையானார்கள், வரிசையாகும் முயற்சியில் என்னைப் பின்னடையச் சொன்னார்கள். பின்னடைந்து படியேறினேன். இடதும் வலதுமாய் இளைஞர்கள்-சினிமாவில் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டவர்களாய் ஒரு நூறு நூற்றிருபது பேர் இருப்பார்கள்.

அவர் வண்டியிலிருந்து இறங்கி நிமிர்ந்து மலரச் சிரித்து கைகூப்ப, பெரிய கைதட்டல். இரண்டு வரிசையாய் நின்ற நண்பர்களுக்கு இடையே நடக்க, பூக்கூடையிலிருந்து ரோஜாப்பூ மழையாய் கொட்டப்பட்டது. தூவப்பட்டது. சில கணங்களுக்கு எங்கும் பூ. இருபதடி உயரத்தில் எல்லா நேரமும் அந்தரத்தில் பூக்கள் இருந்தன. தரைபட்டு, துள்ளி வாசம் எழுப்பின. பூக்கள் வீசப்பட்டு தன்மேல் பொழிவது கண்டு சட்டென்று ஒரு தயக்கம் அவருக்கு-என்ன இது என்ற பார்வை. உடனே சிரிப்பு.

சரி இப்படி ஒரு அன்பா. சரி என்று கைகூப்பி ராஜநடையுடன் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வர, மற்றவர்கெல்லாம் மனசுள் என்ன தாக்கியது. ரஜினிகாந்த் மனிதர்தானே தெய்வமாய் போற்றுகிறார்களே. ரஜினிகாந்த் நடிகர்தானே, ஒரு அரசருக்கு உரிய வரவேற்பு தருகிறார்களே. மலர் மழையில் நடந்து வருமளவுக்கு என்ன உயர்த்தி... இது அன்பின் வெளிப்பாடா. சட்டென்று ஒரு புதுவிதமான காட்சி கண்ட திகைப்பில், திகைப்பின் விளைவாய் உள்ளே பொறாமை பொங்கியது.

இது என் புத்தி, எங்கே முதன்மை எவருக்கு நடந்தாலும் அது நானாய் இருக்க வேண்டும். எனக்கும் நடக்க வேண்டும் என்கிற புத்தி. இதைச் சொல்லிக் கொள்ள எனக்கு வெட்கமில்லை, உற்றுப் பார்த்தால் உங்களில் நிறையப் பேருக்கு புத்தி இப்படித்தான் இருக்கும். உண்மையை மட்டும் சொல்வது என்று ஊரார் தீர்மானித்தால் நூற்றுக்கு தொண்ணூற்றெட்டு பேர் இப்படித்தான் சொல்வார்கள்.

நான் மனசுள் பொங்கும் உணர்வுகளை காமம், காதல், பொறாமை, ஏக்கம், பேராசை இவைகளைத் தடுப்பதில்லை. ச்சீ வெளியே வராதே என்று எண்ணங்கள் வந்தால் அடக்குவதில்லை. மாறாய் அனுமதித்து விடுவேன். அது...அந்த எண்ணம் செலவாகும் போது மனம் கூர்மையாகி ஆராய்ந்து அலசி சுத்தம் செய்துவிட்ட பிறகே அனுமதிப்பதுண்டு. சட்டென்று ரஜினிகாந்த் மீது பொறாமை வந்தது. பொறாமைப்படுகிறோமே என்று வெட்கமும் வந்தது.

டேய் தம்பி, மனசுத்தம்பி, எதுக்கு பொறாமை, அவரை ஜனங்கள் விரும்ப ஆயிரம் காரணங்கள் இருக்கும். உனக்கு எதுக்கு பொறாமை. வரிசையில் நின்ற இளைஞர்களுக்கு அவர் பல்வேறு உதவிகள் செய்திருக்கக்கூடும். இது தெரியாமல் ஏன் புழுக்கம். உனக்கு அவர் கெடுதல் எதுவும் செய்ததுண்டா, இல்லையே. அப்படியிருக்க எதனால் புழுக்கம். முதலில் மற. புழுக்கம் விடு. உண்மையில் உன் உணர்வு பொறாமையல்ல. நீ பயந்து விட்டாய். நூறு பேர் ரோஜா தூவி மொத்த சூழ்நிலையையும் கண நேரத்தில் மாற்றியது உன்னை அதிர அடித்துவிட்டது. பெரிய ஆளுயர மாலைபோட்டிருந்தாலோ, சரிகைச் சால்வை சார்த்தியிருந்தாலோ, கற்பூர ஆரத்தி காட்டியிருந்தாலோ உனக்கு அதிர்ச்சி ஆகியிருக்காது. பூமழை ‘ஹா’ என்று வியக்க வைத்துவிட்டது. வியப்பு வழியே வந்த பொறாமை இது.

டேய் தம்பி, மனசுத் தம்பி தணிந்து போ, கேட்டு நடந்திருக்குமா, திட்டமிட்ட செயலா. அந்த மனிதனை உனக்குத் தெரியும். ‘ஹலோ’ என்று தானாய் நாலடி முன் வந்து கைகுலுக்கும் ஆள். ஒரு போட்டோ எடுத்துக்கணும் என்று யார் கேட்டாலும், எப்போது கேட்டாலும், எத்தனை நேரமானாலும் அலுக்காது சம்மதம் சொல்கிற நடிகர். சிறிது முகவாட்டம் தெரிந்தாலும் உடன் வேலை செய்யும் தோழர்களிடம் என்ன காரணம் என்று உடனே தயங்காது கேட்கும் மனிதன். இங்கு இப்படி மனிதர்கள் அபூர்வம். அதனால்தான் இந்த பூமழை பூப் போன்ற அன்புமழை.

பொறாமை விட்டு உற்றுப்பார். உன்னை, ரஜினியை இடைவிடாது பார். உனக்கு பேச வாய்ப்பு கிடைத்தாலும், உன் அருகே அவர் பிறரோடு பேசுவதைப் பார்க்க கிடைத்தாலும் உற்றுப்பார்.

அப்படி என்ன உயர்வு, கவனி.

மனிதர்கள் இயற்கையின் குழந்தைகள். பூமி, வாயு, அக்னி, நீர், ஆகாயம் என்று இயற்கைச் சக்திகள் கலந்தவர்கள்.சூரியனின் உதயம், சந்திரனின் குளுமை, நீரின் சலசலப்பு, ஆகாயத்தின் பெரும் சக்தி, வாயுவின் அலையல்-எல்லாம் மனிதர்களில் உண்டு.

மனிதரை கவனிப்பது இயற்கையைக் கவனிப்பது போல.

ரஜினிகாந்த் என்ற மனிதனை, அந்த மனிதனை நேசிக்கும் மனிதர்களைக் கவனி. ரஜினிகாந்த் உன் சகஜீவி. தென்னிந்தியா முழுவதும் வளைத்துப் பிடித்த ராஜராஜ சோழன். மராட்டாவிலிருந்து நகர்ந்து, கர்னாடகத்தில் குடியேறி, தமிழ் தேசம் வளைத்த சாளுக்கியன். அன்பான புலிகேசி.

இவரைத் தெரியாது என்று தென்னிந்தியாவில் எவராவது சொல்வார்களா, சகலருக்கும் தெரிந்த முகம். சகரும் பல தடவை உச்சரித்த பெயர். ஆறு மாதக் குழந்தையிலிருந்து அறுபது தாண்டிய பெரியோர்கள் வரை பார்த்துப் பரவசப்பட்ட முகம். டேய் தம்பி, மனசுத் தம்பி உற்றுப்பார். ரஜினிகாந்த் நெற்றியை, கண்களை, புருவத்தை, மூக்குக் கூர்மையை, கை விரல்களை, உள்ளங்கையை, தோல் நிறத்தை, நிற்பதை, நடப்பதை, முக அசைவை, கண் உருளலை, மூச்சு விடுதலை உற்றுப்பார்.

எதனால் இது இப்படி ஒரு சிறப்பு பெற்றது. ஒட்டாது உற்றுப்பார். ஐயோ என்று ஆங்காரப்படாதே. ஆஹா என்று கொண்டாடவும் செய்யாதே, ஓதுங்கி நின்று உற்றுப்பார். விருப்பு-வெறுப்பின்றி ரஜினியை ஸ்வீகரி. இப்படி தீர்மானம் செய்த ஆறாம் மாதம் மறுபடி சந்தித்தேன். மிக நெருக்கமாய் மூச்சு விடுகிற ஓசை கேட்கும் தூரத்தில் சந்தித்தேன்.

Monday, October 12, 2009

உடையார் - சில எதிரொலிகள்



சாஸ்திரி நகர்,
அடையாறு, சென்னை-20

அன்புள்ள பாலகுமாரா,

என்றேனும் இன்னும் ஒரு முறை தஞ்சைப் பெரிய கோயிலைத் தரிசிக்க நேர்ந்தால் என் மனமும் மூளையும் பிரகதீஸ்வரரைப் பார்க்குமா? சந்தேகமே. உடையாரைப் படித்தபின் பார்வை கட்டாயம் வேறாகி விடும். இந்த இடத்தில்தான் பெருந்தச்சர் காப்புக்கட்டிக் கொண்டு பிரக்ஞை செய்திருப்பாரோ? இங்குதான் முதன்முறை மண் தோண்டப்பட்டு இருக்குமோ? இதற்கடியில் இராஜராஜன் பட்ட மகிஷியும் மற்ற மனைவியரும், தங்க வளையல்களையும், சங்கிலிகளையும் இதர நகைகளையும் அஸ்திவாரக் குழியில் போட்டிருப்பார்களோ? இந்தப் பிள்ளையார் அருகில் தான் யானை முதல்பலியாக இறந்து விழுந்திருக்குமோ? இங்கேதான் தோண்டிய மண்ணைக் கொட்டி இருப்பார்களோ? இங்கேதான் பாண்டிய வீரன் மதுகொடுக்கப்பட்டு பிதற்றியிருப்பானோ? என்று தான் யோசிக்கத் தோன்றும்.

இரண்டாம் தளத்தில் இருக்கும் ஓவியங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்தால், சீராளனும் உமையாளும் அருகே வந்து நிற்பார்கள். திரிபுராந்தகரையும், அவருக்கு உதவி செய்யும் பார்வதி சுப்ரமண்யர் பிள்ளையாரையும் வேறு கோணத்தில், நீ பார்த்த கோணத்தில் பார்க்கத் தோன்றும். கோபுரத்தை அண்ணாந்து பார்க்கையில், நீலநிற வானத்தின் கீழ் பொன் தகடுகள் போர்த்திய பெரிய கோபுரம் ஒருநாளில் ஜொலித்திருக்கும் எனத் கற்பனை செய்யத் தோன்றும்.

பெரிய கோயில் ஒரு பிரம்மாண்டம் என்றால், அந்தக் கட்டிடப்பணி அதைவிடப் பிரம்மாண்டம். அந்தக் கட்டிடப் பணியினைக் கற்பனை செய்து, (ஓரளவு ஆதாரங்கள் கிடைப்பினும்) புஸ்தகமாக்கியிருப்பது இன்னொரு பிரம்மாண்டம்.

படிப்பவர்க்கு மலைப்பை உண்டு பண்ணுவது, உடையார் ஸ்ரீஇராஜராஜத்தேவர் மட்டுமல்ல; பாலகுமாரனும்தான்.

அனேகமாய் எல்லாப் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் ரணகளம்தான். தேசத் தந்தை மகாத்மாகாந்தி, தந்தை என்ற பொறுப்பைச் சரிவர நிறைவேற்றினாரா, இல்லையா? என்று பட்டிமன்றம் போட்டுக் காந்தியைப் பரிகசிக்கிறார்கள். பெண் விடுதலை பாடிய பாரதி பெண்டாட்டியை வைத்துக் காப்பாற்றி இருந்தால் அவர் வெறும் சுப்பையா. தேசியகவி சுப்ரமண்ய பாரதி ஆகி இருக்கமுடியாது

நாலு பிள்ளைகளுக்கும் வசதியான வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால், அவர் வெறும் மோகந்தாஸ் காந்தி, மகாத்மா காந்தி இல்லை. அம்மங்கையைப் பற்றி நினைத்து அவளுக்காக வாழ்க்கையைச் செலவிட்டிருந்தால், குந்தவையைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தால் என்றோ இராஜராஜன் மக்கள் மனத்திலிருந்து இறங்கியிருப்பான். இன்றளவும் சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது.

இது அருள்மொழி என்ற தனிமனிதனின் கதை அல்ல; ஒரு சமுதாய அலசல். அந்தணர்கள், கல்தச்சர்கள், மறவர்கள், தேவரடியார்கள் என்று பிரிந்திருந்த தமிழ்ச் சமுதாயத்தின் வக்கரிப்புகளுக்கிடையே, கொக்கரிப்புகளுக்கிடையே இழிபடாமல் அத்தனை பேரையும், அணைக்க வேண்டிய இடத்தில் அணைத்து, கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து, அனைவர்க்கும் மேலாய் உயர்ந்து நின்று, உயர்ந்த கோயிலைக் கட்டமுடிந்தது என்றால் அது அந்த மஹாமனிதனின் மஹாகெட்டிக்காரத்தனம்.

சோழர் காலத்தில் ஒற்றர் படை மிக அதிகம் எனப் படித்திருக்கிறேன். அந்த வலை படர்ந்து விரிந்து கிடந்ததை ஒற்றனுக்கு ஒற்றன் அவனுக்கு இன்னொரு ஒற்றன் என்று எக்கசக்கமாய் ஒற்றர்கள் இருந்ததைக் காட்டியிருக்கிறார்கள். கற்பனைப் பாத்திரமென்றாலும் வைஷ்ணவதாஸன் கண்கலங்கச் செய்துவிட்டார். அவர் மனைவியை என்ன செய்ய போகிறாய்? அவளுக்கு நற்கதிகாட்டுவாய்.

சோழர்களின் மிகக் கொடுமையான போர் முறை பற்றி பல சரித்திர நூல்கள் கூறுகின்றன. அதற்கு இக்கதையில் சரியான காரணம் காண்பித்திருக்கிறாய். கோயில் கட்டுதல் ஒரு மிகப் பெரிய விஷயம் என்றால் மேலைச் சாளுக்கிய போர் இன்னொரு மகா பெரிய விஷயம். அதற்கு எத்தனை எத்தனை ஏற்பாடுகள். Picturesque Description என்று சொல்வார்கள். போர்ப்படை கம்பீரமாய் கண்முன்னே அணி வகுத்துச் செல்வதைக் காணமுடிகிறது.

உனக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன், தீர்த்த யாத்திரை என்ற தலைப்பில் தென்மேற்கு, வடகிழக்குப் பருவக்காற்று பற்றிய இசை நாடகத்தை எங்கள் பள்ளியில் அரங்கேற்றியபோது நீ தலைமை தாங்க வந்திருந்தாய். இந்தச் சிறிய அரை மணி நேர விஷயத்திற்கு நான் ஒரு மாதம் உழைக்க வேண்டியிருந்தது. இந்த அல்ப விஷயத்திற்கே இப்படி என்றால் நெடுந்தூரப் பயணத்திற்கு எத்தனை எத்தனை ஆயத்தங்கள், எத்தனை பாடுகள், உணவு, உடை, உளவுப் பிரிவு, வைத்தியம் இத்யாதி இத்யாதி. சிவகைங்கர்யம் என்ற உயரிய லட்சியமும் சில நல்லவர்களின் வல்லவர்களின் ஒத்துழைப்பும் அவனை வெற்றி பெற வைத்தன.

நெடுநாட்களாய் நெஞ்சில் நெருடிக் கொண்டிருக்கும் விஷயம். சுவைமிகுந்த நமது சரித்திரம் facts of figure ஆகப் பாடப் புத்தங்களில் வறண்டு கிடப்பதேன்? பாவம் குழந்தைகள் விஷயங்களை மனப்பாடம் செய்து கக்குகின்றன.

தஞ்சை பெரிய கோயிலை தரிசிக்க, அதை தரிசிப்பதின் மூலம் இராஜராஜனைத் தரிசிக்க நம் குடும்பம் முழுவதும் கெளரி, கணேஷ், ஆகாஷ், கமலா, கிருஷ்ணா, சாந்தா, சூர்யா, நீ, நான், லலிதா அனைவரும் தஞ்சை போனால் என்ன? நம் குடும்பம் மட்டுமல்ல; தமிழ்குடும்பம் ஒவ்வொன்றும் உடையார் நாவல் படித்ததும் தஞ்சை போகும். இராஜராஜனைத் தரிசிக்கும்.


சோழம்! சோழம்! சோழம்!

இப்படிக்கு
என்றும் அன்புடன்
ரவி
(சிந்தா ரவி )